உயிரோவியம்!
கதை: தீபா ஸ்ரீ
ஓவியம்: மாருதி
கதை: தீபா ஸ்ரீ
ஓவியம்: மாருதி
மங்கையர் மலர் மாத இதழில் சிறுகதைப்போட்டி வைத்திருந்தாங்க. அதுல 2 ஆம் பரிசு ரூ 10,000 பெற்ற கதை இது.
திரிந்துபோன பாலைக் கொட்டிக் கவிழ்த்ததுபோல, வானத்தில் மேகங்கள் உதிரியாகத் திரிந்துக் கொண்டிருந்தன. நான் சூடாக டீயைத் தயாரித்துக்கொண்டு, பால்கனியில் வந்து அமர்ந்தேன். டீ-பாயில் கிடந்த சஞ்சரிகைகளை இலேசாகப் புரட்டினேன். ‘வேளச்சேரி டைம்ஸ்’ - என்ற உள்ளூர் நாளிதழை அசுவாரசியமாகப் புரட்டியபோது கண்களில் சட்டென்று பட்டது அந்த விளம்பரம்.
எங்களிடம் பழைமையான தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளன. தொடர்பு கொள்வும்’ என்று ஒரு பெட்டி விளம்பரம். அதன் அருகிலேயே கையில் வெண்ணெயுடன் காட்சி அளிக்கும் நவநீத கிருஷ்ணனின் அழகு சித்திரம். அதன் கீழே... ‘மினாட்சி’ என்றொரு கையெழுத்து. அது எனக்கு நன்குப் பரிட்சையமான கையெழுத்து!
அப்போது நாங்கள் கும்பகோணத்தில் வசித்தோம். எதிர்வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவள்தான் இந்த மீனாட்சி மாமி!
நல்ல பவுன் நிறம்; கொஞ்சம் பூசிய உடல்வாகு, சிரிக்கும் கண்கள் என நல்ல அழகானத் தோற்றம். நீண்ட பின்னலை, பின்னங்கழுத்தில் கைமுறுக்கு போல வட்டமாகச் சுற்றிக் கொண்டையிட்டிருப்பாள்.
அந்த வயசுக்கு அது எனக்கு புதுமையான ஹேர் ஸ்டைலாகத் தெரிந்தது.
நான் அப்போது பத்தாங்கிளாஸ் முடிச்சுருந்தேன்னு நினைக்கிறேன். மீனாட்சி மாமி வீட்டுக் கொல்லையில் மருதாணி, புதர் போல செழித்து வளர்ந்திருக்கும்.
குத்துச் செடி மருதாணி... குந்து மணியாட்டம் சிவக்கும்டி! மாமி வீட்டு மருதாணியை பறிச்சுத்தாடி!" என்று ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் தொந்தரவு செய்வார்கள். நானும் அவர்களது அன்பு நச்சரிப்பைத் தட்ட முடியாமல் அடிக்கடி மீனா மாமி வீட்டுக்குப் போவேன்.
நான் போகும்போதெல்லாம் மாமி, பின் பக்கத்து திண்ணையில் உட்கார்ந்து, பெரிய அட்டையில் எதையாவது வரைந்து கொண்டிருப்பாள். அவளைச் சுற்றி, சிறிதும் பெரிதுமான ப்ரஷ்கள், பென்சில், ஸ்கெச் பேனாக்கள் சிதறிக் கிடக்கும். அது தவிர, ஒரு தகரப் பெட்டியில் சின்னச் சின்ன தகடுகள், சிறிதும் பெரிதுமான கத்திரிகள், பித்தளைக் கிண்ணங்களில் கலர் மணிகள், ரேக்குகள், வர்ணக் குப்பிகள் என பார்க்கவே ஆசையாக இருக்கும்.
ஓ! நீங்க ஆர்டிஸ்டா மாமி? ட்ராயிங் எல்லாம் வரைவீங்களா?"
