Sunday, September 02, 2012

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டில் முறைகேடு அம்பலம்!

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டிலும் முறைகேடு அம்பலம்! 

Posted Date : 10:34 (01/09/2012)Last updated : 10:36 (01/09/2012)


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தொடர்ந்து, நீர் மின்சக்தி திட்டங்களை  ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது, தலைமை கணக்கு தணிக்கையாளர்  (சி.ஏ.ஜி.)அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல், நியமன முறையில் ஒதுக்கீடு செய்ததால்  அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட  தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட அமளி ஓய்வதற்குள் மற்றொரு முறைகேட்டையும்  சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நீர் மின்சக்தி ஆற்றல்  விரிவாக்கம் செய்வது தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை,  நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில்,"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 2007-12  காலக்கட்டத்தில் 11 ஆயிரத்து 813 மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக கூடுதல்  மின்உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தவறான கணக்கீடு மற்றும்  தவறான திட்டமிடல் காரணமாக இலக்கினை அடைய முடியாமல் போய் விட்டது.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள்  திட்டங்களை தீட்டி உள்ளனர். அதனால் திட்டமிட்டபடி உரிய பலனை அடைய  முடியவில்லை. இதனால் 11 ஆயிரத்து 813 மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்ய  வேண்டும் என்ற இலக்குக்கு பதிலாக 6 ஆயிரத்து 794 மெகாவாட் மின்சார உற்பத்தி  என்கிற அளவுக்கு இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.

முதலில் நிர்ணயித்ததைவிட 42 சதவீதம் குறைத்து, மாற்றியமைக்கப்பட்ட  இலக்கையாவது அடைய முடிந்ததால் என்றால் அதையும் சாதிக்க முடியவில்லை.

நீர் மின்சக்தி உற்பத்தி விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை அளிக்க, ஆய்வு  நடத்துவதற்கு தேசிய நீர்மின் கழகம் 49 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. இது  மட்டுமல்ல, ஆய்வு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதில்  மேலும் 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து குறித்த அறிவுரைகள் வந்த பின்னரும், அருணாச்சல  பிரதேசத்தில்,பிரம்மபுத்ரா படுகையில்,சியாங்க்,சுபான்சிரி பன்னோக்கு திட்டங்களை  சர்வே செய்து,ஆராய்ந்து அறிந்து,செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க அமைப்பினை   மத்திய மின்துறை அமைக்கவே இல்லை.

தேசிய நீர்மின் கழகம் முதலில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கீடு  செய்துள்ளது.அவற்றில் 2 திட்டங்களை குறைந்த எண்ணிக்கையிலான டெண்டர்களைப்  பெற்று,அருணாச்சல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இரண்டு திட்டங்களை தேசிய நீர்மின் கழகம் தனது சொந்த கூட்டு நிறுவனத்துக்கு  எடுத்துக்கொண்டுள்ளது.ஒரு திட்டம் தேசிய அனல்மின் கழகத்துக்கு தரப்பட்டுள்ளது.

அந்த வகையில், நீர் மின்சக்தி திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில்,ஒளிவுமறைவற்ற  தன்மை பின்பற்றப்பட வேண்டும்,போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின்  நீர்மின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

மத்திய மின்துறையின் சிறப்பு நோக்க அமைப்பிடமிருந்து தேசிய நீர்மின் கழகத்துக்கும்,  தனியார் நிறுவனங்களுக்கும்,கூட்டு நிறுவனங்களுக்கும்,தேசிய அனல்மின் கழகத்துக்கும்  ஜனவரி 1999-ம் ஆண்டு 5 நீர்மின் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.12 வருடங்கள்  கடந்த நிலையிலும்,அவை மின்உற்பத்தியைத் தொடங்கவில்லை.

சத்யம் ராமலிங்க ராஜுவின் மாய்டாஸ் நடத்துகிற எச்ஐவி நிறுவனத்துக்கு, ஏல ஆவண  விற்பனையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் சலுகை காட்டப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம்,திட்டச்செலவு அதிகரிக்க  காரணமாகி உள்ளது.

4 பொதுத்துறை நிறுவனங்களின் 16 நீர்மின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு  அனுமதிக்கப்பட்ட ரூ.30 ஆயிரத்து 5 கோடி என்ற அளவிலான திட்டச்செலவினம்  ரூ.44 ஆயிரத்து 712 கோடியாக அதிகரித்துள்ளது. முடிவு அடைந்துள்ள 7  திட்டங்களில்,திட்டச்செலவினம் 53 சதவீதத்தில் இருந்து 148 சதவீதம் வரை  அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 
நன்றி - விகடன்

1 comments:

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி