Tuesday, July 24, 2012

பேப்பரில் பேர் - சுஜாதா - சிறுகதை

http://www.instablogsimages.com/images/2007/10/14/14akhtar1_60.jpg 

படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் காப்பி கொடுப்பாள். குடித்துவிட்டுச் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பேன். காவேரிக்குப் போய்க் குளிப்பேன். பத்து மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு பிற்பகல் காப்பி வரை அரட்டை அடிக்க ரங்கு கடைக்குப் போய்விடுவேன்.


ரங்கு கடை என்பதைக் கடை என்று சொன்னால் கடைகள் எல்லாம் கோவித்துக்கொண்டு கூட்டம் கூட்டி நோட்டீஸ் விசிறி என்னைத் திட்டும். கீழ வாசலில் ஸப்-போஸ்ட் ஆபீசாக இருந்த இடம். நாலைந்து கைமாறி ஒருத்தருக்கும் செழிக்காமல் ரங்கு கடை போடலாம் என்று குத்தகை எடுத்த இடம். சுமார் ஆறுக்கு ஒன்பது அடி இடம். அதைப் பாதியாய்ச் சாக்கில் மறைத்து, அந்தப் பின் பாதி வருகிற சிநேகிதர்கள் சிலர் சிகரெட் குடிப்பதற்கும், கிடைத்தால் ஜிஞ்சர்பரிஸ் போன்ற கலக்கல்களைச் சப்பிப் பார்ப்பதற்கும் இருட்டான இடம். முன் பாதியில் நாலைந்து பலகைகளால் செய்த நொண்டி ஸ்டாண்டு. அதில் பழைய சிகரெட் டின்களில் ‘பலப்பம்’ என்று சொல்லப்படும் ‘ஸ்லேட்டுக்குச்சி’, நாற்பது பக்கம் அன் ரூல்டு, நன்கு அழிக்கும் ரப்பர், வாய் பூரா லிப்ஸ்டிக் போட்டது மாதிரி பண்ணிவிடும் ‘பப்பரமுட்டு’, கொஞ்சம் உப்புக் கடலை; இவ்வளவுதான் கடை.


இந்த மாதிரிப் பொருள்களை வியாபாரம் செய்து எப்படிப் பிழைக்க முடியும் என்று உங்களுக்கு யோசனை ஏற்படலாம். ரங்குவுக்கு ஒரு வீடு, கொஞ்சம் நிலம், கொஞ்சம் மனைவி எல்லாம் உண்டு. வசதியானவன். தன் மனைவியிடமிருந்து தினத்துக்கு ஒரு எட்டு மணி நேரமாவது தப்பிக்கிற ஆசையால் ரங்கு அந்தக் கடையை ஆரம்பித்திருந்தான். அதில் வேலை இல்லாத இளைஞர்கள் நாங்கள் அத்தனை பேரும் கூடுவோம்.


இன்றும் எப்போதும் போலக் காப்பி சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டுப் பளபளவென்று ரங்கு கடைக்குப் போனேன். மேலவீதி அம்பி என்கிற சுந்தர் வந்திருந்தான்.


‘தன்னன்னே’ என்று அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு பாடினான். ”ரங்கா! என்னடா ராகம் இது?” என்று கேட்டான்.

”ஆரபியா?”

”தேவகாந்தாரி. பல்லைப் பேத்துருவேன்.”

”வாடா இன்ஜினீயர்!”
என்னைத்தான்.



