Wednesday, June 06, 2012

ஆ ராசாவின் உள்குத்து கடிதம் - கலைஞர் அதிர்ச்சி - ஜூ வி கட்டுரை

அலற வைத்த ஆ.ராசா கடிதம்


ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து 'முரசொலி’யை எடுத்தார்! 

''கருணாநிதியின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களைவிட, வராதவர்களைப் பற்றித்தான் அதிகம் பேச்சு'' என்று பொடி வைத்துச் சொன்ன கழுகார், கையில் இருந்த ஜூன் 2-ம் தேதி முரசொலியின் இரண்டாம் பக்கத்தைத் திருப்பினார்.


''ஆ.ராசாவின் கடிதம்தானே?'' என்றோம்.


''கடிதமா அது. தி.மு.க. வட்டாரத்தில் அதை, 'கந்தகக் குண்டு’ என்றே வர்ணிக்கிறார்கள். நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டு இருக்கும் ராசா, டெல்லியில்தான் தங்கி இருக்கிறார். டெல்லியை விட்டுக் கிளம்ப வேண்டுமானால், தனி நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். 'ஜூன் 3-ம் தேதி தலைவரின் பிறந்தநாள். அதற்கு நிச்சயம் நீங்கள் வந்துவிட வேண்டும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள். ராசாவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், கோபாலபுரத்தில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. 'ராசா வந்தால், பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டே அவர் வருகை என்று ஆகிவிடும்’ என்று சொல்லி கட்டையைப் போட்டு விட்டார்கள். இது ராசாவின் கவனத்துக்குப் போனதாம். கோபம் கொண்டாலும் ஏனோ தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்!''


''சிறை தந்த பக்குவமாய் இருக்கும்.''


''இருக்கலாம்! சென்னைக்கு வந்து கருணாநிதியை வாழ்த்த இயலாத நிலையில், டெல்லியில் இருந்தே ஒரு கடிதத்தை எழுதினார் ராசா. அந்தக் கடிதம் தனது கைக்குக் கிடைத்ததும் கலங்கிப்போன கருணாநிதி, நான்கைந்து முறைக்கு மேல் அதைப் படித்தாராம்.


 'அப்படியே முரசொலியில் போடலாம்’ என்று சொன்னவர், திடீரென  'போடலாமா... வேண்டாமா?’ என்று குழம்பிப்போனாராம். கருணாநிதியை அளவுக்கு மீறிப் புகழ்வதுதான் அந்தக் கடிதத்தின் ஒட்டுமொத்த சாரம்சம் என்றாலும், ஒரே பத்தியில் தன்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத் தையும் தீர்த்துவிட்டார் ராசா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு!''


''என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்?''


''கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறாக எழுதிய 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காண்பித்துத் தொடங்கும் ராசா, 'வாழ்க்கையைப் போராட்டம் என்று வர்ணிப்போர் உளர், எனக்கோ போராட்டமே வாழ்க்கை... என்று சொல்லி இருக்கிறீர்கள். இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர எனக்கும் தகுதி உண்டு என வரித்துக்கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவன் இல்லை என்பது உங்களுக்குப் பெருமை. எங்களின் வெறுமை’ என்று கடுமையான வார்த்தைகள் போட்டு எழுதி இருக்கிறார் ராசா.


'கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின்தான் தலைவர்... இல்லை இல்லை அழகிரிக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது... ஏன் ஒரு பெண் வரக் கூடாதா? கனிமொழிதான் அடுத்த தலைவர்’ என்று ஒவ்வொருவரும் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு ஆட்களைத் திரட்டுவது மட்டும்தான் இப்போது கட்சியில் நடக்கிறது. கட்சியில் ராசா என்பவரும் முக்கியமான மையம். 

