Thursday, September 27, 2012

தாண்டவம்




Image'தாண்டவம்' விக்ரமின் முன்மாதிரி பார்வையற்ற டேனியல் கிஷ்-ன் சிறப்பு பேட்டி ! விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார். இதற்கு அவர் ரோல் மாடலாக கொண்டிருப்பவர் டேனியல் கிஷ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் பார்வையற்றவர். ஆனால் தனக்கு பார்வையில்லையே என்று ஒதுங்கி இருந்து விடாமல் வாயால் ஒலி எழுப்பி அதன் எதிரொலியை கேட்டு அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை அனுபவத்தில் கற்றுக் கொண்டவர். 


அதாவது காதால் பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டவர். இப்போது அவர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற திறனை உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். அவர் தாண்டவம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த சிறப்பு பேட்டி :

* பிறப்பிலிருந்தே உங்களுக்கு பார்வையில்லையா? இடையில் ஏற்பட்ட விபத்தால் பார்வை பறிபோனதா?

பிறந்த 7 வது மாதத்திலேயே ஒரு கண் பார்வை போய்விட்டது. 15வது மாதத்தில் அடுத்த கண்ணின் பார்வை போனது. ரெட்டினோக்ளோபியா என்ற மூளை நரம்பு கோளாறினால் இது ஏற்பட்டது.

* உங்கள் பார்வை இழப்பு பெற்றவர்களை எப்படி பாதித்தது?

ஆரம்பத்தில் அவர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இது எல்லா பெற்றோருக்கும் உருவாகும் கவலைதான். ஆனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. தன் குழந்தை இந்த உலகத்தில் மற்ற குழந்தைகளைப்போலவே வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கேற்ப என்னை தயார் படுத்தினார்கள். பள்ளிக்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்னை தைரியமாக தனியே அனுப்பினார்கள். நானும் சுயமாக நடக்க பழகிக் கொண்டேன்.
* எக்கோ லொக்கேஷன் திறனை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

அதற்கும் என் பெற்றோர்தான் காரணம். ஆரம்பத்தில் வீட்டிற்குள் நான் புழங்கும்போது அவர்கள் ஒரு குச்சியால் சுவற்றிலோ அல்லது தரையிலோ ஒலி எழுப்புவார்கள். அந்த சத்தத்தை வைத்து நான் அவர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்பதையும். அதன் எதிரொலியை வைத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கற்றுக் கொண்டேன். அருகில் சுவர் இருந்தால் எதிரொலி ஒரு விதமாகவும் வெட்ட வெளியில் இருந்தால் இன்னொரு விதமாகவும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து சிறியதாக நானே ஒலி எழுப்பி அதன் மூலம் அருகில் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதன் முழு வடிவம்தான் காதால் பார்க்கும் கலை.

* இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் யோசனை எப்படி வந்தது?

உலகத்திலேயே எனக்கு பிடித்தது கற்றுக் கொடுத்தல்தான். கற்றுக் கொடுத்தல் தொழில் அல்ல அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்தே ஆக வேண்டிய கடமை. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை என்றால் நாம் இப்போதும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருப்போம். எனவே நான் கற்ற இந்த திறனை என்னைப்போன்ற பார்வையற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் உள்ளூரில் உள்ள சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். அது படிப்படியாக விரிந்து இப்போது எனது அமைப்பு உலகில் 23 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது. அங்கெல்லாம் நான் சென்று கற்றுக் கொடுத்து வருகிறேன்.

* உங்கள் திறனால் அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்வதைப்போல அருகில் உள்ள மனிதர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடியுமா?

(சிரிக்கிறார்). மனிதர்களை அறியமுடியும். குணங்களை அறிய முடியாது. ஆனால் சில நிமிடங்கள் பேசினால் அறிந்து கொள்வேன்.

* தாண்டவம் படம் பற்றி சொல்லுங்களேன்?


இந்தியாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் என்னை அணுகினார். தான் இயக்கும் படத்தில் எக்கோ லொக்கேஷன் திறன் உள்ள ஒரு கேரக்டர் வருகிறது என்றும் அதற்கு தங்கள் அனுபவம் தேவை என்று சொன்னார். நேரில் வரச்சொன்னேன். எனது வீட்டுக்கு வந்தார் சில நாட்கள் தங்கியிருந்தார் எனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்தார். அதை அவர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

* நீங்களும் படத்தில் நடித்திருக்கிறீர்களாமே?