http://www.cricturf.com/thumbnails/remote/http--despardes.com-wp-content-uploads-2012-03-Match-Fixing-Cartoon.jpg
நான் அவர்களுடன் அதிகம் பேச மாட்டேன். எது சொன்னாலும், என்ன கிண்டல் செய்தாலும் லேசாகச் சிரித்து மழுப்புவேன். அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு இஷ்டம்.
”என்ன, வேலை கிடைச்சுதா?”
”இல்லை அம்பி.”
”அடுத்த வாரம் ஊர்ல இருக்கியோல்லியோ?”
”ஏன்?”
”தஞ்சாவூர் டீமோட கிரிக்கெட் மாட்ச், ஐஸ்கூல் மைதானத்தில். உன்னை லெவன்ல போட்டிருக்கேன். காலேஜுக்கு ஆடிருக்கேன்னு சொன்னியே?”
சொல்லியிருந்தேன். ஆனால், ரிஸர்வாக இருந்ததைச் சொல்லவில்லை.
”தஞ்சாவூர் டீமா?”
”ஆமா பெரிய டீம். கேவி ஏற்பாடு பண்ணியிருக்கான்!”
”மொத்தம் நம்மகிட்ட பதினோரு பேர் இருக்காளா?”
”தேத்திரலாம். ஸ்கூல் பசங்களை ஒண்ணு ரெண்டு பேர் சேத்துக்கலாம்.”
”என்னிக்கு மாட்ச்?”
”வர ஞாத்திக்கிழமை. நீ நன்னா ஆடுவியோல்லியோ? உன்னைத்தான் நம்பியிருக்கேன்.”
”சுமாரா ஆடுவேன்” என்று ஜகா வாங்கினேன்.
”பாட்ஸ்மனா, பௌலரா?”
”ரெண்டும் சுமாரா.”
”உங்ககிட்ட பாட், பந்து ஏதாவது இருக்கா?” பாட் என்றால் Bat.
”ஸாரி, இல்லையே!”
”பந்து வெச்சிருக்கறவனா பாத்து ஒருத்தனை டீம்ல சேர்த்துக்கணும். நம்ம வரதன் வரேன்னான். மண்ணச்சநல்லூர் போயிருக்கான். இன்னிக்கு பிராக்டிஸ் ஆரம்பிச்சாகணும். வரப்போறது அயனான டீம்.”

”கேவி ஒருத்தன் போதுமே.”
”இல்லையே. இந்தப் பக்கம் ஸ்டாண்டு குடுக்கணுமே அவனுக்கு.”

சொல்லப்பட்ட கேவி நிஜமாகவே ரொம்ப சாமர்த்தியமான கிரிக்கெட் ஆட்டக்காரன். கச்சலாகத்தான் இருப்பான். அவனுக்கு ஏறக்குறைய எல்லா ஆட்டமும் ஒழுங்காக வரும். கிரிக்கெட்டில் அவன் பாட்டிங் பார்க்க அப்படி ஒன்றும் அழகாக இருக்காது. இருந்தாலும் எப்படியாவது பந்தைத் தேக்கி அடித்துவிடுவான். பௌலிங் ஒரு மாதிரி ‘த்ரோ’ மாதிரிப் போடுவான். எப்படியாவது சாலக்காக விக்கெட் எடுத்துவிடுவான். அவன்தான் டீமுக்கு முதுகெலும்பு. மற்ற பேர் எல்லாம் எப்போதோ துணிப் பந்திலும் ரப்பர் பந்திலும் வீதி கிரிக்கெட் விளையாடியவர்கள்.

அப்போது கேவி வந்தான். கையில் ஒரு பழைய பாட் வைத்திருந்தான். அதில் பலவிதமான பாண்டேஜுகள் போட்டிருந்தன. ”சத்தியத்துக்கு இதுதான் கிடைச்சுது. பந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”

”கேவி… மாட்ச் நிஜ மாட்சா?”

”ஆமாடா! அம்பி சொல்லலை?”
நிஜ மாட்ச் என்றால் ரப்பர் அல்லது துணிப் பந்தில்லாமல், நிஜமாகவே கிரிக்கெட் பந்தில் மாட் விரித்து இரண்டு பக்கமும் ஸ்டம்ப் வைத்து அம்பயர்கள் சகிதமாகப் பாதுகாப்புக்கு கிளவுஸ் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடுவது. அந்த மாதிரி மாட்சுகள் எல்லாம் சமீபத்தில் எங்களிடையே வழக்கொழிந்து போயிருந்தன. ஏதோ பால்காரர் இல்லாதபோது தெருவில் சுவரில் கரிக்கோடிட்டு ரப்பர் பந்து தொலையும் வரை ஆடுவோம்.

