கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.
குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் செய்திகளின் பத்தியில் நீங்கள் அவனை வாசிக்கிறீர்கள்.
விமான நிலைய அலுவலர்கள் அவனை ஆல்பர்ட் என்று அழைக்கிறார்கள்.தன்னுடைய சிவப்புப் படுக்கையையும் பழகி நைந்துபோன சூட்கேசையும் புத்தகங்களையும் நேசித்துக்கொண்டு அவன் பிரிட்டனை மறக்க முயற்சி செய்கிறான்.காலையில் ஐந்தரை மணிக்கு இருட்டு விலகும் முன்பே அவன் விழித்தெழுகிறான்.
குளியலறைக்குப் போய் குளித்து சவரம் செய்து , பிரிட்டனுக்குப் பறந்து செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பகல் முழுவதும் விமான நிலைய பெஞ்சில் அமர்ந்து படிப்பில் மூழ்கியிருக்கிறான்.அழகான விமானப் பணிப்பெண்களும் கம்பெனி ஊழியர்களும் ஓட்டல் பணியாளர்களும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் அவனிடம் நலம் விசாரிக்கிறார்கள்.மிக மெதுவான சத்தத்தில் ஆல்பர்ட்டும் அவர்களை நலம் விசாரிக்கிறான். ஒரு கட்டுக்கதைபோல பத்திரிகைகளில் நீங்கள் அந்த மனிதனை வாசிக்கிறீர்கள்.
தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆல்பர்ட்டுக்குப் புகார்கள் எதுவும் இல்லை.விமான நிலைய அலுவலர்கள் கொடுக்கும் வவுச்சர்களால் அவன் பட்டினியில்லாமல் சமாளித்துக்கொள்ளுகிறான்.தான் வசிக்கிற அந்த விமான நிலையம் எந்த இடத்திலிருக்கிறது என்று கூடத் தெரியாமல் கனவில் வாழ்வது போல அவன் காலம்கழித்துக்கொண்டிருந்தான்.
வரைபடத்தில் அந்த இடம் எங்கேயிருக்கிறது என்று ஆல்பர்ட் தேடிக்கொண்டிருக்கிறான்.ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாததுதான் அவனைப் பொறுத்தவரை மிகவும் துரதிருஷ்டமான உண்மையாக இருந்தது.நிலப்படத்தை விரித்துப் போட்டு பைத்தியக்காரனைப்போல புவியியலுக்குள் அலைந்து திரிந்தும் பிரிட்டன் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் தத்தளிக்கிறான்.
பத்திரிகைகளில் செய்தியுடன் ஆல்பர்ட்டின் படமும் இருக்கிறது.குளியலறைக் கண்ணாடியில் அவன் சவரம் செய்கிறான்.அவன் தன்னுடைய முக சருமத்தில் வளரும் துக்கத்தின் மஞ்சள் படலத்தையும் நரைத்த ரோமங்களையும் மழிக்க முயற்சி செய்கிறான்.சவரம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு வெளிறிய அமைதியினூடே அந்த முகத்தில் துக்கத்தின் புன்னகையும் ஒளிருகிறது.தான் வாழ்க்கையை நேசிப்பதாக அவன் மௌனமானக்ச் சொல்லுவதுபோலத் தோன்றுகிறது.ஆல்பர்ட்டின் வழுக்கையேறிய தலையும் ஒடுங்கிய கன்ன எலும்புகளும் கருணைக்காக யாசிப்பதுபோல உங்களை உற்றுப் பார்க்கின்றன.
குளியலறைக் கண்ணாடியில் சவரம் செய்யும்போது ஆல்பர்ட்டிடம் அசைவே இருக்காது.விமான நிலையச் சிற்றுண்டிச் சாலையில் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் சாப்பிடும்போது அவனுடைய கை மட்டும் உதடுகளை நோக்கி உயரும்.சிவப்பு பெஞ்சை அடையும்போது அவன் புத்தகத்தில் கண்களைப் புதைத்து உட்காரும் உருவமாக மாறுகிறான்.
