ப்ளாக் அண்ட் ஒயிட் அனுபவம்
பொன்னியின் புதல்வனும்... நாடகச் செல்வனும்..
கோபு
(அமரர் கல்கி அவர்களின் பிறந்த நாளாகிய செப்டெம்பர் 9ம் தேதி கொண்ட இந்த கல்கி இதழில், அவருக்கும் நூற்றாண்டு காணும் அவ்வை டி.கே.ஷண்முகம் அவர்களுக்கும் இருந்த ஆழ்ந்த நட்புறவை விளக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிப்பதில் மகிழ்கிறோம். - ஆசிரியர்)
‘கல்கி’அவர்களின் நாடகம் ஒன்றினை அரங்கேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் 1945 இறுதியில் டி.கே.ஷண்முகம் அவரை அணுகி, ‘சுபத்திரையின் சகோதரன்’ கதையை நாடகமாக எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
‘கல்கி’ சிரித்துக்கொண்டே, நான் என்ன, சகலகலாவல்லவனா? எனக்கு நாடகமெல்லாம் எழுத வராது. உங்களுக்குப் பிடித்தமான நாடக ஆசிரியர் ஒருவரை கதையை நாடகமாக்கித் தரச் சொல்லுங்கள். வேணுமானால் நான் படித்து, சரிபார்த்துத் தருகிறேன்" என்று சொல்லிவிட்டார்.
ஷண்முகம் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அது போகட்டும், இப்போது நாங்கள் நடத்தி வரும் நாடகங்கள் ஒன்றிரண்டைப் பார்த்து, ‘ஆடல் பாடல்’ பகுதியில் விமர்சனமாவது எழுதலாமே" என்று கேட்டுக் கொண்டார்.
ஆகட்டும், பார்ப்போம்" என்றார் கல்கி.
டி.கே.எஸ். குழுவினர், திருச்சி, தேவர் ஹாலில் நாடகங்கள் நடத்தி வந்த சமயம், ‘கல்கி’ திருச்சிக்கு ஒரு காரியமாகப் போக நேர்ந்தது. அப்படியே ஷண்முகத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றத் தீர்மானித்தார். அப்போதெல்லாம் ஒரே நாடகத்தை டி.கே.எஸ். குழுவினர் தொடர்ந்து பல வாரங்கள் நடத்துவார்கள். வசூல் குறையும் சமயம் புதிய நாடகம் அறிவிப்பார்கள். இவ்வாறு ஒரே நகரில் பல மாதங்கள் நாடகங்கள் நடைபெறும். ‘
கல்கி’ வருகிறார் என்றதும் அவருக்காக அந்த வழக்கத்தை மாற்றி, மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு நாடகங்களை டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்துக் காட்டினார்கள்.
‘ஆடல் பாடல்’ பகுதியில் விமர்சனத்தின் வைர வரிகளாக, ‘நாடகக் கலைக்கு டி.கே.எஸ். சகோதரர்கள் புத்துயிரூட்டி மிளிரச் செய்கிறார்கள்’ என்பதாக எழுதினார் ‘கல்கி.’ இதனைத் தொடர்ந்து டி.கே.எஸ். சகோதரர்கள் மேலும் பிரபலமடைந்தார்கள்.
மிகச் சிறந்த நடிகர் என்பதோடு ஷண்முகம் நல்லகுரல் வளத்துடன் கூடிய அற்புதமான பாடகர். கல்கி அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் ஷண்முகம் தென்பட்டாரானால் உடனே ‘கல்கி’ அவரை அழைத்து, மகாகவியின் பாடல் ஒன்றினைப் பாடச் சொல்லி, தாமும் மகிழ்ந்து அவையோரையும் மகிழ்விப்பார்.
பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது, (1947) ஷண்முகம் தமது கணீர்க் குரலில் ‘கொட்டடா! ஜெயபேரிகை கொட்டடா!’ என்று உணர்ச்சி பொங்கப் பாடியது, அந்த விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற பலருக்கு இன்றும் நினைவிருக்கும்; மெய்சிலிர்க்கவும் செய்யும்.