கேவி ஒரு திசையில் பார்த்துக்கொண்டு ”ரெண்டு நாளாவது பிராக்டீஸ் பண்ணுவியோல்யோ? வரப் போறது பெரிய டீம்.”

”உனக்கேண்டா இந்த வம்பெல்லாம்? கேவி, பெரிய டீம்னா எங்கயாவது எக்கச்சக்கமா பந்து போட்டு மர்மஸ்தானத்துல பட்டுரப் போறது” என்றான் ரங்கு.
”அதெல்லாம் நான் பாத்துக்கறேன். என்னைப் பார்த்து நீ வரயோல்லியோ?” என்றான்.
”நெட் பிராக்டீஸ் போட்டு நல்லா விளையாடறவங்களை செலக்ட் பண்ணேன் கேவி.”




http://photogallery.sandesh.com/cms/uploadimages/Celebrity-cricket-match/02052010_201523750.jpg

”செலக்ட்டாவது ஒண்ணாவது. பதினோரு பேருக்கே இங்க சிங்கியடிக்கிறது..! நீ எதுக்கும் நாளைக்கு சாயங்காலம் ஹைஸ்கூல் மைதானத்துக்கு வந்துரு. புறப்பாடு ஆயிருக்கும். பெருமாள் சேவிக்கப் போகணும்” என்று விரைந்தான்.

கேவி கோவிலில் சில்லரை கைங்கர்யங்கள் எல்லாம் செய்வான். கூட்டத்தை விலக்க மாந்தோல் அடிப்பான். தேரின்போது பின்னால் கட்டை போட்டு நெம்புவான். டமாரம் அடிப்பான். முட்டுக்கட்டை போடுவான். வையாளியின்போது முன் வரிசையில் ஸ்ரீபாதந் தாங்கியாக இருப்பான்.

எனக்கு அப்போதே தஞ்சாவூர்க்காரர்களுடன் கிரிக்கெட் மாட்சைப் பற்றிக் கவலையாக இருந்தது. இதுவரை நான் ஆடின கிரிக்கெட் எல்லாம் ஓரங்கட்டின கிரிக்கெட்தான். அதாவது பன்னிரண்டாவது ஆசாமி, அல்லது ஸ்கோரர் என்று. ஒரு தடவை அம்பயர் ஆக இருந்தபோது எங்கள் காலேஜ் கட்சி அதட்டிக் கேட்டார்களே என்று எல்பிடபிள்யூவுக்குக் கைதூக்கிவிட்டேன்.

அந்த பாட்ஸ்மன் ‘நீ வெளிய வருவில்ல’ என்று பேனாக் கத்தியைக் காட்டி, முறைத்துவிட்டுப் போனான். ஆட்டம் முடிந்ததும் என்னை நாலு பேர் கக்கூஸ் கதவு வழியாக அடைகாத்துக் கடத்திக்கொண்டுபோக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது மறுபடி என் கிரிக்கெட் திறமைக்கு பரீட்சை! பார்க்கலாம். கேவி எல்லாம் பார்த்துக்கொள்வான். எனக்கு சந்தர்ப்பம் வருவதற்குள் ‘டிக்ளேர்’ செய்துவிடலாம். ஃபீல்டிங்கின்போது எங்கேயாவது டீப் தர்ட் மேனாக நின்றால் போயிற்று. தப்பித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.


