Wednesday, August 29, 2012

ஈரோடு , சேலம் மாவட்ட மக்களே! உஷார் ! புதிய மோசடிகள் உலா

'ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்



ஈமு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது!



ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.




நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன்.


 சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன். 




சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.



சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.



ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.



ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்


.

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

நன்றி - ஜு வி

1 comments:

MaduraiGovindaraj said...

ஏமாறாதே ஏமாறாதே