அவரை யார் இழுப்பது என்று போட்டியே நடக்கிறது. ராசாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏனோ பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இரண்டு மூன்று தடவை திகார் சிறையில் போய்ப் பார்த்தார் அழகிரி. ஸ்டாலினும் இரண்டு தடவை ராசாவுடன் திடீர் சந்திப்பு நடத்தினார். கனிமொழி மீதும் ராசாவுக்கு சில வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கலை ஞருக்கு இணையான தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்ற கோபத்தை ராசா காட்டினார்’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.''


''ராசாவின் கோரிக்கைதான் என்ன?''


''ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 'கட்சிக்காகத்தான் அவர் பல அவமானங்களைப் பட்டார். அதைக் கட்சிதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டா வெறுப்பாகப் பார்ப்பது ஏன்?’ என்று ராசா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அதனால்தான், ராசா சென்னைக்கு வராமல் இருப்பதே நல்லது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்!''


''கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி?''


''எல்லாக் கூட்டங்களிலும் உமது நிருபர்கள் வலம் வந்தார்களே! ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். மூன்று நாட்களாக ஸ்டாலின் நல்ல மூடில் இல்லை. ஜூன் 1-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மகளிர் அணி விழா நடத்தியது. மகளிர் அணி நடத்தினாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்த விழா அது. ராஜாத்தி அம்மாள் துணையாக அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்த கருணாநிதி, விழா முடியும் வரை நெடுநேரம் இருந்து, கண்டுகளித்தார். கனிமொழியின் அன்றைய பேச்சு பலராலும் வரவேற்கப்பட்டது. கூட்டத்துக்கு ஸ்டாலினும் வந்திருந்தார்.


அடுத்த நாள், காமராஜர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பில் ஒரு கருத்தரங்கம். வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் கருணாநிதி வரவேண்டும் என்று அழைத்தாராம் ஸ்டாலின். வருகிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்ட கருணாநிதி, ஏனோ வரவில்லை. இது ஸ்டாலினைக் கோபம்கொள்ள வைத்ததாம். அதனால்தான் 3-ம் தேதி பிறந்த நாள் அன்று முழுப் பங்களிப்பையும் தராமல் ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.


''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.


 புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர்.


 அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர். இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.


'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். 

 ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''


''ம்!''


''தஞ்சாவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் கிரி. இவர் எம்.நடராஜனுக்கு ஒரு வகையில் உறவினர். ஜெ. - சசி பிரிவின்போது இவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், தஞ்சாவூரில் நடந்த நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அம்மா பயத்தில் உளவுத்துறையைக் கண்டு பலரும் ஓடி ஒளிந்தனர். 

 ஆனால், இவர் மட்டும் வலிய உளவுத்துறையினரிடம் சென்று 'என்னைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுங்க’ என்று ரீதியில் பேசினார். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கல்தா கொடுத்த நேரத்தில், இவரையும் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். பதவி ஏற்பதற்காக சேலம் சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். பின்னே, அப்படி ஒரு பதவியே கிடையாது என்று அங்கு சொன்னார்களாம்.''


''இது மாதிரியான இடத்தை எல்லாம் எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!


படங்கள்: என்.விவேக், கே.குணசீலன்


 பிரேமலதா காட்டிய திசை!


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, ஜூன் 3-ம் தேதி புதுக்கோட்டை வந்தார் பிரேமலதா விஜயகாந்த். கறம்பக்குடியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், மீனம்பட்டி கிராமத்தில் பேசியபோது, ''தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்'' என்று புது டிராக் போட்டார். ''இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தே.மு.தி.க. சார்பில் 89-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி¢வித்துக் கொள்கிறோம்'' என்று மீண்டும் அவர் அழுத்திப் பேசியது அ.தி.மு.க-வினரை யோசிக்க வைத்திருக்கிறது. 'இந்தப் பேச்சுக்கு கருணாநிதியிடம் இருந்து விரைவில் பாசிட்டிவ் பதில் வரும்’ என்று தே.மு.தி.க-வினர் சந்தோஷத்தில் கிடக்கிறார்கள்.