மறுநாள் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ‘ஸ்ரீரங்கம் கிரிக்கெட் கிளப்’பின் முதல் வெள்ளோட்டம் பள்ளி மைதானத்தில் துவங்கியது.  கால் பாதுகாப்புக்காக இரண்டு பேடும் (Pad ) கட்டைவிரல் பகுதியில் ஓட்டையாக இருந்த ஒரு ஜோடி கிளவ்சும் விக்கெட் கீப்பருக்காக அதே ஏழ்மையுடன் பாதுகாப்புச் சாதனங்களும் திரட்டிவிட்டான். ஸ்டம்புகள் சிதைந்திருந்தன. சிங்க வாத்தியார் அன்றைக்கு மட்டும் ஸ்கூல் ஸ்டம்பு கொடுக்கிறதாகச் சொல்லியிருக்கிறாராம். என்னைப் பந்து போடச் சொல்லி கேவியே பாட்டிங் பயிற்சி செய்தான். எகிறி எகிறி அடித்து முள்ளுச் செடிகளில் எல்லாம் போய்ப் பந்து பொறுக்கச் சொன்னான். இருட்டினதும் எனக்கு பாட்டிங் கொடுத்தான். இரண்டே பந்தில் என் ஸ்டம்பைப் பெயர்த்துவிட்டான். ”கேவி நான் வரலைடா!” என்றேன்.


”பரவாயில்லை, தைரியமா ஆடு, சுமாரா ஆடறியே!”

அம்பிதான் கேப்டன். அவன் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். சின்னச் சின்ன பையன்களாக நான்கு பேர் உற்சாகமாகப் பந்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். ”பாக்கி ப்ளேயர்ஸ் எல்லாம் வரலையா?” என்று கேட்டதற்கு கேவி, ”இவங்கதான் ப்ளேயர்ஸ்! இவன் பாட் கொண்டு வரான். இவனைச் சேர்த்துண்டுதான் ஆகணும்” என்று ஒரு குழந்தையைக் காட்டினான்.

”நிச்சயம் தோத்துப் போயிருவோம்” என்றேன்.

”நீ ஏன் கவலைப்படறே? தோத்தா ஸ்கோர் ஏத்தறதுக்கு வேம்பு வரான். ஒரு பக்கம் எல்பிடபிள்யூ கொடுக்கறதுக்கு அம்பயர் நம்பாளு. இதெல்லாம் தேவைப்பட்டாத்தானே?”

தஞ்சாவூர் டீம் ஞாயிற்றுக்கிழமை ஜங்ஷனில் ரயில் மாறி பாசஞ்சர் பிடித்து வந்தார்கள். அம்பியும் கேவியும் நானும்தான் ஸ்டேஷனுக்கு அவர்களை வரவேற்கப் போயிருந்தோம். டீம் வந்து இறங்கினபோது எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா மாமாவாக, தடித்தடியாக இறங்கினார்கள். சிலர் கூடவே மனைவி மக்களையும் அழைத்து வந்திருந்தார்கள். எல்லோரும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ”பெரியவங்க யாரும் வரலையா தம்பி?” என்று கேட்டார் இருக்கிறதிலேயே உயரமாக இருந்த ஒருத்தர்.

”நாங்கதான் வந்திருக்கோம்.”

”உங்க டீம் கேப்டன் வரலையா?”

”இதோ இவன்தான் கேப்டன்” என்று அம்பியை முன்னே தள்ளினான்.

”இந்தப் பையனா?” என்று அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விஷமமாகச் சிரித்துக்கொண்டார்கள். ”தம்பி! நாங்க விளையாட வந்தது ஸ்ரீரங்கம் பி டீமோட இல்லை” என்றார்.

”ஏபி ஒண்ணும் கிடையாதுங்க. இருக்கறது ஒரே டீம்தான்” என்றான் கேவி.

”கிரிக்கெட் பால்தானே, கவர் பால் இல்லையே?” என்றார் சிரிப்புடன்.

”கிரிக்கெட் பால்தான்.”

”இல்லை, ரொம்ப சின்னவங்களா இருக்கிங்களே. பெரியவங்கள்லாம் கிரவுண்டில இருக்காங்களா?”

”இல்லைங்க. இருக்கறதுக்குள்ள பெரியவங்க நாங்கதான்.”
”அப்ப ராம்கி வா போயிரலாம். டீம் ரொம்ப தேசல். இவங்களோட எப்படி ஆடுறது?”
”பரவால்லை, ஆடிப்பாருங்க” என்றான் கேவி.