ஆல்பர்ட் அணிந்திருக்கும் உடைகள் நிழிந்து தொங்கத் தொடங்கியிருக்கின்றன.என்றாவது ஒருநாள் தன்னால் பிரிட்டன்னுக்குப் போய்ச் சேரமுடியுமென்று நம்பும்போதே ஒருபோதும் அப்படி சம்பவிக்காது என்பதும் அவனுக்கு நிச்சயமாக இருந்திருக்கவேண்டும். எனினும் ஒரு நம்பிக்கையை அவன் இறுகப் பிடித்திருந்தான்.ஒரு பட்டுப் பூச்சியின் சிறகு வீச்சுப்போல ஆல்பர்ட்டின் இதயத்தில் ஒரு இளங்காற்று மிச்சமிருக்கிறது.
நீங்கள் மீண்டும் ஆல்பர்ட்டைப் பார்க்கிறீர்கள்.தன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும் இதய வேதனையையும் உணர்ச்சியின்மையையும் அவன் சவரம் செய்கிறான்.அவனுடைய குழிந்த கன்ன எலும்புகளிலும் விழிப்பள்ளங்களிலும் மரணத்தின் படலங்கள் விழுந்திருக்கின்றன.அவன் மீண்டும் மீண்டும் சவரம் செய்கிறான்.காலத்தைத் தோற்கடிப்பதற்காக அவன் அதைத் தொடருகிறான்.
கடைசியான போது ஆல்பர்ட்டின் முகத்திலும் உதடுகளிலும் மின்னியிருந்த புன்னகை மறைந்தது.அவனால் சிரிக்கவோ ஏதாவது பேசவோ முடியவைல்லை. தன்னுடைய புத்தகங்களையெல்லாம் அவன் சுரண்டித்தின்றிருந்தான். பயணிகளில் சிலர் அந்த செத்துப்போன மனிதனிடம் சௌக்கியங்கள் விசாரித்து இன்னொரு உலகத்துக்குக் கடந்து சென்றார்கள்.பிரிட்டன் அப்போதும் அவன் மூளைக்குள்ளே ஒரு பழைய கனவாக மிஞ்சியிருக்கிறது….
விமான நிலையப் பணியாளர்களுக்கு ஆல்பர்ட் ஒரு தொந்தரவாக மாறியிருந்தான்.அவனுக்கு இலவசமாக வவுச்சர்கள் கொடுக்கும் வழக்கதையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள்.அவனுடைய இதயத்தில் இளங்காற்றும் முடிந்துபோயிருந்தது.ஆல்பர்ட்டின் வாழ்க்கை நிச்சலனமல்லாமல் வேறு என்ன ?
ஒரு விடியற்காலையில் பத்திரிகையில் குளியலறைக் கண்ணாடிக்குக் கீழே விழுந்துகிடக்கும் ஆல்பர்ட்டை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவனுடைய தாடையெலும்புக்கு கீழே கழுத்து நரம்புகளில் ரத்தம் கசிந்திருக்கிறது. அவனுடைய சூனியமான கண்கள் மேற் சுவர்களில் பதிந்திருக்கின்றன.வினோதச் செய்திகளின் பத்தியில் வியப்பூட்டும் ஒரு கொலையையோ திவ்வியமான ஒரு காதல் கதையையோ நீங்கள் தேடுவதாக இருக்கலாம்.விவாதிப்பதற்காக , மெய் சிலிர்ப்புடன் புன்னகை பூப்பதற்காக , சமையலறையிருந்து கண்ணீரைத் துடைத்துக்கொள்வதற்காக ஒரு கதையை நீங்கள் எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
அநேக வருடங்களுக்குப் பிறகு அந்த விமான நிலையத்தின் சிவப்பு பெஞ்சில் இறந்துபோன ஆல்பர்ட்டின் களிம்பேறிய மஞ்சள் நிற முகச்சாயலில் இன்னொருவன் இடம்பிடித்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவன் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான்.பசியிலும் தனிமையிலும் வதங்கி துக்கத்தின்மஞ்சள் முகத்துடன் அவன் பிரிட்டனைக் கனவு காண்கிறான். ஒருவேளை , உலக முடிவுவரை அங்கே அதுபோல அநேக மனிதர்களை நீங்கள் பார்க்க நேரலாம்.
