Thursday, June 28, 2012

ஈழத்தமிழர்கள் விஷயத்தில் கலைஞர் அடித்த பல்டிகள் - பழ நெடுமாறன் கட்டுரை

http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpgதமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். 


 தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 


 அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்தின் முற்பகுதியில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழ்நாட்டில் ஈழப்போராளிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கு தங்கியிருக்கவும் மக்களிடையே தங்கள் போராட்டத்தைக் குறித்துப் பிரசாரம் செய்யவும் நிதி திரட்டவும் தாராளமாக அனுமதிக்கப்பட்டார்கள்.  ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும். 


ஆட்சியும், அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக்கூட அசைக்க அவர் தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 


 1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-73 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  ""இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா?'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ""போராட்டத்துக்கு ஆதரவில்லை'' எனத் திட்டவட்டமாகக் கூறினார்.  


அதேயாண்டில் தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்ட "டெலோ' இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிமருந்துகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது. குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை அதிகாரிகள் வந்து கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். 

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


இதன் விளைவாக, ஈழப்போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவர்களல்ல. நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான். 


 1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை.


 ஆனால், அப்போது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய வி.பி. சிங் அந்த உடன்பாட்டை மிகக்கடுமையாகக் கண்டித்தார். அது மட்டுமல்ல, அன்னிய நாடு ஒன்றின் உள்பிரச்னையை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பியதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.  1989-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் ராஜீவ் பதவி விலக நேர்ந்தது. 


அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.  இலங்கையில் இனப்பிரச்னை தொடர்பாக ஈழத் தமிழர் தரப்பினர் அனைவரையும் அழைத்துப் பேசி அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டார். அவர் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். அதாவது, ஈழத் தமிழர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.


  கருணாநிதியின் அழைப்பை மதித்து, ஏற்று அவருடன் பேசுவதற்காக பாலசிங்கம், யோகி ஆகியோரை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன தெரியுமா?  இந்திய ராணுவத்தினால் இலங்கையின் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறினார் கருணாநிதி.


  இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்களையும் வரதராசப் பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களையும் விரிவாக பாலசிங்கம் எடுத்துக்கூறினார். 


 புதிய தேர்தல் நடத்தி அந்தத் தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வர புலிகள் தயாராக இருப்பதாக பாலசிங்கம் கூறினார். அதைக் கருணாநிதி ஏற்கவில்லை என்பதுடன் நிற்கவில்லை. தில்லி சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்துப் பேசி, புலிகள் தனது யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி நழுவி விட்டார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமது பணி முடிவடைந்துவிட்டதாகவும் இனி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும் கூறி இப்பிரச்னையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி.


  தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த போராளிகள் சிகிச்சை பெறவும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhekGnWLPbZyffxhoAIFz4aJWZRxGnvKukCX5SVvhVn5jyFRf5HrNA26DFuTuLv7J7aGF618nSDSEoD2W39ZvmRJSrS2UOEwRkSfnmv3j9kt8q8LHugovt_1IEAjCnyuwHES74rcQ8spNU9/s1600/aftermath+war.JPG

 மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பணத்தைப் பறிமுதல் செய்தார்.  இதுகுறித்து 23-7-1997 அன்று எனக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தில் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி வந்தவர்களுக்கு கருணாநிதி செய்த கைம்மாறு இதுதான்.  24-8-1990-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் ஈழப்பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். 


அப்போது அவர் ""தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம்'' என்று கூறினார். ஆனால், அதில் உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. இவ்வாறு கூறியதையே பிற்காலத்தில் மறுத்தார்.  மீண்டும் அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்தபோது 14-5-2000 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார்: ""தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறியதற்கு அவ்வாறு தனி ஈழத்தை அமைக்கக் குரல் கொடுப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது.


 தனி ஈழத்தை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வேறுவிஷயம். தனி ஈழம் அமையத் தமிழ்நாட்டின் சார்பில் குரல் கொடுப்பேன் என்ற பொருளில் அல்ல நான் பேசியது. அங்குள்ள தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன்'' என்று கூறினேன் என்றார்.  



இரண்டே நாட்களில், 16-5-2000 அன்று அவருடைய உள்ளக் கிடக்கையையும் புலிகள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக வெளியிட்டார். ""விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது'' என்றார்.  



தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கானத் தமிழர்களைச் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்தபோது தமிழக மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்திய அரசிற்கு எதிரான உணர்வு வெடித்து வெளிப்பட்டது.  இந்திய அரசையும் தனது அரசையும் மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்


. இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி, "அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். 


அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதை வரவேற்றனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் உலகமெலாம் இருந்த தமிழர்களின் மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.  ஆனால், 12 நாள்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலையெடுத்தார். 26-10-2008 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

http://inioru.com/wp-content/uploads/2010/06/8.jpg



 எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை எனக் கருணாநிதி அறிவித்தார்.  அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சியான பிறகு மீண்டும் தமிழீழப் பிரச்னையைப் பேசத் தொடங்கி இருக்கிறார். 18-4-2012 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ""இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தரவேண்டும்'' என வற்புறுத்தினார். 


 இப்போது ""ஈழத்தை உருவாக்கும் பணியில் மீண்டும் ஈடுபடப்போவதாகவும் அதை விரைவில் காண்பதற்காகவே தான் உயிரை விட விரும்புவதாகவும்'' உருக்கமான வசனம் பேசியிருக்கிறார்.  கடந்த மூன்று முறை இவர் பதவி வகித்த காலகட்டத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை. இவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட்ட வேளையில் கூட அதை நிர்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க இவர் எதுவும் செய்ததில்லை. 


மாறாக, ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தவர் கருணாநிதி.  தமிழ் ஈழம் அமைவதற்குக் கருணாநிதி சமீபகாலமாகக் காட்டி வரும் ஆர்வமும், ஈழத் தமிழர்கள்மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பாசமும் புல்லரிக்க வைக்கிறது. ஆட்சியையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டதைத் தவிர, ஈழப் பிரச்னையில் அவர் எப்போதாவது உள்ளார்ந்த அக்கறை காட்டியிருக்கிறாரா என்பதை அவரது மனசாட்சியிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு அவர் பேசட்டும்.



 ""எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என நாமக்கல் கவிஞர் பாடிய திரைப்படப் பாடல் கருணாநிதிக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.  1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி  உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க  இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை.   

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_200.jpg



மக்கள் கருத்து

1. பதவிக்காக கொள்கையில் சோரம் போனவர்களில் தலைமையானவர் இனத்துரோகி கருணாநிதி. இவர் பேசும் தமிழ்,தமிழர் எல்லாம் சந்தர்ப்பவாதத்திற்கு மட்டுமே. தன் வாழ்நாளிலேயே கபடதாரி என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டது சந்தோசமே!
By ஷாலி  



2. நன்றி, ஐயா. என் வாழ்வில் மறக்க முடியாத தற்கால தமிழர் வரலாற்றில் மன்னிக்க படமுடியாத ஒரு இன துரோகி திரு.கருணாநிதி. திரு.வி.பி.சிங் காலத்தில் எளிதில் தனி தமிழ் ஈழம் பெற்றிருக்க முடியும்.ஆனால் விடுதலை புல்களுக்கு பெருமை கூட கூட கூடாது என்று எண்ணியேகருணாந்தி செயல்பட்டுள்ளார். இன்று எவ்வளவு பெரிய அழிவினை ஈழ தமிழ் இனம்ஏற்றுள்ளது! அத்தனையும் தவித்திருக்க படவேண்டியதுதானே.!!

By P .Padmanaabhan


3.  அருமையான தலையங்கம். ஜயா தான் புலிகள் மீது எப்போதும் வெறுப்பு காட்டினார் என்று கூறும் கருணா ஜெயா அவரை மாதிரி தன சுய நல்த்திர்க்க்காகவுன் பணம் சேர்ப்பதற்காகவும் வாரிசு அரசியலகுக்க்காகவும் தி மு க போன்ற ஒரு உயர்ந்த இயக்கத்தை குடும்ப இயக்கமாக மாற்றி மக்களை ஏமாற்றவில்லை . ஜெயா எப்போதும் புலிகளை அண்டிக் கெடுத்ததில்லை .திராவிட தெலுங்கு தமிழன் நாடகம் தமிழ் இனம் அழிவுக்கு காரணம் , .மலையாளி எம் ஜி ஆர் தமிழன் நலனுக்காக பாடுபட்டவர் . அதனால் தான் இன்றளவும் அவரைப்பற்றி பேச கருணாவிற்கு திராணி தைர்யம் இல்லை.இப்போதும் தமிழன் அழிவில் முக்கிய பாத்திரம் வகித்த ஆர்யா பார்ப்பானை கலாம் அவர்களை கலகம் என்று கூறி அரசியல் செய்கிறார் ,தமிழனை நெஞ்சில் குத்துகிறார்

By ர.Krishnamurthy 

4. தமிழன்னைக்கு பிறந்த தமிழின பச்சை தொரோகி


By SARAVANAN 
http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/c.jpg 
 நன்றி - தினமணி, தமிழ் உலகம்,முத்தமிழ்

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

கருணாநிதியின் கபட நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் பதிவு!இந்த பெரிசு இன்னும் திருந்தலியே!

Anonymous said...

நல்லதொரு பதிவு.. பல வரலாற்றுத் தகவல்களைக் கொடுத்து கருணாநிதியின் கபட நாடகத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள். ஆனால் மக்கள் இன்னும் கருணாநிதியை நம்புகின்றார்கள். பல தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சனைக் குறித்த விழிப்புணர்வே இங்கில்லையே என்பது தான் வருத்தமளிக்கின்றன ... !!!

இன்னும் பல பேர் வேலைக்குப் போன இடத்தில் தனிநாடு எதற்கு எனப் பேசுகின்றார்கள். அடப்பாவிகளா ? ஈழத்தமிழர்கள் அங்கு பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் உண்மை கூட பலருக்கு இங்கு தெரியவில்லை .... !!!