”எப்படி தம்பி ஆடறது? இதபார், ராம்கியைப் பாத்தல்ல, தென் மண்டலத்திலேயே ஃபாஸ்ட் பௌலர். மண்டை கிண்டை எகிறிக்கிச்சுன்னா யார் பொறுப்பு? எங்களை போலீஸ் புடிச்சுக்கும்! குழந்தைகளோட வெளையாட நாங்க வரலை. அதபாரு ஜான். எங்க விக்கெட் கீப்பர், உங்க மூணு பேத்தையும் இடுப்பில தூக்கி வெச்சுப்பார். சேச்சே, உங்ககூட நாங்க விளையாட முடியாதுப்பா. என்னவோ ஸ்ரீரங்கம்னா பெரிய டீம்னு அந்த சாமிநாதன் சொன்னாரு. அதனாலதான் பிக்னிக் போற மாதிரி கிளம்பி வந்தோம். ராம்கி, வா பேசாம கோயில் பார்த்துட்டு திரும்பிப் போயிரலாம். ரொம்பப் பொட்டி டீம் இது.”


நான் விக்கெட் கீப்பரைப் பார்த்தேன். ஆங்கிலோ இந்தியர். தன் மனைவி, சிவப்பு சிவப்பாக இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஸ்டைலாக உதட்டில் சிகரெட் பொருத்தியிருந்தார். என்னைப் பச்சைக் கண்களால் பார்த்து சிரித்தார். ”வாட் ஆர் யூ? பாட்ஸ்மன் பௌலர்?” என்று நக்கலாகக் கேட்டார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoqvL8V4qlGrqdROfZEaoa3cNOYQXh8QAn7S7Wu6JGRYI9p7XsO9ZEmvaMNn-w7QQlaxt40ZeifqjvFKnVuFHQjdgo_QZ5TOLZ92xbIphSmcfkRLLtiFV72wBW_n2OwRA5OWSayXKRj_2O/s400/valaimanai6.jpg

கேவி ”அப்ப வரமாட்டிங்க?” என்றான்.
”சேச்சே, நான்தான் சொன்னேனே.”
”பயப்படறிங்களா?”
ராம்கி சிரித்தார்.
”பயந்தாங்குள்ளி! ஆட்டம் தெரியாம என்னவோ காரணம் சொல்லித் தப்பிச்சுக்கப் பாக்கறீங்களா? பயந்தாங்குள்ளி! பயந்தாங்குள்ளி!” என்று இரைந்தான்.
”என்னடா சொன்னே?”
”நாங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். இப்ப போய் ஆடமாட்டேன்னு சொன்னா பயந்தாங்குள்ளின்னுதான் சொல்வோம்.”
அவர்கள் சிரித்துக்கொண்டே ”என்ன ராம்கி? சின்னப் பயங்களோட ஆடணுமா?”
”வந்தது வந்தோம், பாத்துரலாமே.”
”நீ ஃபுல் ஸ்பீட் போடாதே. பசங்க மேல எக்கச்சக்கமா பட்டுதுன்னா பிராணனை விட்டுருவாங்க.”
”அதெப்படி? பௌலிங்னா ‘பேஸ்’ போடத்தான் போடுவேன்.”
”கமான் பாய்ஸ், லெட்ஸ் ஹேவ் ஃபன்” என்று அவர்கள் கடைசியில் இசைந்தார்கள்.


எல்லோரும் பெரியவர்கள். துல்லியமாக வெள்ளைச் சட்டை, பேன்ட் எல்லாம் அணிந்திருந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த எல்லாம் புத்தம் புதுசாக இருந்தன. பாட்டில் விஜய் ஹஸாரேயின் கையெழுத்து பொறித்திருந்தது. புதுசாகப் பந்து பளபளவென்று செங்கல் சிவப்பில் மூன்று வைத்திருந்தார்கள். பிராக்டீஸ் பந்து வேறு ஆறு வைத்திருந்தார்கள்.