வரைபடத்தில் எங்கே பிரிட்டன் என்று தேடுவதற்கிடையில் படத்தின் கோடுகள் அவர்களது தலையெழுத்துபோல சிக்கலாகின்றன.ஒருவேளை அந்த கண்டமே பூமியின் மறுபக்கம் எங்காவது இருக்கலாம் என்று அவர்கள் யோசிக்கலாம்.அல்லது அந்த இடம் வேறு ஏதாவது கிரகமாக இருக்கலாம் என்று நினைப்பார்களாக இருக்கலாம்.இந்த உலகமும் மறக்கப்பட்ட கண்டங்களின் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு எதிராக மறக்கப்பட்ட நிலைப்பாட்டைக் கைக்கொள்ளுகிறார்கள்.
கடந்துபோகும் நூற்றாண்டுகளுக்கிடையில் மகா நகரங்களில் விமான நிலையங்களிலும் ரெயில்வே ஸ்டேஷன்களிலும் விசாவும் டிக்கெட்டுமில்லாமல் அவர்கள் நிரந்தரமாக வசிக்கிறார்கள் – எவருமில்லாதவர்களாக , பசியில் நடுங்கிக்கொண்டு.பிச்சையாகக் கிடைக்கிற வவுச்சர்கள் மூலம் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் தின்று கொண்டு அந்த உலகக் குடிமக்கள் கனவு காண்கிறார்கள்.
ஆசிரியர் பற்றிய குறிப்பு
தாமஸ் ஜோசப்
எர்ணாகுளம் மாவட்டம் ஏலூரில் 1954 இல் பிறந்தவர். ஆலுவாய் பாக்ட் டவுன் ஷிப் பள்ளியிலும் செயிண்ட் பால் கல்லூரியிலும் கல்வி கற்றார்.மனைவி ரோசிலி , குழந்தைகள் தீப்தி மரியா , ஜெஸ்ஸே ஆகியோருடன் ஆலுவாயில் வசிக்கிறார்.
மிக வித்தியாசமான கதைகளை எழுதியிருப்பவர் தாமஸ் ஜோசப்.அதற்கான அங்கீகாரம் மிகக் குறைவாகவே பெற்றிருப்பவர். 1995 இல் கதா விருதும் , 96 இல் எஸ்.பி.டி.விருதும் பெற்றார்.உலகமுடிவுவரை என்ற இந்தக் கதை கே.ஏ.கொடுங்ஙல்லூர் விருதைப் பெற்றது.
ஓர் ஆங்கில நாளிதழில் பிழை திருந்துநராகப் பணியாற்றி வருகிறார்.
2 comments:
1 நாளைக்கு 1 போஸ்ட் போடுவதே குதிரை கொம்பாக இருக்கு...ம்ஹூம் எழுதுங்க...
அப்புறம் எங்க வீட்டு தேங்காய்க்கு கண்,காது,மூக்கு(குமிடி)எல்லாம் இருக்குங்க..ஹி..ஹி
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் terminal படத்தின் கதையும் இதேதான். அதில் அமெரிக்கா விமானநிலையம்.டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வந்தது.டெர்மினலில் தங்கி லவ் பண்ண ஆளே கிடைச்சிடும்....இந்த கதை எந்த வருடம் எழுதப்பட்டது? The Terminal வந்த ஆண்டு 2004
Post a Comment