Sunday, October 07, 2012

புலிக்கலைஞன் – அசோகமித்திரன்- சிறுகதை

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.



வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.



எனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு, அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.



”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.



சிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.



”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார்.
”சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க” என்று அவன் சொன்னான்.
”சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே?” என்று சர்மா சொன்னார்.
”காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க”
”ஓ, நீயா? வேலாயுதமில்லை?”
”இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்”
”நீ வந்திருந்தயா?”
ஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு”
”யாரு வெள்ளை?”
”வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை.”
இப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.



”இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா?” என்று சர்மா சொன்னார்.
”தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.”
”யாரு சொன்னாரு”
”அதாங்க, வெள்ளை சாரு”
சர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.



”நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்” என்று சர்மா சொன்னார். 


நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.

2 comments:

தமிழ் பையன் said...

பாதியில் முடிஞ்சு போச்சே..

Jegadeesh Kumar said...

this story is indeed incompletely published.

please refer azhiyasudargal for the whole story.