கிட் நிறைய கிளவ்ஸ், பேடுகள் என்று பயங்கரமாக நிரம்பி வழிந்தது. நாங்கள் இதுவரை பார்த்தே இராத அப்டாமன் கார்டு வைத்திருந்தார்கள். மைதானத்தில் அவர்கள் பளபளவென்று வந்து சேர்ந்தபோது வரதன் ”சைடு கட்டாதுடா, நான் போறேன்” என்றான். கேவி அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்தான். எனக்கு நெர்வஸாகத்தான் இருந்தது. வயிற்றை என்னவோ சங்கடம் பண்ணியது.


அவர்கள் சிரித்துக்கொண்டே மைதானத்தைச் சுற்றி வந்தார்கள். சின்னப் பையன்கள் மாட்ச் பார்க்க நூறு பேர் கூட்டம். கேவி சேர்த்திருந்தான். எல்லோரும் அந்த விக்கெட் கீப்பர் மாமா சிகரெட் பிடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராம்கி என்பவர் ஆறைரை அடி உயரம் இருந்தார். அங்கேயிருந்து ஓடிவந்து மாதிரிக்கு ஒரு பந்து போட்டுக் காட்டினார். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் போல தூள் பறந்தது. எனக்கு இப்போது வயிற்றில் பட்டுப் பூச்சிகள் விளையாடின.


அம்பிதான் டாஸ் போடப் போனான். தோற்றுவிட்டான்.



http://3konam.files.wordpress.com/2011/03/cricketcartoon.jpg

அவர்கள் ”மாட்சை சீக்கிரம் முடிக்கணும். நீங்களே பாட் பண்ணுங்க முதல்ல” என்று எங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.
பதினோரு மாமாக்களும் உற்சாகமாகப் பழைய பந்தைப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் இறங்கினார்கள். புதிய பந்தைச் சின்னக் குழந்தை போலப் போற்றித் தேய்த்துக் கன்னத்தைச் சிவக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.


கேவிதான் ஓப்பனிங். அவனுடன் செல்ல எல்லோரும் மறுத்தோம். கேவி கொஞ்ச நேரம் யோசித்து என்னைப் பார்த்தான். ”நீதான்டா வரணும்” என்றான்.
”அய்யோ, நான் மாட்டேம்பா. நான் எய்ட் டவுன் வரேன்!”
”சேச்சே, அனுபவம் உள்ள ஆள் யாரும் இல்லை. நீ வந்துதான் ஆகணும். என்ன விளையாடறே?”
”டீம்னு வந்தாச்சுன்னா கேப்டன் சொல்றதைக் கேட்கணும்” என்றான் அம்பி.
”அடப்பாவி, காவு வாங்கறீங்களேடா” என்று ஒற்றைப் பேடைக் கட்டிக்கொண்டு ”கொஞ்சம் இரு. நம்பர் டூ போய்ட்டு வந்துடறேன்” என்று ஓடினேன்.
அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற மாட்ச் துவங்கியது. கேவிதான் முதலில் பாட் செய்தான். நான் ரன்னர். அந்த ராம்கி அதிக தூரத்தில் புள்ளியாக நின்றுகொண்டிருக்க விக்கெட் கீப்பர் இருபது கெஜம் தள்ளி ஏறக்குறைய கேர்ள்ஸ் ஹைஸ்கூல்கிட்ட நின்றுகொண்டு ‘டேக் இட் ஈஸி ராம்கி’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

முதல் பந்து சரியாக பிட்சில் விழாமல் எங்கேயோ போக விக்கெட் கீப்பர் அதைப் பிடிப்பதற்குள் கேவி ”ஓடுரா” என்று ஒரு ‘பை’ எடுத்து என் பக்கம் ஓடி வந்து என்னைப் பந்தை எதிர்க்க அனுப்பிவிட்டான்.

