இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான
போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில்
பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல்
தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக
ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.
அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய
நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை
முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம்
குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த
எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது
ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள
சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.
அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.
இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த
கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய
நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா
மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு
இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும்
பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.
அந்த திட்டத்தின் முழுமையான இறுதி
வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான்
முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த
நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா
அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய
கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற
சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த
அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல்
கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம்.
அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை
ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும்
பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு
வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச
சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை
இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த
யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட
விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன்
இருந்திருப்பார்கள்.
ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு
செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன்
பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி
நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு
அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே
சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று
எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?
அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை.
ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள்
மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும்
இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன்
பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின்
பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம்.
அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால்
இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே
எங்களுக்கு தோன்றியது.
இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?
அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ,
அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம்
இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள்,
ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல்
கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு
வேறு வழி இருந்திருக்காது.
அப்படியானால், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில்
பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு
விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?
போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது
என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில்
முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு
என்றே நான் நினைக்கிறேன்.
அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு
நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக
வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது
என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக
துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு
பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து
தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான
சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?
விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில்
கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள்
இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில்
ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை
காணப்பட்டது.
நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?
இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10
ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும்
முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த
திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு
எந்தவித சந்தேகமும் இல்லை.
இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?
2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள்,
கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும்
அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில்
வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால்
இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.
THANX - B B C
2 comments:
தேன்கூட்டில் கல் வீசிய கதையாகிவிடும்! பீ கேர் ஃபுல்!
ithu etruk kolla mudiyaathathu. pirabakaran eppadi ethiriyidam saranadaivarr?? porittu saavarae thavira ethiriyidam mandiyidamaattar
Post a Comment