சின்மயி VS கீச்சர்கள்! (ட்வீட் தமிழர்கள்)
க.ராஜீவ்காந்தி
பிரச்னைகளுக்கு சின்மயியின் ட்வீட்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பிரபல ட்வீட்டர்கள் 'ராஜன்லீக்ஸ்’ ராஜன், 'தோட்டா’ ஜெகன், 'ஃப்ரீயாவிடு’ டேவிட். ராஜனிடம் பேசினேன்...
''2011 ஜனவரி மாசம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இணைய எழுத்தாளர்கள் ஓர் இயக்கம் ஆரம்பிச்சோம். அதில் இணையச் சொல்லி சின்மயியிடம் கேட்டோம். மறுத்துட்டாங்க. அது வரைக்கும் அவங்க உரிமை. ஆனா, 'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா?’னு ட்வீட் பண்ணாங்க. கோபத்தில் நாங்க சின்மயியை விமர்சிச்சு ட்வீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பிரச்னை. தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை சின்மயி போஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்க.
இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில், 'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்’னு எழுதினாங்க. இப்படி அதிகப்பிரசங்கித்தனமா அவங்க போடுற ட்வீட்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டே இருப்போம். அது அவங்களுக்குப் பிடிக்கலை. தமிழ்நாட்டின் பிரபல பதிவர்கள் பட்டியலில் அவங்களுக்கு அடுத்து என் பேர் இருந்தது அவங்களை எரிச்சல்படுத்தி இருக்கு.
அதைப் பத்தியும் தப்புத் தப்பா ட்வீட் பண்ணிஇருந்தாங்க. இது எல்லாம் சேர்ந்துதான் இப்போ போலீஸ் புகார் வரை போயிருக்கு. இத்தனைக்கும் சின்மயியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் இருந்த பலரைப் பற்றியும் புகார் சொல்லி இருக்காங்க சின்மயி. இணையவெளி ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். அந்தத் தைரியத்தில் சிலர் சின்மயியை பெர்சனலாப் பேசியிருக்கலாம். ஆனா, அதுக்காக ஏதோ சின்மயி தப்பே பண்ணாத மாதிரி பேசுறது நியாயம் இல்லை. பிடிக்காதவங்களை, தன்னைப் பத்தித் தப்பாப் பேசுறவங்களைத் தன் அக்கவுன்ட்டில் பிளாக் பண்ணியிருக்கலாம். பிரச்னையே இருந் திருக்காது!'' என்றார்.
சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொடர்புச் சட்டம் 66ஏ பிரிவின் கீழ் ராஜனைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக தமிழகத்தில் முதல்முறையாகக் கைது செய்யப் பட்டு இருக்கும் நபர் ராஜன்தான்.
சின்மயியிடம் பேசினேன், ''இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச விரும்பலை. நான் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்னு என் அம்மாகிட்ட கேட்டுக்கங்க!'' என்று ஒதுங்கிக்கொண்டார்.
சின்மயியின் தாயார் பத்மஹாசினி பேசினார். ''ஃபேஸ்புக், ட்விட்டர்ல என் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுறது இன்னைக்கு நேத்து இல்லை. பல வருஷமாவே இருக்கு. எத்தனை நாள்தான் நாங்களும் பொறுமையா இருக்கிறது? என் பொண்ணைத் தப்பாப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் என்னையும் தப்பாப் பேசி... ரொம்ப தனிப்பட்ட தாக்குதலா இருந்ததுனாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தா சின்மயி.
'ஜெயலலிதாவையே கேள்வி கேக்குறோம். நீ என்னடி பெரிய இவளா?’னு கேட்டா, எங்களால் என்ன சொல்ல முடியும்? மீனவர் பிரச்னையோ, இட ஒதுக்கீட்டுப் பிரச்னையோ ஒவ்வொருத்தருக்கும் தன் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல உரிமை இல்லையா? இதே சின்மயிதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டிச்சும் ட்வீட் பண்ணியிருந்தா. அதுக்கு, 'நாங்க குழந்தைகளை ரேப் பண்ணினா உனக்கு என்னடி?’னு ட்வீட் போடுறாங்க. இளையராஜா ரசிகர்கள்லாம் சேர்ந்துக்கிட்டு, 'நீ ரஹ்மான் குரூப்தானே’னு திட்டித் திட்டி ட்வீட் போடுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?
முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதைகூடக் கொடுக்காம ஜெயலலிதாவை ரொம்ப மோசமா விமர்சிக்கிறாங்க. கனிமொழி, குஷ்பு, நயன்தாரானு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ஆபாசமா விமர்சிச்சு எழுதுறாங்க. இப்ப இந்த வரிசையில சின்மயி. த்ரிஷா ஒரு நாயைத் தத்தெடுக்கப் போறேன்னு எழுதினா, அதுக்கு உடனே, டபுள் மீனிங்ல கமென்ட் பண்றாங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரோட பிரா சைஸ் என்ன இருக்கும்னு விவாதிச்சுட்டு இருக்காங்க. பெண்கள் மீதான வக்கிரத்தை வெளிப்படுத்தத்தான் இவங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுதா? சின்மயி, சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப் பெருமை பேசுற, 'இந்த சாதிக்காரன்’னு சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்களை எல்லாம் ஏன் இவங்க தட்டிக் கேட்கலை?
ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோதலைவர் களைத் திட்டிட்டா போதுமா? அது தமிழர் களுக்காகப் பாடுபட்டோம்னு அர்த்தம் ஆகிடுமா? ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும், வீட்ல கரன்ட் இருக்கிற வரைக்கும் ட்வீட் பண்ணிட்டு, அப்புறம் சொந்த வேலைகளைப் பார்க்கப் போறவங்கள்லாம், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீதியில் இறங்கிப் போராட லாம்ல. இதோ... சோஷியல் நெட் வொர்க்கிங் சைட்களில் பெண்கள் மீது அவதூறு பரப்புறவங்களை எதிர்த்து என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டா. நீங்களும் அப்படி வாங்களேன் பார்ப்போம்!'' என்றார் கோபமும் வேகமுமாக!
பின்குறிப்பு: இதழ் அச்சுக்குச் செல்லும் சமயம் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுகள் துவங்கிவிட்டதாகத் தகவல்!
நன்றி - விகடன்
2 comments:
ராஜன் தரப்பிடம் நியாயம் இல்லை. சின்மயி செய்தது சரி.
குரங்குக்கு புண் வந்தால் அதை நோன்டி நோன்டி அதை ஆற விடாமல் செய்து அதாலே செத்துபோகுமாம்.
Post a Comment