Thursday, November 22, 2012

தீபாவளி ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

விமர்சனம் : துப்பாக்கி

விகடன் விமர்சனக் குழு
தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவத் 'துப்பாக்கி’!

 ராணுவ வீரனான விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வந்த வேளையில், ஒரு திருடனைப் பிடிப்பதற்கு பதில் தீவிரவாதியைப் பிடித்துவிடுகிறார். அவனிடம் இருந்து தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, தன் ராணுவ நண்பர்களைத் துணையாகக்கொண்டு 'ஸ்லீப்பர் செல்’நபர்களை ரகசியமாக வேட்டையாடுகிறார். மொத்த நெட்வொர்க்கையும் இயக்கும் 'மாஸ்டர் மைண்ட்’ வில்லன் தன் சகாக்களைக் கொன்ற ரகசியத் துப்பாக்கி யார் என்று தேடும் முயற்சியில், பலர் உயிர்இழக்கிறார்கள். விஜய் தன்னையே பணயமாகவைத்து வில்லனைச் சந்திக்கச் செல்வது டிக்டிக் திக்திக் க்ளைமாக்ஸ்!


தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகு, 'இப்படி ஒரு ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியமா?’ என்று முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கும் வரை அப்படியான சந்தேகமே எழாத வகையில் பரபர திரைக்கதையால் அசரடிக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம். 
'விஜய் மிலிட்டரியா?’ என்று சந்தேகத்தோடே அமர்ந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கேரக் டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்து இருக்கி றார் விஜய். நிதானமாகப் பேசிக்கொண்டேதீவிர வாதியின்கைவிரல்களைவெட்டும்போதும், சின்ன கத்தியை வைத்து மொத்தப் பேரையும் வீழ்த்தும்போதும் அனல் பட்டாசு. பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜயின் மேனரிசங்கள்!
காஜல்... செம ஜில். ஆனால், கவர்ச்சிப் பாடல்களுக்கு மட்டுமே அழகி டெடிகேடட்!


விஜய்க்குச் சவால் கொடுக்கும் செம க்ளெவர் ப்ளஸ் டெரர் வில்லனாக வரும் வித்யுத் ஜம்வால், தீர்க்கமான பார்வையிலேயே மிரட்டுகிறார்.


காமெடிக்கு என வலிந்து திணிக்கப்பட்ட ஜெயராமைவிடவும் அதிரிபுதிரி காமெடிசெய் கிறது சத்யனின் கதாபாத்திரம். தன் மேல் அதிகாரிகளுக்குக்கூடத் தெரிவிக்காமல், விஜய் சொல்வதை அப்படியே கேட்டு அவர் நடப்பது செம சீரியஸ் காமெடி!


என்னதான் 'ஸ்லீப்பிங் செல்’களுக்கு தங்கள் தலைவர் யார் என்று தெரிந்து இருக்காவிட்டாலும், தங்களுக்கு உத்தரவிடுபவர் யார் என்று தெரியும்தானே... ஆனால், அதைக்கூட கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல், அனைவரையும் சுட்டே சாகடிக்கிறார் விஜய்.


'கூகுள்... கூகுள்’ பாடலில் மட்டுமே ஈர்க்கிறது ஹாரிஸின் இசை. மும்பையின் அழுக்கு, அழகு இரண்டையும் ஃப்ரெஷ் லுக்கில் தருகிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.


பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் சிறுபான் மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று சித்திரிக்கும் பொது புத்தி உச்சத்துக்குச் சென்று இருக்கிறது 'துப்பாக்கி’யில். அதிலும் சிறுபான்மையினர் குடும்பங்களும்  பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது வேதனை.


லாஜிக் மேஜிக் பார்க்காவிட்டால், இந்த அளவு இம்ப்ரெஸ் செய்ய முடியும் என்றால், இப்படியான இன்னொரு விஜய் படத்துக்கு...

'வி ஆர் வெயிட்டிங்’!



விமர்சனம் : போடா போடி

விகடன் விமர்சனக் குழு
திருமணம் முடிந்த பின்னும் ஈகோ உரச, 'போடா...’, 'போடி’ என்று பிரியும் காதலர்களின் கதை!


 சில சந்திப்புகளிலேயே காதலிக்கத் தொடங்கும் சிம்பு, வரலட்சுமி (அறிமுகம்)  திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகான ஈகோ மோதல் இருவரையும் பிரிக்க, இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!