 கார்த்திகேயன் மன மாற்றம்!


அகில இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்திருந்தார்கள்.

 இதில் ஹைலைட், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனின் அறிக்கைதான். மரண தண்டனை தேவை இல்லை என்பதற்கான வாதங்களை அறிக்கையில் வைக்கும் கார்த்திகேயன், 'என் எண்ணத்தில் மரண தண்டனை உலகமெங்கும் ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் எனத் திண்ணமாக நம்புகிறேன். தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மனிதனின் எண்ணவோட்டம், தண்டனை விதிப்புக்கும் தண்டனை நிறைவேற்றத்துக்கும் இடையே உள்ள மிகநீண்ட இடைவெளி, தன் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை ஆகியன ஒன்றாக இணைந்து கொடும் மனவலியை ஏற்படுத்தி உள்ளத்தைச் சிதைத்து இரட்டைத் தண்டனைக்கு வழி வகுத்துவிடும்'' என்று கறாராக தனது முடிவைச் சொன்னது, தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!



1.ஆவுடையப்பன் - ஜெயக்குமார்... இதில் சமாளிப்பதில் கெட்டி யார்? 

 
ஆவுடையப்பன் சீரியஸான முகத்தை வைத்துச் சமாளிப்பார். ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் அதையே செய்வார். ரெண்டு பேருமே ஜாடிக்கு ஏற்ற மூடிகள்!


 
2. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஒரு தமிழர் கூட இல்லையாமே? 


காரியக் கமிட்டியிலா... காங்கிரஸிலா?



3. நூற்றாண்டு விழா காணும் மு.வ. பற்றி..? 



மொழி வளமும் இலக்கியத் திறனும் இருக்குமானால், ஓர் அலுவலக எழுத்தர்கூட தன்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகும் அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் மு.வரதராச​னார். காக்காய் பிடிப்பு, கழுத்​தறுப்புகள் இல்லாமல் தன் தகுதியால் அந்தப் பதவியை அடைந்த சிலரில் ஒருவர். பரிமேலழகர் மூலமாக, பண்டிதர்களுக்கு மட்டுமே என மூடிவைக்கப்பட்டு இருந்த திருக்குறளை, தனது இனிய, எளிய தெளிவுரை மூலமாக பாமரர்க்கும் திறந்து விட்டவர்.


 'மு.வ.வின் கையடக்கத் திருக்குறள் தெளிவுரை’ என்ற பாக்கெட் அளவுப் புத்தகம் இதுவரை எத்தனை லட்சங்கள் விற்றன என்பது அதை வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே தெரியாது.
அனைத்தையும்விட, தமிழ் இலக்கியம் சொல்லும் நெறிகளின்படி வாழ்ந்த மனிதர். ஏழை மாணவர்களை அவரே படிக்க வைத்தார். தன்னை விடத் தகுதியான மாணவன் என்று உணர்ந்தால், தனது புத்தகத்துக்கு மதிப்புரை எழுதவும் வைத்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது ஒரு காட்சி...
கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரி முதல்வரும் தகுதிவாய்ந்த அறிஞருமான அரசு.நாராயணசாமி, உடல் நலம் குன்றிய நிலையிலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், துணை வேந்தரான மு.வ. தனது அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து அவரைச் சந்தித்து அனுப்பி​வைத்த பெருந்தன்மைக்காரர். தமிழால் மு.வ. தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தமிழும் தகுதி பெற்றது!\\




3. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றையும் ஏற்றிய ஜெயலலிதா, பெட்ரோல் விலையை ஏற்றியதற்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறாரே? 


'எந்த விலையாக இருந்தாலும் நான்தான் உயர்த்துவேன்’ என்ற எண்ணத்தால் இருக்குமா?



4. நாடகம் சரி, அதென்ன 'கபட’ நாடகம்? 



அரங்கத்தில் நடப்பது நாடகம். அரசியலில் நடப்பது கபட நாடகம்! 'கபடம்’ என்றால் திருட்டுத் தனம்.


சமீபத்திய உதாரணம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தினார்கள். நாடு முழுவதும் எதிர்ப்பு வந்தபோதும், 'எங்களுக்கு வழி இல்லை. மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மத்திய பிரசார பீரங்கிகள் ஊதின.


 திடீரென, இப்போது 2 ரூபாய் குறைக்கப்பட்டது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? 6 ரூபாய் உயர்த்தினால் போதுமானது என்றுகூட எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி இருக்கலாம். '8 ரூபாய் உயர்த்துவோம். எதிர்ப்பு வந்ததும் 2 ரூபாய் குறைப்போம்’ என்று ஒட்டகத்தின் கண்ணில் புல்லைக் காட்டி எடுத்துப் போடும் ஏமாற்று வேலையை பட்டப்பகலில் செய்தார்களே... அதற்குப் பெயர்தான் கபட நாடகம்!




5. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே பிரதமராக வர வேண்டும்’ என்கிறாரே சங்மா? 


இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன், நேரடியாகத் தேர்தலில் நின்று வென்று எம்.பி. ஆனவர் அல்ல. மாநிலங்கள்அவை உறுப்பினர். எனவே, சங்மாவுக்கு மன்மோகன் மீது என்ன வருத்தமோ? ஒருவேளை சங்மாவுக்கு எதிராக சிங் கட்டையைப் போடுகிறாரோ?


6. 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரங்களுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து விட்டார்கள் போல? 


ஒருவேளை, நூறு ஆண்டுகளுக்குத் தர வேண்டிய விளம்பரங்களை ஓராண்டில் தரத் திட்ட​மிட்டுள்ளார்களோ?



7. உண்மையான தமிழினத் தலைவர் யார் என்று கேட்டால்  'பட்’டென்று என்ன சொல்வீர்கள்? 


யாரும் இல்லை என்பேன்!



8. 'தமிழ் ஈழம் கேட்பதைக் கைவிட வேண்டும் என்று இங்கு உள்ள தலைவர்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்? 


யாராவது அவரை வாங்கித் தரச் சொன்னார்​களா? ஞானதேசிகன் ஏன் பயப்​படுகிறார்?



9. அரசியல் அறம் என்பது என்ன? 


எழுத்தாளர் வைகறை, 'வாருங்கள் கவிஞர் இன்குலாப்பை சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய இன்குலாப் இப்படிச் சொன்னார்...


'தமிழர் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர் களை ஒடுக்கினால், என் பேனா சிங்​களவர் களுக்காகவே எழுதும்’. இதுதான் அரசியல் அறம்!


10. வெற்றி மட்டுமே ஒரு மனிதனை அடையாளப்​படுத்துகிறதே? 


வீரபாண்டிய கட்டபொம்மனும், பூலித் தேவனும், மருது பாண்டியரும் வாழ்ந்த காலத்தில் தங்களின் லட்சிய வெற்றிகளைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களை மனிதர்கள் ஆராதிக்கிறார்களே. என்ன காரணம்? வெற்றி பெற்றவர்களைத்தான் அடையாளப்படுத்த வேண்டுமானால், அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்​களைத்தான் நாம் பூஜித்திருக்க வேண்டும்.
லட்சியத்துக்காக, கொள்கைக்காகப் போராடியவர்கள், வாதாடியவர்கள் வரலாற்றில் இடம் பெறு​​வார்கள். அதில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை!


 THANX -JU VI

5 comments:

கோவை நேரம் said...

வணக்கமுங்க...

scenecreator said...

கலைஞரை விடுங்க அவரே பாவம்.
என் ப்ளாகில் இன்று
கமலின் காமெடி படங்கள் :
http://scenecreator.blogspot.in/2012/06/blog-post.html

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்லது...........

MANO நாஞ்சில் மனோ said...

ராசாவை காலன் நெருங்குகிறான்....!!

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..