ஏதோ... சுமாரா வரைவேன்!"
இல்ல மாமி! சூப்பரா வரையறீங்க!"
தாங்க்ஸ்டி உமா! மருதாணியைப் பறிச்சுக்கிட்டுப் போகும்போது, எனக்குக் கொஞ்சம் தண்ணி குடுத்துட்டுப் போ!" என்பாள் மீனா மாமி!
எனக்குத் தெரிந்த எங்க வீதிப் பெண்கள் யாரும் மீனா மாமி அளவுக்கு சித்திரக்காரர்களாக இருந்ததில்லை. பாரதி தெரு பாட்டி ஒருவர், கோயில் விசேஷங்களில் படிக் கோலம் போட்டு அசத்துவார். கண்ணா சித்தியின் பெண் ஒருத்தி, சுவரில் அழகாக வரலக்ஷ்மி அம்மன் முகம் வரைவாள்; பார்த்திருக்கிறேன். ஆனால், மீனா மாமி ஒரு ஆர்ட் கேலரியே வைத்திருந்ததைப் பிறிதொரு நாளில் பார்த்தபோது அசந்தே போனேன்.
மாமி, இந்த மாசம் ‘ராணி முத்து’ல சிவசங்கரி நாவல் வந்திருக்கு. படிக்கறீங்களா?" என்றபடி நான் வீட்டுக்குள் போனபோது, மீனா மாமி பூஜையறையில் இருந்தார்.
ஆத்தாளை... எங்கள் அபிராம வல்லியை..." என்று அழகாகப் பாடியபடி, கற்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மாமி.
அடேயப்பா! பூஜை அறையா அது? தெய்விகக் கலைக்கூடம் போல இருந்தது. கண்ணாடி ஃப்ரேம் போட்ட திரு உருவச்சித்திரங்கள். செந்தாமரை மலர் மீது அமர்ந்த மகாலக்ஷ்மி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, ராதை - கண்ணன், வெங்கடேசப் பெருமாள் என எல்லாமே வெள்ளி - தங்க ரேக்குகள் மின்னிப் பளபளத்தன. தெய்வத்தின் முகங்களில் அப்படியொரு வாத்ஸல்யம்.
ஒவ்வொரு சுவாமிப் படத்தின் வலது கீழ் மூலையிலும் ‘மினாட்சி’ என்று பெயர் இருந்தது.
மாமி, மீனாட்சின்னு ஏன் சுழிக்கல? மினாட்சின்னு இருக்கே?"
நான் என்னிக்காவது கோபப்பட்டு முகம் சுளிச்சுப் பார்த்திருக்கியா? அதுதான் என் கையெழுத்தும் சுளிக்கலை!" என்றாள் சிரித்துக்கொண்டே.
ஆடி வெள்ளி, தேடி வந்திருக்க... இந்தா பால் பாயசம்!" என்று அன்புடன் கொடுத்து அனுப்பினாள்.
அம்மா, மீனா மாமி வீட்டுல ஒரு ரூம் முழுக்க, சுவாமிப் படங்கள். எல்லாமே அவங்க வரைஞ்ச பெயின்டிங்ஸ்; சூப்பராய் இருக்கும்மா!" என்று நான் சொன்னதும், அந்தத் தெருவே போய் பார்த்து வந்து சிலாகித்து மகிழ்ந்தது. அன்றைக்கு இரவு சாப்பிடும்போது, எதிர்வீட்டுல என்ன பொம்பளைங்க கூட்டம்?" என்று கேட்டார் அப்பா.
அதுவா? அந்த மீனா மாமி, அழகழகாய் சாமிப்படம் வரைஞ்சு மாட்டி வெச்சுருக்காங்க. அதைப் பார்க்கப் போனோம். நல்ல கைவேலையெல்லாம் செய்றா. லவ் மேரேஜ் போல இருக்கு. புருஷன் வெளியூர்ல இருக்கார். எப்பவோ வர்றார் - போறார்! குழந்தை குட்டியும் ஏதுமில்ல. ஒண்டியா என்னதான் செய்வா? பொழுது போகறதுக்காக எதையாவது வரையறா போலிருக்கு!" என்றாள் அம்மா.