எனக்கு நடிக்கத் தெரியாது. சில செய்தி படங்களிலும், ஆவணப் படங்களிலும் நான் நானாகவே தோன்றி பேசியிருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் நானாகவே வருகிறேன். நடிக்கவில்லை.

* விக்ரம் பற்றி உங்கள் கருத்து?


இந்த நாட்டில் அவர் பெரிய நடிகர் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது பற்றி எனக்குத் தெரியாது. அவர் எனக்கு ஒரு மாணவர் மாதிரி. இத்தனை பலம் வாய்ந்த ஒருவர் என்னிடம் ஒரு மாணவன் போல இருந்து கற்றுக் கொண்டதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் ரொம்ப ஸ்வீட் பெர்சன்.

* விக்ரம் உங்களை ரோல்மாடல் என்கிறார். உங்களின் ரோல் மாடல் யார்?

என் பெற்றோர்கள்தான். அவர்கள் மட்டும் என்னை முறையாக வளர்க்காமல் இருந்திருந்தால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. எனக்கு 18 வயதாகும்போது. "டேனியல் இனி நீ தனி ஆள். இந்த நாட்டுக்கு நீ வரி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வா. யாருடைய தயவையும் எதிர்பார்க்காதே. சம்பாதித்து அரசாங்கத்துக்கு முறையாக வரி கட்டு. அடுத்து உன் தேவைகளை பார்த்துக் கொள். கொஞ்சம் சேர்த்து வை. அது நாங்கள் முதியோர் ஆனபின் எங்களை நீ கவனித்துக் கொள்வதற்காக" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இன்று வரை செய்து வருகிறேன். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் அனுதாபம் கொள்வது. ஒரு குறைபாடுடைய மனிதனை பார்த்து அனுதாபப்படுவது அவனை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்று நினைக்கிறேன். அவனுக்கு வழியை மட்டும் காட்டுங்கள் நடந்து செல்வது அவன் பொறுப்பு.

* சினிமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"சினிமா பற்றி அதிகம் தெரியாது. நல்ல விஷயங்கள் எந்த வடிவத்தில் மக்களுக்குச் சென்றாலும் அது எனக்கு பிடிக்கும். அந்த வகையில் எக்கோலொக்கேஷன் சினிமா வடிவில் மக்களுக்கு போய்ச் சேர்ந்தால் சினிமாவும் எனக்கு பிடிக்கும்."


நன்றி : தினமலர்









Uyirin Uyire song from Thaandavam 

 

தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'உயிரின் உயிரே' பாடல் முழுமையாக....




 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'அனிச்சம் பூவழகி' பாடல் முழுமையாக...

 

 

 

 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'யாரடி மோகினி' பாடல் 

 

 

 

விக்ரம் பேட்டி - பிரஸ் மீட்

3 comments:

kk said...

பொன்னுசாமி என்ற உதவி இயக்குனரிடமிருந்து இப்படத்தின் கதை திருடப்பட்டிருக்கின்றது என்றொரு குற்றச்சாட்டு வருகின்றதே
http://www.vinavu.com/2012/09/26/thandavam/

Anonymous said...

தாண்டவம் எந்த படத்தின் தழுவல்? ஒருவன் தனது நண்பனை இழந்து, பார்வையை பறிகொடுத்த பின், பலி வாங்குவது போலத்தான் இருக்கு ட்ரெய்லரில் காட்டப்படும் கதையமைப்பு. இதே மாதிரி பல படங்கள் (சபாஷ், ரெண்டு) தமிழ்லயே வந்துருந்தாலும், எக்கோலொகேஷன், லண்டன்னு எதாவது புதுசா ஏமாத்த ட்ரை பண்ணலாம். Daredevil கான்செப்ட்ட சுட்டு அதுக்கு பேர கண்டுபிடிச்சி, நம்ம பழைய தமிழ்படங்கள்ல வர்ற கதையையே கொஞ்சம் மாத்தி

கோவை ராஜா said...

Blind Date - may be? What ever it is, if movie is good that is fine :)