எம்.கே.கதிர்வேலன், திருத்துறைப்பூண்டி.
1. ''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்?''
''ம்க்க்கும்... ஆச... தோச... அப்பளம்... வட!
நான் எழுதி யாராவது சுட்டுட்டா அப்புறம் வெல்லம் திங்கறது ஒருத்தன், விரல் சூப்பறது இன்னொருத்தன் கதை ஆயிடும்!''
இசக்கிமுத்து, திருநெல்வேலி.
2. ''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்?''
''ஒருத்தர்கூட இல்லைனு தைரியமா காலரைத் தூக்கிவிட்டுக்கிறேன்!''
கு.கிருஷ்ணமூர்த்தி, கம்பம்.
3. ''உங்க பார்வையில் திரைக்கதையைப் பொறுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களை வரிசைப்படுத்துங்க?''
''கஷ்டமான விஷயம், வெறும் பத்துங்கறது... சரி உங்களுக்காக...
1.நாடோடி மன்னன்
2.அடுத்த வீட்டுப் பெண்
3.தில்லானா மோகனாம்பாள்
4.
கல்யாணப் பரிசு
5.அவள் ஒரு தொடர்கதை
6. 16 வயதி னிலே
7.முள்ளும் மலரும்
8.ஆட்டோகிராஃப்
9.காதல்
10.சுப்ரமணியபுரம்.
இன்னும் நிறையச் சொல்ல முடியாதது வருத்தமா இருக்கு!''
விடியல் ராஜன், மதுரை-3.
'4. 'இயக்குநர் ஆகணும்னு வந்த பாக்யராஜ் எப்படி நடிகர் ஆனார்?''
''நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் - இது விவேகானந்தரின்
உபதேசம். ஆனா, கலைத் துறையை நோக்கி வர்றவங்களுக்கு அது பொருந்தாது.
பத்திரிகையில் வேலை பார்க்க வந்து, சினிமாவுல பாடலாசிரியராகி 'கவியரசு’னு
பேர் வாங்கினார் கண்ணதாசன். நடிக்க ஆசைப்பட்டு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன்
சார் மெல்லிசை மன்னர்னு பேர் வாங்கினார்.
நடிப்பு ஆசையோட வந்த ஷங்கர்,
இயக்குநர் ஆனார். அப்பாவின் நடன இயக்கத்தைப் பார்க்க வந்த பிரபுதேவா
நடிகர், இயக்குநர்னு எல்லாமுமா ஆகிட்டார். ஆக நம்ம கதையும் அதேதான். நடிக்க
நினைச்சு வந்து, வேண்டாம்னு உதவி இயக்குநர் ஆகி, அப்புறம் மறுபடியும்
வசனகர்த்தா, கதாசிரியர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர்,
பத்திரிகையாளர்னு சங்கிலித் தொடரா நீண்டிருச்சு. ஆனா, இதுல ஒரு விஷயம்...
சினிமாவை ஆத்மார்த்தமா ரசிச்சு வர்றவங்க அதுல டீ, காபி கொடுக்கிற வேலைக்கு
வந்தாலும் ஜொலிக்க முடியும். அது தான் சினிமாவின் புதிர்.''
மே.நாகராஜன், மன்னார்குடி.
5. ''இயக்குநர் பாக்யராஜ் எப்ப ரிட்டர்ன்?''
''2012 - கேது புத்தி முடிஞ்சி இப்ப சுக்ரபுத்தி ஸ்டார்ட் ஆகிடுச்சி. 2 0
1 3=6. என் பிறந்த தேதி 7-1-1951.7 1 1 9 5 1=24-2 4=6. ஆக, என்
தன்னம்பிக்கை பழையபடி தெம்பாவே இருக்கு. ஜாதகப்படியும் அந்தந்த வீட்ல அது
அது வந்து உட்கார்ந்து 2013-ல மக்கள் உங்க எல்லார் வீட்டுக்குள்ளயும்
பழையபடி நான் குடியேறி குஷிப்படுத்தப்போறேன்.''
பவளநாதன், திருச்சி-2.
6. ''உங்கள் நண்பர் கவுண்டமணி ஏன் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கார்?''
''முன்னணித் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமில்ல... முன்னணி ஹீரோக்களுக்கே
அவர் தேதி அவ்ளோ டிமாண்டா இருந்தது ஒரு காலம். இப்ப ஒரு சின்ன கேப்
எடுத்துருக்காருனு நெனைக்கிறேன். 'கேப்’தான். தொடர்வார். தொடரணும்!''
எம்.செல்வகுமார், சென்னை.
7. '' '16 வயதினிலே’ படத்தை இப்ப எடுத்தா, சப்பாணி, மயிலு, பரட்டை கேரக்டர்களுக்கு யார் யார் பொருந்துவாங்க?''