பார்த்துப் பழகிய பழைய கதை என்றாலும் நான்கைந்து  கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு, சின்னச் சின்னக் கலகல வசனங்களால் படத்தை ரசிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன். வரலட்சுமி சல்சா ஆடுவதைத் தடுக்க, சிம்பு அவரைக் கர்ப்பம் ஆக்குவது, அது தெரிந்து பிரிந்து செல்லும் வரலட்சுமிக்கே பின்னர் சிம்பு டான்ஸ் பார்ட்னர் ஆவது, குத்து டான்ஸுக்கும் சல்சாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிம்பு தடுமாறுவது ஆகியவை படத்தின் ரசனை அத்தியாயங்கள்.
டம் முழுக்கவே சிம்பு செம க்யூட். 'எப்பவாவது பொய் பேசறவளைப் பார்த்திருக்கேன். ஆனா, எப்பவும் பொய் மட்டுமே பேசுறவளை இப்போதான் பார்க்கறேன்’ என வரூவை வாரும் போதும், 'அவன் எங்கல்லாம் கை வைக்கிறான்... எனக்குப் பத்திட்டு வருது’ என்று எகிறும்போதும் அசத்துகிறார்.


 சிம்புவுக்கே வம்பு கொடுக்கும் கேரக்டரில் வரலட்சுமி அசத்தல் அறிமுகம். 'தொடுறப்பவே எனக்கு வித்தியாசம் தெரியும்!’  எனச் சதாய்ப்பதும் கோபத்தில் டாய்லெட்டில் வீசிய திருமண மோதிரத்தைப் பிறகு தேடி எடுக்கும்போதும் பொண்ணு நடிப்பில் ஓ.கே. (கரகரக் குரல்கூட கேட்கக் கேட்க வசீகரித்துவிடு கிறது). ஆனால், சிம்புவைவிட 'பல்க்’ ஆகத் தெரியுதே பொண்ணு!



படம் முழுக்க சிரிசிரி மேளா நடத்திஇருப்பவர் 'விடிவி’ கணேஷ். 'மங்களகரமா இருந்த என் வீட்டை இப்படி மகாபலி புரம் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி மாத்திட்டானே!’ எனப் புலம்புவதும், 'கல்யாணம் ஆகுற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க. கல்யாணம் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க’ என எக்ஸ்பிரஷன் வைத்துச் சொல்வதும், சிம்புவுக்கு டகால்டி ஐடியாக்கள் சொல்வதுமாகக் கரகரக் குரலால் கலகலக்கவைக்கிறார். 'இவ்ளோ விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகிலா படம் பார்த்துட்டு இருக்கியா?’ என்று கணேஷை சிம்பு போட்டுக்கொடுப்பதுமாக இருவருக்குமான காமெடி கெமிஸ்ட்ரி... பம்பர் லாட்டரி! 


ரசனை வசனங்கள், கலகல காமெடி தவிர படத்தில் வேறு என்ன பாஸ் இருக்கிறது? சிம்புவின் வசதிபற்றி எதுவும் விசாரிக்காமலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரூ, வருடம் முழுக்க டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டு இருக்கிறார். லண்டன் கலாசாரத்தில் 'ஃப்ரீக்கி’ ஆக வளர்ந்த சிம்பு, வரூவைக் கைபிடித்ததும் 'தமிழ் கலாசாரக் காவலன்’ அவதாரம் எடுத்து,  நமக்கு காதில் ரத்தம் வரும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருப்பது என்ன நியாயம்? அதிலும் முதல் பாதி முழுக்க சிம்புவும் வரூவும் பேசிக்கொண்டே இருக்கிறா... ஆவ்வ்வ்வ்! 


'போடா போடி..’ பாடலிலும் சல்சாநடனத்தின் போது ஒலிக்கும் பின்னணி இசையிலும் செம ஸ்கோர் செய்கிறது தரண்குமாரின் பின்னணி இசை.
சில செல்லச் சண்டைகள் ரசிக்கவைக்கும். 'போடா போடி’ அப்படி ஒரு சண்டை!