1950களில் டி.கே.எஸ். சகோதரர்கள் சென்னைக்குக் குடியேறி, ஒற்றை வாடை தியேட்டரில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களுடைய ‘ஔவையார்’ நாடகத்தைப் பார்த்து விட்டு, ஔவை வேடம் புனைந்த ஷண்முகத்தின் உருவப்படத்தை கல்கி மேலட்டையில் வெளியிட்டார் ஆசிரியர் ‘கல்கி’. 1953 காங்கிரஸ் மாநாட்டின்போது, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இரவு பத்து மணிக்கு ஔவையார் நாடகம் நடைபெற்றது. சாதாரணமாக நாடகம், சினிமா என்றாலே முகம் சுளிக்கும் ராஜாஜியை வற்புறுத்தி ‘ஔவையார்’ நாடகத்துக்கு அழைத்துப் போனார் ‘கல்கி’.
மூன்று மணிநேரம் நாடகத்தைப் பார்த்து ரசித்தார் ராஜாஜி. மறுநாள் தம்மைக் காண வந்த அவ்வை ஷண்முகத்தை ஆசீர்வதித்து, இந்த நாடகம் தமிழகத்தில் ஒரு ஊர் பாக்கியில்லாமல் எல்லா கிராம - நகரங்களிலும் நடக்க வேண்டும்" என்று தம் ஆசையை வெளியிட்டார் மூதறிஞர். இதை விடப் பெரிய பாராட்டு ஷண்முகத்தின் நடிப்பாற்றலுக்குக் கிடைக்கக் கூடுமா?
‘சுபத்திரையின் சகோதரன்’ நாடகம் உருப் பெறவில்லை என்றாலும், ‘கல்கி’ அவர்களின் கதை ஒன்றினை அரங்கேற்றி விட வேண்டும் என்ற ஆர்வம் ஷண்முகத்துக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. ‘மனிதனும் மிருகமும்’ என்ற நாடகத்தை எழுதி, நடித்து, ‘கல்கி’யின் பாராட்டைப் பெற்ற எஸ்.டி.சுந்தரத்தை அழைத்து, ‘கள்வனின் காதலி’ நாவலை நாடகமாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
பெரும்பாலும் நாவலில் வரும் உரையாடல்களையே பயன்படுத்தி சுந்தரம் நாடகமாக்க, அதனைப் பகுதி பகுதியாக ‘கல்கி’ அவர்களுக்குப் பல நாட்கள் படித்துக் காட்டினார்கள், ஷண்முகமும் பகவதியும். காந்தி நகரில் கல்கி அவர்கள் இல்லத்தில் தினந்தோறும் பிற்பகலில் வசன ஒத்திகை நடக்கும். சகோதரர்கள் உணர்ச்சியுடன் வசனங்களைப் படிக்க, சுந்தரமும் ‘கல்கி’ யும் கேட்டு மகிழ்வார்கள். அவ்வப்போது சில திருத்தங்களும் செய்யப்படும்.
நாடகம் அரங்கேறி அமோக வெற்றி பெற்றது. விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ‘கல்கி’யின் நகைச்சுவை இணைய, ஷண்முகமும் பகவதியும் இயல்பான நடிப்பால் உயிரூட்ட, வெவ்வேறு ஊர்களில் நூறு தடவைகளுக்கு மேல் நடைபெற்றது. ‘கல்கி’ குறைந்தபட்சம் அதை பத்து முறையாவது பார்த்து, ரசித்து மகிழ்ந்தார் என்று ‘பொன்னியின் புதல்வர்’ வாழ்க்கை வரலாறு நூலில் ‘சுந்தா’ பதிவு செய்திருக்கிறார். பின் நாட்களில் திரை உலகில் மிகப் பிரபலமடைந்த எம்.என்.ராஜம், ‘கள்வனின் காதலி’ நாடகத்தில்தான் கதாநாயகன் முத்தையனின் சகோதரி அபிராமியாக அறிமுகமானார். நாடகத்தின் பெருவெற்றியைக் கொண்டாட கல்கி காரியாலயத் தோட்டத்தில் டி.கே.எஸ். நாடகக் குழுவினருக்கு தேநீர் விருந்து அளித்து சிறப்பித்தனர் சதாசிவம் - எம்.எஸ்.தம்பதி.
