Sunday, November 04, 2012

தனி மனித தாக்குதல் நான் செய்ததில்லை - ஜெயமோகன் மறுப்பு

நான் சொல்வது கருத்து ரீதியான தாக்குதல் மட்டுமே!

எஸ்.வி.ராஜதுரைக்கு ஜெயமோகன் விளக்கம்!
ழுத்தாளர் ஜெயமோகன் மீது ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது குறித்து கடந்த இதழில் எழுதி இருந்தோம். இந்த வழக்கு குறித்த தனது விளக்கத்தை எழுத்தாளர் ஜெயமோகன் நமக்கு அனுப்பி உள்ளார். அது... 



''எண்பதுகளில் திடீரென்று தமிழகத்தில் மிக வலுவான இந்திய அரசு எதிர்ப்பு வாதங்கள் எழுந்தன. காஷ்மீர் போல, பஞ்சாப் போல தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அவை. காந்தி, நேரு முதல் அம்பேத்கர் வரை எல்லாத் தேசியத் தலைவர்களையும் அவதூறு செய்து, இழிவுபடுத்தி எழுதும் போக்கு உருவானது. அதில் முதன்மையானவர் எஸ்.வி.ராஜதுரை.




 அவர் எழுதிய 'இந்து இந்தி இந்தியா’ முதலிய நூல்கள் அப்பட்டமான அவதூறு நூல்கள் என்பதை ஆய்வாளர்​கள் பலர் எழுதி​ விட்டனர். இளைய தலைமுறையினரிடம் தேசம் பற்றியும், இந்தியப் பண்பாடு பற்றியும் வெறுப்பை உருவாக்கக்கூடிய நூல்கள் அவை. அந்நூல்களுக்கு திட்டவட்டமான பதிலை நான் என் ’இன்றைய காந்தி’ முதலிய நூல்கள் வழியாக அளித்து வருகிறேன்.
இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.வி. ராஜதுரை, எண்பதுகளில் சட்டென்று இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை எழுதிக் குவிக்க அவர்பெறும் அன்னிய நிதியே  காரணம் என, அவரது முன்னாள் தோழர்களே அவர்களின் 'புதிய ஜனநாயகம்’ போன்ற இதழ்களில் குற்றம்சாட்டி மிகவிரிவாக எழுதி இருக்கிறார்கள். அவற்றை அவர் அப்போது மறுக்கவோ மானநஷ்ட வழக்குகள் போடவோ செய்யவில்லை.




கருத்துப் பிரசாரத்துக்கு பணம் அளிக்கும் 'ஃபோர்டு பவுண்டேஷன்’ என்ற அமைப்பு 'காலச்சுவடு’ போன்ற பல சிற்றிதழ்களுக்கு நிதி அளித்திருக்கிறது என்பதை ஃபோர்டு ஃபவுண்டேஷன் அமைப்பின் முன்னாள் ஊழியரான எம்.டி.முத்துக்குமாரசாமி  வெளிப்படுத்தினார். இந்தக் கருத்துக்களின் நிதிப் பின்னணியைக் கருத்தில்கொண்டுதான் இளைய தலைமுறை அக்கருத்துக்களை யோசிக்க வேண்டும் என்று நான் சொன்னேன்.



அதன் ஒரு பகுதியாக நான் ஏற்கெனவே அச்சில் வந்த, எஸ்.வி.ராஜதுரையே ஒப்புக்கொண்ட விஷயங்களை மட்டுமே சுட்டிக்காட்டினேன். ஈ.வே.ராமசாமி அவர்கள் பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலுக்கு அன்னியநிதி பெறும் ஒரு கிறித்தவ மதப் பரப்பு நிறுவனம் உதவி செய்திருப்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். அன்னியநிதி பெறும் கிளாட் ஆல்வாரிஸ் போன்றவர்களின் நிறுவனங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். அவற்றை அவரே அச்சில் சொல்லி இருக்கிறார். அவற்றையும் கருத்தில் கொண்டுதான் எஸ்.வி.ராஜதுரையின் தேசவிரோதக் கருத்துக்களையும் தேசியத் தலைவர்கள் மீதான அவதூறையும் பரிசீலிக்க வேண்டும் என்பதை முன்வைத்தேன்.



 நாத்திகராகிய ஈ.வே.ராவைப் பற்றி எழுத ஏன் ஒரு கிறித்தவ நிறுவனம் உதவ வேண்டும்? இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை எழுதும் ஒருவர் எந்த அன்னிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று கேட்க ஒரு வாசகனுக்கு உரிமை உண்டு. இதைத்தான் தனிப்பட்ட அவதூறு என எஸ்.வி.ராஜதுரை சொல்கிறார்.



நான் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்கக்கூடியவன் அல்ல. 'விடியல்’  சிவா பெயரில் என்னை மிகவும் தனிப்பட்ட முறையில் தாக்கியும் சாபமிட்டும் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் நோயுற்று மரணப்படுக்கையில் கிடந்த சிவாவால் எழுதப்படவில்லை என்றும் எஸ்.வி.ராஜதுரையாலேயே எழுதப்பட்டது என்றும், சிவாவின் உயிர் நண்பரும் இடதுசாரி இயக்கத் தோழருமான ஈழ எழுத்தாளர் ஒருவர் இணையத்தளத்தில் எழுதியபோது அறிந்தேன்.