‘கார்டு’ வாங்கிக்கொள்வதற்கு எல்லாம் எனக்குத் தோன்றவில்லை. உடல் பூரா எலக்ட்ரிக் ஹாமர் மாதிரி நடுங்கிக்கொண்டிருக்க, மறுபடி பாத்ரூம் போகும் இச்சையுடன் ஸ்ரீரங்கப் பெருமாளைப் பற்றிச் சில சுலோகங்களும் கலந்திருந்தன. அதோ… தூரப் பிரயாணி போல் அந்த ராம்கி என்கிறவர் தடதடவென்று சூட்டில் இருக்கும் காட்டெருமை போல் ஓடி வருகிறார். கை, ர் ர் ரென்று சுழல ஒரு கரு ரத்தக் கட்டிபோல் பந்து என்னை நோக்கி வந்து டமால் என்று என் காலில் படுகிறது. ‘ஹெளஸாட்!’ என்று மைதானம் முழுவதுமே அலறுகிறது! ஆனால் எங்கள் கட்சி அம்பயர் பையாக் குட்டி ஞானம் பெற்ற புத்தர்போல் அசங்கவில்லையே! ராம்கி அவனை அற்பப் புழுபோலப் பார்த்தார்.


அடுத்த பந்து பற்றி என்னால் ஏதும் எழுத முடியவில்லை. கம்பராமாயணத்தில் வில் உடைத்ததுபோல வந்தது. என் பாட்டில் எங்கோ பட்டு பவுண்டரிக்குப் பிய்த்துக்கொண்டு ஓடியது. எல்லோரும் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாலும் எனக்கு நான்கு ரன்கள் கிடைத்ததற்குச் சின்னப் பயல்கள் விசிலடித்துக் கைதட்டினார்கள். எனக்குக் கொஞ்சம் புளகாங்கிதமும் பயத்துடன் சேர்ந்துகொண்டது. அடுத்த பந்து மற்றொரு ‘ஹெளஸாட்!’ கேட்டு முடிப்பதற்குள் கேவி ஓடுரா ஓடுரா என்று ‘லெக் பை’க்கு ஓடிவந்துவிட்டான்.


மொத்தம் ஆறு ரன் ஆகிவிட அந்த ராம்கி சற்றுக் கோபத்துடன் டீப் ஃபைன் லெக்கில் ஒரு ஆளை நிறுத்தி இன்னும் கொஞ்சம் அடியெடுத்து இன்னும் கொஞ்சம் தூரம் போய் ஓ…டி வந்து கேவியின் தலைக்குமேல் பெரிசாக பம்பர் போட்டார்.

கேவி அஞ்சா நெஞ்சன்! என்னவோ மாதிரி பாட்டை வைத்துக்கொண்டு ஒரு வீசு வீச பந்து பட்டு ஏறக்குறைய இரண்டு தென்னைமர உயரத்துக்கு எவ்வியது. ராம்கி நிறுத்தி வைத்திருந்த ஃபீல்டருக்கு, அருமையாக அழகாக ஒரு காட்ச் வந்தது. அவருக்கு நிதானமாக பந்தின் கீழ் அட்ஜஸ்ட் பண்ணி நின்றுகொள்ள ஏக சமயம் இருந்தது. சிரித்துக்கொண்டு கையைத் தேய்த்துக்கொண்டு கீழே வரும் பந்தை வாங்கி வழியவிட்டார்! சற்று அசட்டு முகத்துடன் ”ஸாரி கேப்டன். தி ஸன் வாஸ் ஆன் மை ஐஸ்!” என்றார். இதற்குள் கேவி கவலைப் படாமல் என்னுடன் ஓடி இரண்டு ரன் எடுத்துவிட்டான்.


கேப்டன் ராம்கி, ”பரவாயில்லை. அடுத்த பால்ல எடுத்துரலாம்” என்று திரும்பி தன் பௌலிங் ஆரம்பத்துக்குப் போனார்.
அடுத்த பாலும் கேவியை எடுக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பாலும் முடியவில்லை. நானும் கேவியும் முதல் விக்கெட்டுக்கு ஐம்பத்து ஐந்து ரன்கள் செய்தோம். அதில் நாற்பத்தெட்டு கேவி. முதலில் அடித்த நான்குக்கு அப்புறம் என்னை ஆடவே விடவில்லை. ஆறாவது பந்து, டாண் என்று ஒரு ரன் எப்படியாவது எடுத்து விடுவான். ‘ஓடுரா ஒடு!’ எங்கள் முதல் விக்கெட் ஜோடியைப் பெயர்க்க ராம்கி ஆங்கிலோ இந்தியரிடமும் மற்ற ஸீனியர் மெம்பர்களிடமும் அடிக்கடி கூடிப் பேச வேண்டியதாகிவிட்டது.


