Wednesday, June 27, 2012

சுஜாதா - ஒரு பார்வை - காலச்சுவடு கண்ணன் கட்டுரை


சுஜாதா ஒரு முரண்நோக்கு
கண்ணன்
கடந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது.
சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெகுஜன தளத்தில் எழுதவந்தவர்களுக்குப் பின்னர், சில தலைமுறை வெகுஜன எழுத்தாளர்கள் ஜொலித்து மறைந்த பிறகும் சுஜாதா வெகுஜன தளத்தில் தொடர்ந்து நாயகனாக நின்றார். இன்று வெகுஜன தளத்தில் நுழையும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் எவ்வாறு வேகமாகத் தேக்கமடைந்து காலாவதியாகிவருகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய செய்தி இது.



பலரையும் போல் சுஜாதாவை நானும் என் பதின்களில் வெகுஜன இதழ்களில் படித்திருக்கிறேன். அவரது நாவல்கள்மீதான ஆர்வம் பதின்கள் முடியும்வரை நீடிக்கவில்லை. பின்னர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு காலச்சுவடு ஆசிரியராக அவருடனான உறவு பெரிதும் எதிர்நிலையிலிருந்தே ஏற்பட்டுள்ளது. வணிகப் பண்பாட்டிற்கு எதிராக ஒரு சிற்றிதழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி. அக்காலகட்டத்தில் வெகுஜனப் பண்பாட்டின் நாயகனாக நின் றவர் சுஜாதா. இருப்பினும் காலச்சுவடு சுஜாதாவை உரிய இடங்களில் அங்கீகரிக்கத் தயங்கவில்லை.
'தமிழ் இனி 2000' நிகழ்வை நாங்கள் நடத்தியபோது, 'கணினியும் தமிழும்' அமர்வு அவருடைய தலைமையிலேயே நடந் தது.


 எங்கள் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் 'அற்றைத் திங்கள்' நிகழ்விற்கு அவரை அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவரது உடல்நிலை கருதி அழைக்காமலேயே இருந்துவிட்டோம்.
அதேநேரம் அவருடைய எழுத்துக்கள் சார்ந்தும் கருத்துகள் சார்ந்தும் பல முரண்பட்ட கட்டுரைகளும் விவாதங்களும் காலச்சுவடில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவும் காலச்சுவடை அதிகமும் பாதகமாகவே சுட்டிவந்திருக்கிறார். ஆனால், சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பற்றி அவர் எப்போதுமே உயரிய மதிப்பீட்டை வெளிப்படுத்திவந்தார்.



சு. ரா. வுக்கு சுஜாதா பற்றிய மதிப்பீடு இருந்தது. அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று சு. ரா. கருதினார். தன்னை வெகுஜன தளத்தில் சமரசப்படுத்திக் கொண்டதால், தமிழ்ச் சமூகம் அவரது பங்களிப்பைக் குறைவாகவே அடைந்துள்ளது என்றும் கருதினார். அவரது மேலோட்டமான அணுகுமுறை, பாலியல் கொச்சைப்படுத்தல் பற்றிய கடும் விமர்சனமும் சு.ரா.வுக்கு இ ருந்தது. ஒரு எதிர்வினையில் 'வணிகச் சீரழிவின் நாயகன்'1 என்று சுஜாதாவைச் சுட்டினார் சு.ரா. அறிவியல் தமிழுக்கு அவரது பங்களிப்பைப் பற்றிய மரியாதையும் சு. ரா. வுக்கு இருந்தது. சிங்கப்பூர் நா. கோவிந்தசாமிக்கு எழுதிய அஞ்சலிக் கட்டு ரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:



கணினியில் பொது விசைப்பலகை - பொதுக் குறியீட்டு முறை உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தொடர்ந்து அவர் முனைந்து வந்தார் என்பது தெரிகிறது. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் எந்தளவுக்கு இன்று நமக்குப் பயன்படும்? இவை பற்றி வாசகர்கள் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண் டும். கணினித் துறையில் நுட்ப விபரம் கொண்ட ஒருவர்தான் இதனைத் தெளிவுபடுத்த முடியும். தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சுஜாதா இதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்2.
தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவும் சில சமயங்களில் அலட்சியமாகவும் சுஜாதா எழுதுவது பற்றிய வருத்தமும் அவருக்கு உண்டு.


குவளைக்கண்ணனுக்கு அவரது கவிதைத் தொகுப்பு பற்றி சு. ரா. எழுதிய ஒரு கடிதம் நூல் மதிப்புரையாக காலச்சுவடில் வெளிவந்தது.
'கிட்டதட்ட கவிதைகள்' என்ற உபதலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். இது கவிதைக்கு எதிரான ஒரு வேடிக்கை மனநிலையை உருவாக்குகிறது. இந்த வேடிக்கை மனோபாவம் தமிழில் ஒரு இதழாலும், ஒரு பிரபல எழுத்தாளராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது'3
என்று குறிப்பிடுவது சுஜாதாவைத்தான் என நினைக்கிறேன். (அழுத்தம் என்னுடையது)



சுஜாதா ஒன்றிரண்டுமுறை தெற்குப்பக்கம் வந்தபோது வீட்டிற்கு வந்துவிட்டு சு. ரா. வைப் பார்க்க முடியாமல் போனது பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். 80களின் இறுதியில் இருக்கலாம், பீட்டர் புருக்கின் 'மகாபாரதம்' நாடக நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றபோது சு. ரா. வைச் சந்தித்த சுஜாதா, அவரும் இணைந்துகொண்டு காலச்சுவடைத் தொடர்ந்து நடத்து வது பற்றிப் பேசியிருக்கிறார்.


 அந்தத் திட்டத்தை சு. ரா. முன்னெடுக்கவில்லை. சுஜாதா இதனால் மிகவும் மனம் புண்பட்டார் என நினைக்கிறேன். 1991இல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளிவந்தது. கோமல் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் பிரதி ஒன்று சுபமங்களாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இதழிலேயே சுஜாதாவின் மிக எதிர்மறையான விமர்சனம் சுபமங்களாவில் வெளிவந்தது.


 சுஜாதாவே தன்னை அழைத்து, தான் விமர்சனம் செய்வதாகக் கூறிப் பெற்றுக்கொண்டதாகக் கோமல் கூறினார். அவ்வாறு தான் செய்வது பற்றியும் முற்றிலும் தீவிரத் தளம் சார்ந்த அம்மலரை விமர்சிக்கத் தனக்கிருக்கும் தகுதி பற்றியும் சுஜாதாவுக்கு இருந்த உறுத்தல் அக்கட்டுரையிலேயே வெளிப்பட்டது.


இதற்கான உன் தகுதி என்ன என்றால் காலச்சுவடு மதிப்புரைக்காக சுபமங்களாவுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்ப - அவர்கள் எனக்கு அதை அனுப்பி விமரிசனம் எழுதச் சொன்ன ஒரே காரணம்தான். இருந்தும் இதை எழுதுவதில் எனக்கு இஷ்டமே.


சு. ரா. வின் கடுமையான எதிர்வினையும் சுபமங்களாவில் (ஏப்ரல் 92) வெளிவந்தது. காலச்சுவடில் பங்கு பெற முடியாது போனதால் தொடர்ந்து காலச்சுவடைச் சீண்டிவந்தார் என்றும் பிற்காலத்தில் காலச்சுவடு 'போன்ற' ஒன்றை உருவாக்கித் தன் ஆற்றாமையை சுஜாதா தீர்த்துக்கொண்டார் என்றும் எண்ண இடமிருக்கிறது.


n
2000ஆம் ஆண்டை ஒட்டி சுஜாதாவை அவர் வீட்டில் நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். சந்தித்த காலத்தையும் நோக்கத் தையும் இப்போது தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காலச்சுவடு இதழைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியிருந்ததை அப்போது 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தோம். அதைக் கு றிப்பிட்டு 'உண்மையிலேயே எனக்குப் புரியவில்லையப்பா' என்றார்.


அதற்கு முன்னர் பேச்சுவாக்கில் சில தண்டிதண்டி ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருந்தார். அவை கண் முன்னால் மேசையிலிருந்தன. 'இவை புரியும்போது காலச்சுவடு புரியவில்லையா?' என்று கேட்டேன். சில கட்டுரைகள் புரியவில்லை என்றார். 'சில' என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே என்றேன். சிரித்துக்கொண்டே 'அப்ப தப்புதான்' என்றார்.



அறிவியல் புனைகதைகள் எழுதுவது பற்றிய ஒரு பட்டறைக்குக் காலச்சுவடு ஒழுங்குசெய்தால் வந்து நடத்து கிறேன் என்றார். ஆர்தர். சி. கிளார்க் போன்று அறிவியலின் வளர்ச்சியை முன் உணரும் படைப்புகள் தமிழ்ச் சூழலில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. மேலும் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு என்பன மிகுந்திருக்கும் சூழலில் ஒரு நெகிழ்ச்சியை அறிவியல் கதைகள் அளிக்கக்கூடும்.


 பகுத்தறிவும் அதீதங்கள் பற்றிய நம்பிக்கையும் இரட்டைப் பின் னல்போல இருக்கும் தமிழ்ச் சூழலில், மென்பொருள் வட்டத்திற்கு வெளியே அறிவியல் புனைகதைகளின் பொருத்தத்தை நான் உணரவில்லை. அதை அவரிடம் சொன்னேன். மாற்றுக் கருத்துகள் பற்றிய பொறுமையின்மை ஏற்பட்டுவிட்ட வயது அப்போது அவருக்கு.



பின்னர் அவர் ஆலோசகராகப் பணியாற்றிய மீடியா டிரீம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு புளிய மரத்தின் கதையைத் திரைப்படமெடுக்க அவர் யோசனை கூறியிருந்ததை அடுத்து அவரை ஓரிருமுறைகள் அலுவலகத்தில் சந்தித்தேன். அதில் ஆசிரியருக்கு உரிய தொகையின் போதாமையைச் சுட்டி நான் வாதிட்டதை அவர் ரசிக்கவில்லை.


படத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம்கூட நூலாசிரியருக்கு இல்லை. எனக்குத் தொகையைவிடவும் இலக்கியவாதிகளை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்ற சினிமாக்காரர்களின் முன் முடிவை உடைப்பது அவசியமாகத் தோன்றியது. பின்னர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இடையீட்டில் சமரசமாகி அந்த முயற்சி தொடங்குவதற்குள் நிறுவனம் பொளிந்துவிட்டது.



தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பை இவ்வாறு தொகுக்கலாம் என நினைக்கிறேன்:



1. சமகாலத் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.



2. தான் செயல்பட்ட வெகுஜன தளத்தில் வாசகர்களுக்குத் தொடர்ந்து தீவிர ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வந்தி ருக்கிறார்.



3. தொழில்நுட்பத் தமிழுக்கு அவருடைய பங்களிப்பு மிக வலுவானது. சிக்கலான அறிவியல் செய்திகளை எளிய முறையில் விளக்கிவிடுவதில் அவருடைய ஆற்றல் தன்னிகரற்றது.



(பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைத் தமிழன் எக்ஸ்பிரசில் தொடராக எழு திக்கொண்டிருந்தார். அதில் அமெரிக்கா செல்லும்போதும் திரும்பும்போதும் ஏற்படும் ஜிவீனீமீறீணீரீ ஐ விளக்க, 'மறுநாள் கிளம்பி முதல் நாள் வருவதுபோல' என எழுதியிருந்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வருகிறது.)



2005 நவம்பரில் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் சுஜாதாவைக் கடைசியாகச் சந்தித்தேன். உடல்நலம்குன்றிக் காணப்பட்டார். சுந்தர ராமசாமியின் மறைவைப் பற்றிய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். 'பெரிய இழப்பு, பெரிய இழப்பு' என மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார்.



அதெல்லாம் சம்பிரதாயமானதாக இல்லாமல் ஆத்மார்த்தமானதாக இ ருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று நான் படித்த கட்டுரையைப் பற்றி உயர்வாக ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' பத்தியில் எழுதியிருந்தார். இனி அதிகமும் முரண்படவும் அவ்வப்போது பாராட்டவும் சுஜாதா இல்லை.


n
ஒரு தலைமுறைத் தமிழ் வாசகர்களுக்குப் பெண் பற்றிய விடலைத்தனமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் சுஜாதா. தனது சாதிச் சங்கங்களுடன் அவர் கொண்டிருந்த உறவை அவரே பதிவுசெய்திருக்கிறார். அவர் புறக்கணித்து ஒதுக்கிய 'காலச்சுவடு 1991 ஆண்டு மல'ரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் ஒன்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் 'ராமஜென்ம பூமி: ஓர் இந்தியப் பார்வை.'



சென்னையிலிருந்து வெளிவரும் சமநிலை சமுதாயம் என்ற 'முற்போக்கு மாத இத'ழின் கௌரவ ஆசிரியர் ஏவி. எம். ஜாபர்தீன் மலேசியாவில் வசிப்பவர். அவர் சுஜாதாவுக்கு எழுதிய அஞ்சலியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் 'கோயில் ஒழுகு' பற்றி அவர் எழுதும்போது அது முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய இருவர், சுஜாதாவுக்குக் கடுமையான கடிதம் எழுதினர். சுஜாதா தானாக ஏதும் கூறவில்லை.


 கோயில் ஒழுகு பற்றி கூறப்பட்டவற்றை அப்படியே எழுதப்போய் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தூஷணையுடன் எழுத, மனம் நொந்த சுஜாதா இனி இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றித் தாம் ஏதும் எழுதப் போவதில்லை என்பதுபோல் 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் கு றிப்பிட்டார்.5 முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இது. புகழ்பெற்றவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் இன் பம், தர்க்கத்திற்கும் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த இன்பத்தை ஜாபர்தீன் அவர்கள் சுஜாதாவிடமிருந்து நிறைவாகப் பெற்றிருக்கும் செய்தி அவரது அஞ்சலிக் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது.



மேற்படி விஷயத்தில் சுஜாதா 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எழுதியது இதுதான்:


அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான 'கோயில் ஒழுகு' புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். . .


. . . 'கோயில் ