ஆஸ்ரா கர்க் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் விஜயகாந்த்?
பரபரக்கும் திருப்பூர்
திருப்பூர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்குள் மீண்டும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் அதிரடிக்குப் பெயர் போன ஆஸ்ரா கர்க். குற்றச் செயல்கள் மலிந்துபோன திருப்பூரை, தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்ரா கர்கை ஏன் திடீரென மாற்றினார்கள் என்று புரியாமல் பொதுமக்கள் விழிக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய சில போலீஸார், ''ஆஸ்ரா கர்க் வந்ததில் இருந்து திருப்பூர் ஓரளவு அமைதியான மாவட்டமாக மாறிவிட்டது. யார் மீது புகார் என்றாலும், புகார் உண்மையாக இருப்பின் தைரியமாக நடவடிக்கை எடுத்தார். அதுதான் இப்போது அவருக்கு வினையாகி விட்டது. மணல் கொள்ளை பற்றித் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த லாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்தார்.
இதை முக்கிய அமைச்சர் ஒருவர் கண்டித்தும், அசராமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். அதனால் முன்பே இவர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச்செய்தி ஊட கங்கள் மூலம் வெளியே வந்துவிட்டதால், அப்போது நடவடிக்கை பாயவில்லை.
தமிழகம் முழுக்க மணல் அள்ளும் தொழிலில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் ஆஸ்ரா கர்க்கின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் ஆஸ்ரா கர்க்குக்கு போன் செய்த அவர், 'மணல் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு எஸ்.பி., 'சட்டவிரோதமாக வரும் லாரிகள் என்றால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்’ என்று உறுதியாகப் பதில் சொன்னாராம்.
உடனே மணல் புள்ளி, 'நீங்க இங்கே தொடர்ந்து எஸ்.பி-யாக இருக்கணுமா... வேண்டாமா?’ என்று அதட்ட... 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி வைத்து விட்டாராம் ஆஸ்ரா கர்க்.
சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆஸ்ரா கர்க். இதை மானப் பிரச்னையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.
இந்தப் பிரச்னைகளுக்கு இடையில் கடந்த மாதம் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைச் சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'ஆஸ்ரா கர்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டிப் பேசிவிட்டார். இது போதாதா மேலிடத்தைக் கடுப்பேற்ற? இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்துதான், அவருடைய டிரான்ஸ்ஃபருக்குக் காரணமாகி விட்டது'' என்றார்கள்.
ஆனால் வேறு சில அதிகாரிகளோ, ''மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் ஆஸ்ரா கர்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சில தர்மபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால், ஆஸ்ரா அங்கு இருந்தால் அதிரடி நடவடிக்கைளை எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத்தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீஸார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தர்மபுரியில்தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்ராகர்க்தான் சரியான நபர் என்று நினைப்பதால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள்.
தனக்கு மாற்றல் உத்தரவு வந்த கடந்த சனிக்கிழமை மாலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார் ஆஸ்ரா. 'விளைநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமானது.
செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் ஆஸ்ரா கர்க்குக்கு மாற்றல் உத்தரவு வந்ததால், அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
இந்தச் செம்மண் விவகாரம் தொடர்பாக ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''முறைகேடுகளில் ஈடுபட்ட நான்கு சேம்பரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்றார். தர்மபுரிக்கு மாற்றம் செய்துள்ளதைப் பற்றி கேட்டபோது சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.
திருப்பூரைத் தொடர்ந்து தர்மபுரி களைகட்டப் போகிறது!
கழுகார் பதில்கள்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
'நிலா மனிதன்’ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி...?
இந்த நூற்றாண்டின் இணையில்லா மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங். உயிர் வாழ்வதற்கு அவசியமான எதுவும் இல்லாத ஓர் இடத்தில் காலடி வைத்துத் திரும்பிய முதல்மனிதர் அவர்!
அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைக்கத்தக்க இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் உடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர். மூவரும்தான் நிலவுக்குச் சென்றவர்கள். முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். இரண்டாவது காலடி வைத்தவர் ஆல்ட்ரின். இவர்களோடு வந்து ராக்கெட்டில் இருந்தவர் காலின்ஸ். மூவருக்குமே சரி மரியாதையை நம்மனதில் இருத்துவதுதான் முறையானதாக இருக்கும்!
கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்).
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு சசிகலா போகவில்லையே?
ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூப்பிடவில்லையே!
அர்ஜுனன்.ஜி., திருப்பூர்.
6.72 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனரே?
கேள்வித்தாள் மிகமிகக் கடினம் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரமும் இதில் இருந்து தெரிகிறது. பணம் காய்க்கும் மரங்களில் ஒன்றான இந்த பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் எத்தகைய தகுதி உடையவர்கள் என்பது இந்தத் தேர்வு முடிவின் மூலமாகத் தெரிந்து விட்டது. இனிமேலாவது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப் பதில் தொடங்கி, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது வரை அரசு கறாராக இருந்தால் மட்டுமே இந்த 'புத்திசாலி’ வாத் தியார்களிடம் இருந்து பிள்ளைகள் தப்ப முடியும்!
ஆசிரியர் தேர்வில் தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேலான 129 அதிகாரிகளுக்கு எதிராக, 97-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லி இருக்கிறாரே?
பதிவுதானே செய்திருக்கிறார்கள். பயமில்லை! சி.பி.ஐ. இதற்கான தண்டனையை வாங்கித் தருவதற்குள் அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று நிம்மதியாகப் போய்விடுவார்கள்!
எஸ்.ஸ்ரீதர், கொடுங்கையூர்.
ஒன்றுமே புரியவில்லை... இத்தனை காலமும் பதுக்கி, மறைத்து, அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஏமாற்றிச் செய்யக்கூடிய காரியமா இந்தக் கிரானைட் முறைகேடு...?
பதுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. பட்டப்பகலில் அதிகாரிகள் துணையோடு அமைச்சர்களின் ஆசீர்வாதத்தோடுதான் இந்தக் கொடுமை கடந்த 15 ஆண்டுகளாக நடந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருந்தன.
ஜூ.வி-யைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மறுபடி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 12 முறைக்கு மேல் எழுதி இருக்கிறோம். எல்லாமே கைமீறிப் போன பிறகுதான் நடவடிக்கை வருகிறது. சரி... இப்போதாவது உஷாரானார்களே என்று சந்தோஷப்படுவோம். கடைசி வரை, கறாராக இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்போம்.
எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.
தி.மு.க-வில் 'சகோதர யுத்தம்’ தணிந்துள்ளதா?
ஆம்! தணிந்துள்ளது. ஆனால், தந்தை - மகன் யுத்தம்’ சூடுபிடித்து விட்டது. எந்த இடத்தை நோக்கி ஸ்டாலினை வளர்த்து விட்டாரோ... அந்த இடத்தை தரத் தயங்குகிறார் கருணாநிதி. இது, வெளியே தெரியவேண்டாம் என்பதற்காகவே 'சகோதர யுத்தம்’ திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது!
சோ.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
எத்தகைய கருத்தை மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள்?
'எங்களில் யாரும் யோக்கியமில்லை’ என்பதைத்தான்!
ரேவதிப்ரியன், ஈரோடு-1.
தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்குத் தலா 10 லட்சம் தரப்போவதாக முதல்வர் சொல்லி இருப்பது நடைமுறைக்கு ஏற்ற நல்ல முடிவுதானே..?
நிச்சயமாக! ஆனால், தீண்டாமை ஒழிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து இந்தப் பரிசுகள் தரப்பட வேண்டும். கோயில்களில் சமபந்தி போஜனமோ, நடுவில் போலீஸ்காரரை நிறுத்திக் கொண்டு இரண்டு பக்கமும் வெவ்வெறு சாதிக்காரர்களை நிற்க வைத்து டீ குடிப்பதோ மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது.
ஊர்க் கிணற்றை பொதுவாக்குவது, எந்தத் தெருவிலும் யாரும் நடக்கும் உரிமையைக் கொடுப்பது, கோயில் களுக்குள் தயக்கம் இல்லாமல் அனைவரும் சென்று வணங்குவது, ஊர் விழாக்களில் சமமாகப் பங்கேற்பது, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு இன்மை, கலப்புத் திருமணங்கள்... ஆகிய செயல்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கும் கிராமங்களுக்கு ஓராண்டு கவனித்துப் பார்த்த பிறகு விருதும் நிதியும் தரப்பட வேண்டும்.
இப்படிப் பரிசு வாங்கிய கிராமத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவோடு மறுபடியும் தீண்டா மைச் செயல்பாடு எப்போது நடந்தாலும்... அளித்த நிதியைவிட இரண்டு மடங்கு பணத்தை அரசாங்கத்துக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பது அதைவிட முக்கியம். கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக விருது வாங்கியவர்கள், பிறந்த குழந்தையின் சான்றிதழில் எந்தச் சாதியைப் போடுவது என்று சண்டை போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ... அதுபோன்ற விளைவுகள் இதிலும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.
இப்போதைய மாநில அரசின் நிர்வாகம் பற்றி...?
நிர்வாகத்தில் தேக்கம் இருப்பது உண்மை. எல்லா விஷயங்களையும் முதல்வரே செய்ய முடியாது. முதல்வர் இடத்தில் இருந்து யோசித்துச் செயல்படும் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் ஒரு சிலராவது வேண்டும். ஆனால், பலரும் முதல்வர் 'கேட்டால் மட்டும்’ செயல்படுகிறார்கள். தானே படிக்கும் குழந்தைக்கும், 'அம்மா’ பார்க்கும்போது பயபக்தியாகப் படிக்கும் குழந்தைக்கும் உள்ள வித் தியாசம்தான் இது!
அ.குணசேகரன், புவனகிரி.
ஆ.ராசா, இன்று பிரதமரைச் சந்தித்தால் என்ன கேட்பார்?
'மாட்டிக்கினீயா!’
நன்றி - ஜூ வி
2 comments:
நேர்மையா இருந்தா அரசுக்கு பிடிக்காது போல.
Stop copying from our magazine.
Inspite of warning, you are continuing to dd copyright violation.
If this continues again, Criminal action will be initiated against you.
STOP copying.
[email protected]
Post a Comment