கடைசியில் என்னைக்கூட ரன் அவுட்தான் செய்ய முடிந்தது. கேவி பேராசையுடன் எடுக்க முயற்சித்த மூன்றாவது ரன்னுக்கு விழுந்தேன். நான் திரும்பி வந்தபோது என்னவோ செஞ்சுரி போட்ட மாதிரி எல்லோரும் கை தட்டினார்கள். கேவி என்னை மாதிரியே மற்ற பேரையும் நாக்கு உலர ஓடவைத்தே, மொத்தம் 152 ரன் எடுத்துவிட்டோம். கேவி அதில் 93, கேவி சைபரில் இருக்கும்போது அந்த லட்டு மாதிரி காட்சை விட்ட அந்த ஆசாமிகளை எல்லோரும் சபித்துக்கொண்டே வந்தார்கள். அவன் தாழ்த்தப்பட்டவன்போல மூலையில் அடிக்கடி தலையை ஆட்டிக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான்.

அந்த மாட்சில் நாங்கள் வென்றது செய்தியல்ல. இதிலும் கேவியின் தந்திரம்தான் அவர்களை 139இல் அவுட் ஆக வைத்துவிட்டது.

தஞ்சாவூர்க்காரர்கள் திரும்பிப்போகும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. மறு மாட்சுக்கு தஞ்சாவூர் கூப்பிட்டார்கள். எங்கள் ஸ்டார் ப்ளேயர் வரவில்லை என்றார்கள். கேவி புன்னகையுடன் ”ஊம். தாராளமாக வரோம்” என்றான். ”தோத்தாங்குள்ளி தோல் புடுங்கி” என்று நடனமாடிய சிறுவர்களைக் கட்டுப்படுத்தினான்.

சும்மா பொழுது போகவில்லை என்று அன்று அங்கு வந்திருந்த ‘எக்ஸ்பிரஸ்’ ஏஜண்டும் நிருபரும் மறுநாள் எங்கள் வெற்றியைப் பற்றிச் செய்தி அனுப்பி K.V.Srini vasan was ably supported by Rangarajan, varadan and Ambi sundar….made a Sparkling 93′ என்று ஒரு மஹா ஓரத்தில் பேப்பரில் பேர் வந்தது. இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த ஒரு தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத் திரும்பக் கிடைக்கவில்லை.


அந்த மறு மாட்ச் நடக்கவில்லை. எல்லோரும் அதன் பின் சிதறிவிட்டோம். சிலர் மணந்துகொண்டோம். சிலர் இறந்துவிட்டோம். இருபத்தைந்து வருஷம் கழித்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்தபோது கேவியைப் பார்த்தேன். என்னதான் நரைத்த தலையாக இருந்தாலும் கண்களில் பிரகாசம் போகவில்லை. ‘என்ன, இன்னொரு மாட்ச் ஏற்பாடு பண்ணட்டுமா?’ என்றான்.





http://www.writermugil.com/wp-content/uploads/2010/02/doni-krish.jpg

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் கதை! எப்போதோ படித்ததும் மீண்டும் உங்கள் தளம் வாயிலாக படிக்கவைத்தமைக்கு நன்றி!

raji said...

sujatha the great.thanks for sharing

nellai அண்ணாச்சி said...

சுஜாதாவின் குறும்பும் நகைச்சுவைக்கும் எப்போ படித்தாலும் இனிமைதான் நன்றி

Unknown said...

very very interesting story. Thank you.

Unknown said...

suresh kumar, vengaivasal.

Thank you for sujathas beautiful story.