ஜெயமோகன் மீது வழக்கு ஏன்?
இரண்டு எழுத்தாளர்கள் மத்தியிலான மோதல் இப்போது நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தொட்டுள்ளது.
சமூக அக்கறையோடு பெரியாரியம், மார்க்சியச் சித்தாந்தங்களைப் பேசியும்
எழுதியும் வரும் வெகு சிலரில் எஸ்.வி.ராஜதுரை முக்கியமானவர். அவரது
60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உலகளாவிய அரசியல், பொருளாதாரம், இலக்கியச்
சிந்தனைகளை தமிழில் விதைத்தவை. இவர், எழுத்தாளர் ஜெயமோகன் மீது மானநஷ்ட
வழக்கு தொடுக்க, இலக்கிய வெளியில் அதிர்வலைகள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்
ராஜதுரை. அவரது சார்பில் வழக்கு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர்
கே.விஜயன், இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''தனித்த
எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராமல் சுதந்திரமான சிந்தனையாளராக
விளங்கும் எஸ்.வி. ராஜதுரை, தன்னை 'சர்வ தேசியவாதி’யாகவே அடையாளம்
காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறார்.
முழு மனிதஇனத்தின் நலனுக்கும் சார்பான
ஒரு மனிதனாக தன்னை வெளிப்படுத்த விரும்பும் இவர் மீது வலைதளத்தில் பொய்களை
அள்ளித் தெளிக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். பெரியார், அம்பேத்கர் போன்ற
மாமனிதர்களை இழிவுபடுத்தி எழுதுவதன் மூலம் தனது இருப்பை
உறுதிபடுத்திக்கொள்வதே ஜெயமோகனின் வழக்கம். கடந்த ஜூன் 20-ம் தேதி ஜெயமோகன்
தனது வலைதளத்தில், 'காலச்சுவடு இதழுக்கு வழங்கப்பட்ட மூல நிதியானது
ஃபோர்டு ஃபவுண்டேஷன் அளித்ததே என்று, அந்த ஃபவுண்டேஷனின் முக்கிய நபரான
முத்துக்குமாரசாமியே கூறியுள்ளார்.
காலச்சுவடும், க்ரியாவும்,
எஸ்.வி.ராஜதுரையும், இப்படிப் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்குக்
கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும்
கருத்துகளுக்கு இவ்வளவு பண மதிப்பா என நாம் வியப்போம். அடுத்த முறை கொஞ்சம்
கவனமாகவே புத்தகங்களைப் புரட்டுவோம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மம்
காட்டி எழுதி உள்ளார்.
மூன்று நாட்கள் கழித்து 'விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி
நிறுவனங்கள் வாயிலாகவே இந்த நிதியுதவிகள் பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன.
முத்துக்குமாரசாமிபோல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதுதான் இந்த
உண்மைகள் எல்லாம் நமக்குத் தெரிகிறது, இல்லையேல் இதெல்லாம் வெளியே வர
வாய்ப்பே இல்லை’ என்று தொடர்ந்து தனது சாடலையும் கேலியையும் வலியுறுத்தி
உள்ளார்.
ஒரு புத்தகத்தின் உருவாக்கத்துக்குப் பல நிலைகளில் ஊக்கமாகவும்
உதவியாகவும் இருந்தவர்களை நன்றியோடு அந்தப் புத்தகத்தில் நினைவுகூர்வதுதான்
இலக்கியப் பண்பாடு. ராஜதுரையின் 'பெரியார்- சுயமரியாதை சமதர்மம்’ என்ற
நூலில் இப்படி நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதையே ஓர் ஆதாரமாக்கி,
மேலும்மேலும் அவதூறு செய்திருக்கிறார் ஜெயமோகன்.
மேலும், அதேமாதம் 24-ம் தேதி தனது வலைதளப்பதிவில் 'ராஜதுரையின் நிதி
ஆதாரங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே
எழுதுகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் ஆய்வு இருக்கையில்
கௌரவப் பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின்
நிதிஆதாரம் என்ன? என்ற கோணத்திலும் ஆராய்கிறேன்’ என்று விடாது வசை மழையைப்
பொழிந்திருக்கிறார். ஜெயமோகனின் ஆதாரமற்ற கருத்துகளுக்கு விடியல்
பதிப்பகத்தின் சிவா எதிர் விமர்சனம் தெரிவித்தார். 'ஆர்.எஸ்.எஸ்., சங்
பரிவார் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள்.
ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த அமைப்புகள் எத்தனை
அன்னியநிதியில் திளைக்கின்றன என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்ததுண்டா?
உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூட பார்க்கக் கூடாது’ என்று பதிவு
செய்திருக்கிறார். ராஜதுரையோடு இணைந்து செயல்படும் எழுத்தாளர் வ.கீதா
குறித்தும் தவறான பேச்சுகளை உதிர்த்திருக்கிறார்.
'வ.கீதா நடத்தி வரும் தன்னார்வக் குழு பற்றி ஒரு முழுமையான பொது விவாதம்
தமிழில் தேவையாகிறது. நம் அறிவுஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும்
இடையேயான உறவுகள் பற்றி வெளிப்படையான பேச்சு உருவாக வேண்டும்’ என்று
குறிப்பிட்டு உள்ளார். ஜெயமோகனின் இந்தப் பொய்யுரைகள் ராஜதுரையின் மனதை
வெகுவாகக் காயப்படுத்தி இருக்கின்றன. அவர் நலம் நாடுவோர் வருத்தத்துடன்
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை.
மனிதநேயப் பணிகளுக்காகப்
போராடும் ராஜதுரை போன்றோரைச் சீண்டி, அதன்மூலம் பெரிய ஆளாக நினைக்கும்
ஜெயமோகன் போன்றவர்களுக்குச் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை
இந்த வழக்கின் தீர்ப்பு வாயிலாக உலகுக்கு உணர்த்திட வேண்டும்'' என்றார்.
கோத்தகிரியில் வசித்துவரும் எஸ்.வி. ராஜதுரையைச் சந்தித்தோம். ''ஏன்
இவ்வளவு மோசமாக, அடிப்படை ஆதாரங்கள் துளியும் இன்றி, பொய்யுரைகளால் என்னை
ஜெயமோகன் விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. தொடக்கத்தில் நான் ஜெயமோகன்
பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால், பொறுமை காக்கக் காக்க, மிக
அதிகப்படியான வன்மையோடு தாக்க ஆரம்பித்து விட்டார். என்னைப் பற்றி
அறிந்திருக்கும் நபர்கள் எனக்கு ஆதரவாக அவரிடம் பேசியிருப்பார்கள்போல.
உடனே, தமிழ் அமைப்புகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி அவரை மிரட்டச் சொன்னேன்
என்று கயிறு திரிக்கிறார். இதயநோய்க்காகத் தொடர்அறுவை சிகிச்சைகளை செய்து
மிகதளர்ந்த உடல்நிலையோடு என் வாழ்க்கையைக் கழித்து வருகிறேன். மருத்துவச்
செலவுகளை எவ்வளவு கடினமான சூழலில் நானும் என் துணைவி யும் எதிர்கொண்டு
வருகிறோம் என்று எங்களை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.
தொடர்ந்து பலமுறை, ஜெயமோகனை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தும்,
அவர் பேசுவதற்குத் தயாராக இல்லை. எஸ்.எம்.எஸ். மூலமும் விவரம்
தெரிவித்தோம். பதில் இல்லை. அவர் விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத்
தயாராகவே இருக்கிறோம்.
இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 16-ம் தேதி நேரில் ஆஜராகும்படி
ஜெயமோகனுக்கு ஊட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எழுத்தாளர்களுக்குள் விமர்சன மோதல் இருக்கலாம்... ஆனால் அது, தனி
மனித தாக்குதலாக இருக்கலாமா?
நன்றி - ஜூ வி & ஆல்சோ வழக்கு பாயும் ஜெய மோகன் சார்
1 comments:
ஆஹா..... எல்லோரும் கேஸு கேஸ் என்று மார்க்கமாத்தான் அலையிறாங்கய்யா :))
Post a Comment