இத்தகைய செயலை எஸ்.வி.ராஜதுரை செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கருத்துலக விவாதத்தில் இதைப் பொருட்படுத்தலாகாது என நினைத்து விட்டுவிட்டேன். இப்போது, எஸ்.வி. ராஜதுரை நீதிமன்றம் சென்றிருப்பதால், நானும் அவர் மீது இவ்விஷயமாக மானநஷ்ட வழக்கு தொடுத் திருக்கிறேன். நான் சொன்னது ஒரு கருத்துலக மறு தரப்பு. எஸ்.வி.ராஜதுரை செய்திருப்பதுதான் முழுக்க முழுக்க தனிநபர் மீதான உளவியல் தாக்குதல், அவதூறு'' - என்கிறார் ஜெயமோகன்




ஜெயமோகன் தனது விளக்கத்தில் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.வி. ராஜதுரை யிடம் விளக்கம் கேட்டோம். ''அம்பேத்கர் பற்றி நான் மட்டமாக எழுதினேன் என்று இவர் சொல்வது சகிக்க முடியாத குற்றச்சாட்டு. நான் அம்பேத்கரைப் பெரிதாக மதிப்பவன். காந்தி, நேருவை விமர்சிக்க இந்த ராஜதுரை உள்ளிட்ட எந்த ஒரு சாதாரண குடிமகனுக்கும் உரிமை உண்டு. காந்தியையும் நேருவையும் விமர்சித்தால் அது இந்தியாவையே விமர்சித்தது ஆகாது. எனது விமர் சனத்துக்கு எதிர்விமர்சனம் வைக்க நினைத்தால் காந்தியையும் நேருவையும் காக்கும் வகையில்தான் கருத்துக்களை இடவேண்டுமே தவிர, ராஜதுரையின் மீது தனிமனிதத் தாக்குதலை ஜெயமோகன் செய்வது ஏன்? 




ஜெயமோகன் எழுதும் விஷயங்களில் எனக்கு முரண் இருந்தால் அவரது கருத்துகளுக்குத்தான் விமர்சனம் தெரிவிப்பேனே தவிர, அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் வைக்க மாட்டேன். காஷ்மீர், பஞ்சாப் போல தமிழகத்திலும் கிளர்ச்சி எழ வேண் டும் என்ற ரீதியில் நான் எழுதவில்லை. அதே​போல் எனது, 'இந்து இந்தி இந்தியா’ போன்ற நூல்களெல்லாம் அப்பட்டமான அவதூறு நூல்கள் என ஆய்வாளர்கள் பலர் எழுதியிருக்கிறார்களாமே... யார் அந்த ஆய்வாளர்கள் என்றும் ஜெயமோகன் சொல்லட்டும்.




என் நிதி பின்னணியை ஒரு நிறுவனம் அமைக்கிறது என்று குற்றம் சாட்டும் ஜெயமோகனுக்கான எனது சவால்கள்... நான் வாங்கிய பணம் எவ்வளவு என்பதை நிரூபிக்க வேண்டும். அந்த நிறுவனம் கிறிஸ்தவ மதக் கருத்துக்களைப் பரப்பும் நிறுவனம் என்பதையும், இந்திய தேசத்தைக் குலைக்கும் நிறுவனம் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.




அடுத்தும் ஓர் அடுக்க முடியாத குற்றச்சாட்டு, விடியல் சிவாவின் பெயரில் ஜெயமோகனைத் தனிப்பட்ட முறையில் தாக்கி நான் கடிதம் எழுதினே ​னாம். இப்படி ஒரு தகவலை இணையத்தில் எழுதிய ஈழ எழுத்தாளர் யார் என்பதையும் ஜெயமோகன் தெரிவிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு விளக்கத்தை வைக்க நினைக்கிறேன். சிவாவின் இமெயில் ஐ.டி-யில் இருந்து அந்தக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. நான் எப்படி அவரது ஐ.டி-யில் இருந்து அனுப்ப முடியும்?



 இறந்துபோன ஒருவரை மையமாக வைத்து புதுக்கதை தீட்டுவது ஈனத்தனமான செயல். ஜெயமோகன் என் மீது மானநஷ்ட வழக்குத் தொடுத்திருந்தால், அதை சட்டரீதியாக சந்திக்க நான் திறனாக உள்ளேன். அதேநேரத்தில், என் மீது அவர் வைத்த தனிமனிதத் தாக்குதல் தொடர்பாக நான் தொடுத்திருக்கும் வழக்குக்காக நீதிமன்றம் வந்து ஆஜராகிப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது'' என்றார் அழுத்தம்திருத்தமாக.



- நீதிமன்றம் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்​கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி - ஜூ வி 

டிஸ்கி - ஜூ வி வழக்கு பாயுதே வாழ்த்துகள் டூ ஜெமோ

1 comments:

ராஜ நடராஜன் said...

எஸ்.வி.ராஜதுரையின் நீண்ட கருத்தை ஆதவன் தீட்சண்யாவின் தளத்தில் வாசிக்க நேர்ந்தது.ஜெயமோகன் சொன்னதாக இங்கேயும் தேட நேர்ந்தது.

எஸ்.வி.ராஜதுரையின் பக்கம் நியாயம் சாட்சி சொல்வதாக நினைக்கின்றேன்.