‘கரகாட்டக்காரன்’ படத்தில் கார் காமெடியில் ‘பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம், பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்’ என்று கூவி கவுண்டமணியிடம் அடிவாங்கும் நகைச்சுவை நடிகர் குள்ளமணியையும், அந்த காமெடி காட்சியையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அறுபது வயது குள்ளமணியை கே.கே.நகரில் அவரது வீட்டில் சந்தித்தோம். அவரைப் போலவே அவரது வீடும் அநியாயத்துக்கு தக்குனூண்டு. காலம் அவர் தோற்றத்திலும் வறுமை அவரது வீட்டிலும் தங்களது ரேகைகளை ஓடவிட்டிருந்தன.
நமக்கு யாரெல்லாம் வாழ்வு தந்து வழிகாட்டுறாங்களோ அவங்க கடவுளுக்கு இணையானவங்க. எனக்கு வாழ்வு தந்து விளக்கேத்தி வெச்சவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். எனக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம்.
நான் இப்படி குள்ளமாகப் பிறந்ததால் எனது தாய்-தகப்பன், சகோதரர்கள், உறவுகள் என நிறைய பேர் வருத்தத்தோடும், அவமானமாகவும் பார்த்தாங்க. பிற்காலத்தில் நான் சினிமாவில் நடிச்சு பிரபலமானப்போ ‘மணி நம்ம பையன்’னு பெருமையாகச் சொன்னாங்க. இதுதாங்க சினிமாவோட வலிமை"- என பெருமைபொங்கச் சொல்கிறார் குள்ளமணி.
பிழைப்புத் தேடி சென்னை வந்த நான் ஜெய்சங்கரிடம் உதவியாளராய் வேலைக்குச் சேர்ந்தேன். அவர்தான் என்னை சினிமாவில் சேர்த்து விட்டார். ‘சுப்பிரமணி’யாக இருந்த என்னை ‘குள்ளமணி’ என பெயரிட்டவரும் ஜெய்சங்கர்தான். அவர் நடித்த ‘நவாப் நாற்காலி’ என்னுடைய முதல் படம். அதன் பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி என ஆம்பித்து கமல், ரஜினி என தொடர்ந்து தனுஷ் வரை நடித்திருக்கிறேன்.
அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி, ஒரிய மொழிப் படங்களில் கூட நடிச்சுருக்கேன். தெலுங்கில் என்.டி.ஆர்., என்.டி.ஆர். மகன்கள், பேரன் என மூன்று தலைமுறையுடன் நடித்து விட்டேன். திரையுலகில் அனைத்துக் கலைஞர்களும் என்னிடம் அன்பாகத்தான் இன்னைக்கு வரைக்கும் பழகுறாங்க. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நான் இப்ப இருக்கிற வீடு கிடைக்கிறதுக்குக் காரணம்," என்று நன்றியுடன் எம்.ஜி.ஆரை நினைவுகூர்கிறார்.
எனக்குக் கல்யாணம் ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தார். நான் நலம் விசாரிக்கப் போனேன். ‘மணி, எனக்கு உடம்பு சுகமில்லாம போனவுடனே, கவனிக்க என் சம்சாரம், உறவுகளெல்லாம் பக்கத்துல இருக்காங்க. உனக்கு இது மாதிரி வேணும், போய்க் கல்யாணம் பண்ணிக்க" என்றார். நான் அவரின் அறிவுரைக்கேற்ப கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவி ராணி நல்ல உயரமாய் இருப்பாங்க. எங்களுக்குள் நெட்டை-குட்டை பேதமெல்லாம் கிடையாது. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க.
நான் வழக்கமாக சபரிமலைக்கு மாலை போடுவேன். அப்போ ஒரு சமயம் கருப்புச் சட்டை-வேட்டி கெட்டப்பில் டைரக்டர் என்.கே.விஸ்வநாதன் வீட்டுக்குப் போனேன். நான் போன சமயம் வீட்டில் எல்லோருமே டி.வி.யில் பேய்ப் படம் பார்த்துக் கிட்டிருந்தாங்க. கதவைத் தட்டியவுடன் திறந்து என்னைப் பார்த்தவங்க, ஏதோ டி.வி.யில் பார்த்த பேய்தான் வந்திடுச்சுன்னு நினைச்சு பயந்துட்டாங்க.
‘நீங்க பயப்படும் மாதிரி நான் பேய் கிடையாது சாமி - அய்யப்ப சாமி’ன்னு சொல்லி பயத்தைப் போக்கினேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ உட்பட பல படங்களில் இளையராஜா ‘குள்ளமணி’ன்ற என் பேர் வர்ற மாதிரி பாட்டுக்கு மெட்டு அமைத்திருப்பார். ஒருமுறை ராஜா சாரிடம் ‘ஏன் என் பெயர் பாடலில் வர்ற மாதிரி மெட்டு போட்டீங்கன்னு?’ கேட்டேன். அதுக்கு அவர்,‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுதான்ற பாட்டில் ஒரு இடத்தில் உன் பெயர் வருது, கல்யாண வீட்டில் இந்தப் பாட்டைப் போடுவாங்க. மங்களகரமான நிகழ்ச்சிகளில் உன் பெயரைச் சொல்றது நல்ல விஷயம்தானே? ரொம்ப நாளாய் உன்னைத் தெரியும். நீ ரொம்ப நல்லவன். உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிச்சு, என்னால முடிஞ்சதைப் பண்ணினேன்’ என்றார்.
ஒரு நிமிடம் நான் நெகிழ்ந்து போயிட்டேன். இந்த மாதிரி பெரியவங்களோட அன்பும், ஆசீர்வாதமும்தான் என் சொத்து.
நான் தற்சமயம் அறிமுக இயக்குனர்கள் மற்றும் மன்சூர் அலிகான் படங்களில் நடிக்கிறேன். தவிர, ஸ்டார் நைட் என்ற பெயர் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளைப் பல்வேறு ஊர்களில் நடத்துகிறேன். சினிமாவில் உழைப்பு, திறமையைவிட, நேரம் ரொம்ப முக்கியம். எனக்கு புரட்சித் தலைவியின் கையால் கலைமாமணி விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.
ஷூட்டிங் நடக்கிற சமயத்தில் என் உருவத்தைப் பார்த்து ரசிகர்கள் சிரிப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க. நடிகர்களின் காதல் கிசுகிசு பத்தி தெரியுமான்னு கேட்பாங்க. பதில் சொல்லலைன்னா அடிக்க வருவாங்க. இதுகூடப் பரவாயில்லை. ஷூட்டிங்குக்காக, பயணம் செய்யும் போது, ரயிலில் என்னால் வேகமாக ஏற முடியாது. உடனே படக்குழுவினரில் ஒரு சிலர் கிண்டல் பண்ணுவாங்க. கோபப்படுவாங்க. இந்தச் சூழ்நிலைகளில் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். உங்களைச் சிரிக்க வைக்கும் என்னைப் போன்ற குள்ளர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாதீங்க," என்கிறார்.
நன்றி - கல்கி, புலவர் தருமி
படங்கள்: ந.சுந்தர்ராஜன்
1 comments:
உங்கள் ப்ளாக்கில் படிக்க வருபவரிடம் வலுகட்டாயமாக பாடல்களை போட்டு திணிப்பது எரிச்சல்களை தருகிறது.
பதிவு உண்மையை உறைக்கிறது.நன்றி !
Post a Comment