''உங்க ஆசை - ஆதங்கம் எனக்குப் புரியாம இல்லை. ஆனா, அதுல அவ்வளவு
லயிச்சு வேலை பார்த்தவன் நான். அந்த மூணு கேரக்டர்லயுமே நடிச்சவங்க
அதுக்குப் பிறகு அவ்வளவு பிரமாதமா ஷைன் பண்ணி சினிமாவில் இன்னும்
கோலோச்சிட்டு இருக்காங்க. அதனால என்னால வேற யாரையும் மாத்தி யோசிக்க
முடியலை!''
தா.மலர், திருச்சி-2.
8. ''நீங்க எடுத்த காட்சிகளில் உங்கள் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கும் காட்சி எது?''
''நிறையச் சொல்லலாம்... 'ஒரு கை ஓசை’ படத்துல பேச்சு வந்தும் ஊமையாவே
இருந்துடுறது. 'மௌன கீதங்கள்’ படத்துல சினிமா, ஹோட்டல்னு போயிட்டு வந்த
பின்னால என்கிட்ட சரிதா 'நான் 'மூணு’ நாள் லீவு’ன்னதும் நான் சண்டை போட்டு
பிரளயம் பண்றது. 'அந்த 7 நாட்கள்’ க்ளைமாக்ஸ்ல, 'என்ட காதலி உங்களுக்கு
மனைவியாயிட்டு வரலாம். பச்சே... உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது!’னு
சொல்ற டயலாக், 'முந்தானை முடிச்சு’ல பொய் சத்தியம் பண்ணி ஊர்வசி
குழந்தையைத் தாண்டுறது... 'தாவணிக் கனவுகள்’ படத்துல தியேட்டர்ல
தங்கச்சிகளுக்காகக் காசு போட்டுட்டே இருந்துட்டு பிறகு நானே மறந்து, என்
தங்கச்சியே காசு போடச் சொல்றது... அது கெடக்குங்க ஒரு வண்டி நிறைய!''
எம்.எஸ்.சேகர், தஞ்சாவூர்-3.
9. ''அப்போ மேட்னி
ஷோவுக்குப் பெண்கள் கூட்டத்தை அலைபாய வைத்த, பெண்களின் மனம் கவர்ந்த
இயக்குநர் நீங்க... இப்ப யாரை அப்படிச் சொல்வீங்க?''
''சேரன், வசந்த பாலன், பிரபு சாலமன், சுசீந்திரன். இன்னும் கமர்ஷியல்
ஹீரோ இல்லாமப் படம் எடுக்கும் நிறையப் பேர் பெண்கள் விரும்புற மாதிரி
இருக்கணும்னுதான் முயற்சி பண்றாங்க.''
வி.மருதவாணன், தஞ்சாவூர்.
10. ''உங்களால் மறக்க முடியாத பாராட்டு?''
''என் கதை 'ஒரு கைதியின் டைரி’யை - இந்தியில் 'ஆக்ரி ராஸ்தா’னு அமிதாப்
பச்சன் அவர்களை வெச்சு நான் டைரக்ட் பண்ணேன். அதுல ஒரு கல்லறை சீன் வரும்.
முன் பகுதி கதைல மனைவி புருஷனுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்திருப்பா.
அப்ப கர்ப்பமா இருக்குற மனைவி 'நாளைக்கு என் பையன் வந்து இங்கிலீஷ்ல பிச்சு
உதறப்போறான். ஆனா, உங்களால அவனுக்கு ஈடு கொடுத்துப் பேச முடியாதுனு
கிண்டல் பண்ண, கர்ப்பஸ்திரீ வயித்தைத் தொட்டு அப்பா அமிதாப் பச்சன், 'No No No... I can talk English... Walk English... Come on, Come out My son... Let us see’னு
தமாஷா சேலஞ்ச் பண்ணுவார்.
பின்னால் கதையில் அப்பா வுக்கு மகனைத்
தெரியும்... மகனுக்கு அப்பாவைத் தெரியாது. கல்லறையில் தன் மனைவிக்கு
மெழுகுவத்தி ஏற்றி அப்பா அமிதாப் பிரார்த்தனை பண்ணிட்டு இருப்பார். அப்போ
போலீஸா இருக்குற மகன் அங்கே ஒரு குற்றவாளியோட வந்து, 'எந்தக் கல்லறையில்
ஒளிச்சு வெச்சிருக்க.. காட்டு... 'Come on Show me’னு ஆங்கிலத்தில் அதட்ட,
அதைக் கவனிக்கும் அமிதாப் தன் மனைவியிடம், 'நீ சொன்ன நேரம் வந்துருச்சு.
என் மகனுடன் நான் இங்கிலீஷ்லயே சண்டை போடுறேன் பார்’னு சொல்லிட்டு வருவார்.
மகன்கிட்ட வந்து இங்கிலீஷ்லயே பேசுவார். 'உன்னைக் கேள்வி கேட்க ஆள்
இல்லைனு நினைச்சியா? கல்லறை யில் பக்கத்தில் இறுதிச் சடங்கு
பிரார்த்தனையில் உள்ளவர்களைப் பத்திக் கவலையே இல்லாம கத்திட்டு இருக்க’னு
சத்தம் போடுவார்.
அவர் தன் அப்பானு தெரியாத மகனும் பதிலுக்கு வாக்குவாதம்
செய்வான். இது 150 அடிக்கு மேல ஆங்கிலத்திலேயே வசனம் பேச வேண்டிய காட்சி.
ஆனா, அமிதாப் இங்கிலீஷ்ல பேச மறுத்து, 'பளிச் வசனங்கள் மூலமா எனக்கு இமேஜ்
பில்ட்-அப் கொடுத்த எழுத்தாளர்கள் சலீம் ஜாவேத் கதையில்கூட நான் நாலு
வரிக்கு மேல இங்கிலீஷ் பேசினதுஇல்லை. இந்தி ரசிகர்களுக்கும் அந்த அளவு
ஆங்கிலம் புரியாது. ரசிக்கவும் மாட்டாங்க. அதனால இவ்ளோ நீளமா இங்கிலீஷ்
பேசுற மாதிரி சீன் வேண்டாம்’னு சொன்னார்.
'அமிதாப்ஜி...
இந்த சீனுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை.
புரியலைன்னாலும் அப்பா மகனை அதட்டி இங்கிலீஷ்ல பேசுறார்ங்கிற அந்த
மூடுக்கே, ரசிகர்கள் ரசிச்சுக் கை தட்டுவாங்கனு சொன்னேன். ரொம்ப நேரம்
சமாதானப்படுத்திய பிறகுதான் அமிதாப்ஜி, 'சரி... நீங்க டைரக்டர்... உங்க
முடிவை நான் ஏத்துக்கிறேன்’ என்றார். படம் ரிலீஸ் ஆச்சு. பாம்பேயில்
இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு போன் வந்தது. லைன்ல அமிதாப். 'சார்... நீங்க
சொன்னது நூறு பெர்சன்ட் சரி... இங்கிலீஷ் தெரியாத என் டிரைவர், சமையல்
காரங்கலாம் முன் வரிசைல உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தாங்க. அந்தக்
கல்லறை சீனுக்கு அவங்கதான் முதல்ல கை தட்டி உற்சாகமானாங்க.
அஸ் எ கேப்டன்
ஆஃப் த ஷிப், யுவர் ஜட்ஜ்மென்ட் இஸ் கரெக்ட். என் கேரியர்ல இதுக்கு
முன்னாடி எப்பவும் 'அமிதாப் படம் சூப்பர்’னு சொல்லித்தான் கேட்டுருக்கேன்.
ஆனா, இப்போ என் மனைவி ஜெயா, படம் பார்த்துட்டு, 'ஸாரி... இது அமிதாப் படம்
இல்லை. இது டைரக்டர் பாக்யராஜ் படம்னு சொன்னாங்க’னு விடாமப் பேசிட்டே
இருந்தார்.
அப்புறம் ஒரு நாள் ரைட்டர் ஜாவேத்தைச் சந்திச்சப்போ, முதல்ல ஒரு தடவை கை
குலுக்கி, 'இது படத்துக்கு’ என்றார். மீண்டும் ஒருமுறை கை குலுக்கி, 'இது
அமிதாப்பை 120 அடிக்கு ஆங்கிலத்தில் பேசவெச்சதுக்கு. ஒரு ரைட்டரா நாங்க
எவ்வளவோ போராடி இருக்கோம். அவர் சம்மதிச்சதே இல்லை. ஆனா, நீங்க அவரையே
அவ்வளவு நீளமா பேசவெச்சு ரைட்டர்களுக்குப் பெருமை ஏற்படுத்திக்
கொடுத்துட்டீங்க’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டுகள் இன்னும் மனசைவிட்டு
அகலாம இருக்கு!''
- நிறைய பேசலாங்க...
அடுத்த வாரம்
''அரசியலுக்கு கே.பாக்யராஜ் தேவையே இல்லை; கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவையா?''
''நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர் யார்? தமிழிலும் பிற மொழிகளிலும். காரணத்துடன் சொல்லுங்களேன்?''
''அதென்ன... உங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனைத்து ஹீரோயின்களும் மூக்குக் கண்ணாடி அணிகிறார்கள்... என்ன சென்டிமென்ட்?''
பாகம் 1 படிக்க
கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_7561.html
பாகம் 3 படிக்க -இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |..
http://www.adrasaka.com/2012/ 10/11.html
நன்றி - விகடன்
பாகம் 4 படிக்க சிவப்பு ரோஜாக்கள், சுவர் இல்லாத சித்திரங்க ள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங் கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/ 11/blog-post_159.html
http://www.adrasaka.com/2012/
0 comments:
Post a Comment