ஒருமுறை, மீனா மாமிக்கு என்ன பணமுடைவோ என்னவோ, எங்க வீட்டுக்கு வந்து, நூறு ரூபாய் கடன் கேட்டார். இரண்டு மாதமாக வாடகை தரலை என்று வீட்டுக்கு சொந்தக்காரர் சத்தம் போட்டுவிட்டுப் போனதையும் பார்த்தோம்.
ஏன், உங்க வீட்டுக்காரர் பணம் அனுப்புறதில்லையா? ஊருக்கு வந்தே இரண்டு மூணு மாசம் இருக்கும் போலிருக்கே!" என்றாள் அம்மா நைஸாக.
ஆமாம், அவர் வேலை செய்யற கம்பெனியை மூடிட்டாங்களாம். வேற வேலைக்கு முயற்சி பண்றதாய் சொன்னாரு. பணம் வந்ததும் திருப்பித் தந்துடறேன்!" என்றாள் மெல்லிய குரலில்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, தப்பா நினைச்சுக்காதீங்க மாமி! நீங்க ரொம்ப நல்லா பெயின்டிங் பண்றீங்களாம். அதுவும் சுவாமிப் படங்கள் பார்க்கவே தெய்விகமாய் இருக்காம். அதை வித்தா நல்ல காசு வருமே... டவுன்ல ‘வாசவி ஆர்ட்ஸ்னு..."
அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள மீனா மாமி, சுவரில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதுவிட்டாள்.
அண்ணா, அதெல்லாம் வெறும் பெயின்டிங்னா நினைக்கறீங்க... அதெல்லாம் என்னோட குழந்தைகள். பத்து மாசம் சுமந்து பெக்கற மாதிரி, நான் கண்ணுலயும் நெஞ்சுலயும் சுமந்து வளர்த்த பிள்ளைகள். அதை வித்து என் வயிற்றைக் கழுவுற நிலமை வந்துச்சுன்னா, இதோ... இந்தக் கட்டை விரலை வெட்டிக்குவேன்!" என்றாள் ஆவேசமாக!
சரிம்மா! அழாதே! இந்தா நூறு ரூபாய். உனக்கு எப்போ முடியுமோ அப்ப குடு!" என்று சொல்லிவிட்டு அப்பா உள்ளே போய்விட்டார்.
அதற்குப் பின், அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. மீனா மாமி, பத்தும் ஐந்துமாக நூறு ரூபாயைத் திருப்பித் தந்ததாகப் பின்னாளில் அம்மா ஒருதரம் சொன்னாள். அதற்குப் பின் மீனா மாமி என் நினைவில் வெளிறிப் போனாள். இன்றைக்கு இருபது வருஷங்களுக்குப் பிறகு ‘மினாட்சி’ என்ற கையெழுத்தைப் பார்க்கிறேன். உடனே என் கணவருக்கு விவரம் சொல்லிவிட்டு, தொடர்பு எண்ணுக்கு ஃபோன் போட்டேன்.
எங்க பெரியம்மாதான் அவங்க. வேளச்சேரி சிவன் கோயில் தெருவுல இருக்கு வீடு!" என்று ஓர் இளைஞன் பேசினான். உடனே, என் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேளச்சேரி நோக்கிப் பறந்தேன்.
குருநானக் கல்லூரி தாண்டி, பிரதான சாலையில் இருந்தது சிவன் கோயில். அதை ஒட்டிய குறுக்குச் சந்தில் இருந்தது அந்தப் பழைய வீடு!
வாங்க... நீங்கதான் ஃபோன் செஞ்சீங்களா?" என்று கேட்டபடியே உள்ளே அழைத்துப் போனான்.
ஹாலின் சுவர் முழுக்கவும், மர பெஞ்சுகள் மீதும் மீனா மாமியின் ஓவியங்கள் தேக்குமர ஃபிரேமில் மினு மினுத்தன.
மாமி எங்க?"
மாடில!"
‘எஸ்’ போன்ற வளைந்த படிக்கட்டுகளில் ஏறி மேலே போனபோது, பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் மீனா மாமி.
அவர்தான்... அவரேதான்!
ஆளே உருக்குலைந்து, தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தது. ஆனால், அந்தக் கண்கள் மட்டும் அதே உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றியது.
மாமி, ஞாபகமிருக்கா? நான் உமா. கும்பகோணத்துல எதிர்வீட்டுல இருந்தோமே! மருதாணி பறிச்சுக்க வருவேனே!"
ஓ! சங்கரி பொண்ணா? நல்லா இருக்கியாம்மா... அப்பா - அம்மா சௌக்கியமா?"
எல்லாரும் நல்ல சௌக்கியம் மாமி! நீங்க எப்போ சென்னை வந்தீங்க...? உங்க வீட்டுக்காரர்..."
அவர் போயி பத்து வருஷமாச்சு!"
த்சொ...த்சொ! இந்தப் பையன்?"
இவன் என் மகன்தான். என் கணவரோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன். அவர் பெங்களூருல வேலையாய் இருந்தப்ப, அங்க ஏற்பட்ட சிநேகிதத்துல பிறந்த பிள்ளை. வேற வழியில்லாமல், அவங்க உறவை ஏத்துக்கிட்டேன். ஒரு முறை இரண்டு பேரும் பைக்ல போகும் போது, ஆக்ஸிடென்ட் ஆகி, ஸ்தலத்துலியே போயிட்டாங்க. அப்ப இவன் இரண்டாம் கிளாஸ் படிச்சுட்டிருந்தான். ஏதோ கொஞ்சம் இன்ஷ்யூரன்ஸ் பணம் வந்தது. கம்பெனியிலும் கொஞ்சம் கொடுத்தாங்க. அதை வெச்சு காலேஜ் வரைக்கும் வளர்த்துட்டேன். கைல இருந்த காசெல்லாம் கரைஞ்சுடுச்சு. அதான் என்னோட பெயின்டிங்ஸை விற்கலாம்னு!" முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணீரை மறைத்தார்.
மாமி கவலைப்படாதீங்க. என் ஹஸ்பென்ட் கிஃப்ட் ஷாப் வெச்சுருக்காரு. என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஆர்ட் கேலரி வெச்சிருக்கா. நானே உங்க ஓவியங்களை நல்ல விலைக்கு வித்துத் தர்றேன்!"
ரொம்ப தாங்க்ஸ்டி உமா!"
அது மட்டுமில்லை. உங்களுக்கு போர்ட், கலர்ஸ் எல்லாமே வாங்கித் தர்றேன். நீங்க மறுபடியும் வரையலாம்."
மறுபடி வரையறதா? ஸாரி உமா... அது என்னால இனி முடியாது!"
ஏன் மாமி?"
இதோ பார்!" சால்வைக்குள் இருந்த வலது கையை எடுத்துக் காட்டினார்.
வலது கையில் கட்டை விரல் இருக்கவில்லை!
ஷுகர் எக்கச்சக்கமா ஆயிடுச்சு. வெட்டி எடுத்துட்டாங்க!" சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.
‘என்னோட ஓவியங்களை வித்து சாப்பிடற நிலைமை வந்ததுன்னா, நான் என்னோட கட்டை விரலை வெட்டிக்குவேன்!’
எப்போதோ மீனா மாமி சொன்னது, நினைவுக்கு வந்து நெஞ்சைப் பிசைந்தது!
நன்றி - கல்கி, புலவர் தருமி
1 comments:
The last 4 lines killed the story's impact. Should not have been written. - R. J.
Post a Comment