1954 டிசம்பர் 5ம் தேதி ‘கல்கி’ இறைவனடி சேர்ந்தார். தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரமுகர்கள் ‘கல்கி’ அவர்களுக்கும் தங்களுக்கும் இடையே நிலவிய நட்பு குறித்தும் அவரது ஆற்றல்களைப் பற்றியும் பேசினார்கள். டி.கே.ஷண்முகமும் தமது ஆனுபவங்களைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக, ‘கூத்தாடிகள்’ என்று குறிப்பிடப்பட்டு வந்த என் போன்றவர்களை ‘நாடகக் கலைஞர்கள்’ என்று கருதும்படி செய்து சமுதாயத்தில் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தித் தந்தவர் ‘கல்கி’ ", என்று பலத்த கரவொலிக்கிடையே மனம் விட்டுப் பாராட்டிச் சொன்னார்.
அந்த அற்புத நாடகக் கலைஞர், ‘கல்கி’ அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியாக ‘சிவகாமியின் சபதம்’ நாவலுக்கு நாடக வடிவம் தந்து அரங்கேற்ற தீர்மானித்தார். புத்தனேரி சுப்பிரமணியம் நாவலுக்கு நாடக உருத்தரும் பொறுப்பை ஏற்றார். பெரும்பாலும் கல்கி அவர்கள் எழுதிய உரையாடல்களையே நாடக வசனமாக்கினார். நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. இருநூறு தடவைகளுக்கு மேல் அரங்கேறியது. தமிழ் அறிஞர் மு.வரதராசனார் நாடகத்தைப் பார்த்துவிட்டு, ‘சந்தன மரத்தில் தாமரைத்தேன்’ என்ற நற்றிணைப் பாடலை நினைவு கூர்ந்து விமர்சனம் எழுதினார்: கற்பனை வளம் நிறைந்த எழுத்தாளர் ஒருவரின் உள்ளத்திலிருந்து எழுந்த கதை; திறன் வாய்ந்த ஒருவர் போற்றி அமைத்துத் தந்த நாடக வடிவம்; பண்பாடு மிகுந்த கலைஞர் விழைந்து நடித்து அரங்கேற்றிய அருமைக் கலைச் செல்வம்!"
கவனிக்கத்தக்கது என்னவெனில், திரை உலக ஜாம்பவான்கள் பலர் திரைப்படமாக்க எண்ணி, உரிமையும் பெற்று, பின்னர் ‘நம்மால் முடியுமா’ என்று தயங்கிக் கைவிட்ட ஒரு மகோன்னதமான வரலாற்று நாவலை துணிவுடன் நாடகமேடையில் டி.கே.எஸ். சகோதரர்கள் வெற்றிகரமாக நடித்துக் காட்டினார்கள் என்பதுதான்.
நாடகக் கம்பெனியை மூடிவிட டி.கே.எஸ். சகோதரர்கள் தீர்மானித்தபோது அதுவும் ஒரு விழாவாகவே நடைபெற்றது! உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற அந்த விழாவில் டி.கே.ஷண்முகம் சொன்னார் : சகோதரர்களிடையே ஒத்துப்போகவில்லை; அதனால் கம்பெனியை இழுத்து மூடுகிறார்கள் என்று வதந்தி பரப்புகிறார்கள். பொருளாதாரக் காரணங்களால் தான் இந்த மூடுவிழா. சகோதரர்களிடையே உள்ள பாசப் பிணைப்பை மரணம் ஒன்று தான் பிரிக்க முடியும்."
கல்கி அவர்களுக்கும் அவ்வை ஷண்முகத்துக்கும் இடையே இருந்த நட்புப் பிணைப்பும் அதுபோன்ற ஒன்றாகவே இருவரது இறுதிக்காலம் வரை இருந்தது.
நன்றி - கல்கி, புலவர் தருமி
2 comments:
அமரர் கல்கியை பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html
அமரர் கல்கியை பற்றிய அருமையான தகவல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...:-)
Post a Comment