விமர்சனம் : அம்மாவின் கைப்பேசி

விகடன் விமர்சனக் குழு
பொறுப்பு இல்லாமல் திரிந்த கடைக்குட்டி மகன் சாந்தனுவிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று கைப்பேசி அழைப்பு வாயிலாக வரும் என்று காத்திருக்கும் அம்மா ரேவதி அம்மாளுக்கு இறுதியில் என்ன ஆகிறது என்பதே... அம்மாவின் கைப்பேசி!


 எட்டு சகோதர-சகோதரிகள், ஒரு அம்மா, சாந்தனு, இனியா, அவருடைய குடும்பத்தினர், தோல் தொழிற்சாலை பாய், குவாரி உரிமை யாளர், அவரது மேனேஜர், சிலபல வில்லன்கள், 'செம கவர்ச்சி’ மீனாள் என எக்கச்சக்க 'சிம் கார்டு’களை ஒரே கைப்பேசியில் திணித்துஇருக்கி றார் இயக்குநர் தங்கர்பச்சான்.


மேலே கதைச் சுருக்கத்திலும் சரி, கதைமாந்தர் களிலும் சரி.... 'நடிகர்’ தங்கர் கேரக்டரேவந்திருக் காதே... ஆனால், படம் முழுக்க 'பட்டையைக் கிளப்புவதில்’ சாந்தனுவை ஓரங்கட்டி தகர அடி அடித்து இருக்கிறார் தங்கர். 

இந்தக் கைப்பேசியில் கவர்ச்சிக் கரகாட்டம், வட நாட்டு அழகிகளின் குலுக்கல் குத்து, சாந்தனு - இனியா இதழ் பச்சக், மீனாளுடன் அத்துமீறிய நெருக்கம் எனக் கவர்ச்சிக்கு எனத் தனி மெமரி  கார்டே திணித்து இருக்கும்  தங்கர், அதில் உச்சகட்ட உலுக்கலாக தானே ஜட்டி குளியல் தரிசனம் தருகிறார்! 


கிராமத்து இளைஞனாக அள வாக நடித்து இருக்கும் சாந்தனு வைப் பற்றி, 'அவன் கோபக் காரன்ய்யா’ என்று ஆரம்பத்தில் ஏக பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், இறுதி வரை ஒரு காமா சோமா வில்லனிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிறார் அந்தக் கோபக்காரன்.  தலைப்பு முக்கியத் துவம்கொண்ட கேரக்டரில்பாசக் கார அம்மாவாக ரேவதி அம்மாள் எவ்வளவு நெகிழவைத்து இருக்க வேண் டும்... ம்ஹூம். இதழ் முத்தம் தவிர இனியாவைப் பற்றி நினைவுகூர எதுவுமே இல்லை.


'ரொம்ப நல்லவராக’ வரும் குவாரி உரிமையாளர் அழகம் பெருமாளின் கேரக்டர் செம காமெடி. அவரைப் போலவே அனைத்து குவாரிக்காரர்களும் இருந்துவிட்டால் போலீஸுக்கு வேலையே இல்லை. வேலைக்குச் சென்று புருஷ னைக் காப்பாற்றும் கேரக்டரில் மீனாள்கச்சிதம். ஆனால், படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தங்கருடன் 'இறுக்கி முறுக்கி நெருங்கும்’ காட்சி களில் மீனாளுக்கே 'அதிகப் பங்கு’. இதனால் அவருடைய பாத்திரமே 'வேறு தொனி’யில் மாறுகிறதே!


கருத்து இல்லாமல் தங்கர் படமா? 'சார்னு வெள்ளைக்காரன்தான் கூப்பிடுவான். அய்யான்னு தமிழனுங்க கூப்பிடணும்’ என்று வகுப்பு எடுப் பதில் தொடங்கி ஏராளமான கருத்துக் குத்துக்களும் உண்டு. கதை, திரைக்கதை, காட்சிப்படுத்திய விதம், பாடல்கள் அனைத்தும் படத்தின் பலவீனப் பட்டியலில் இடம் பிடிக்க, கிஷோரின் எடிட்டிங்கும், ரோஹித் குல்கர்னியின் இசையும் அதற்குத் துணை நிற்கின்றன.


அம்மாவின் கைப்பேசி - நாட்  ரீச்சபிள்!

விகடன் விமர்சனம் மார்க் : அம்மாவின் கைப்பேசி - 39 ,போடா போடி -42 ,துப்பாக்கி -44 , அட்ராசக்க - 40,41,42 


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p92.jpg


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p93.jpg


நன்றி -விகடன் 

0 comments: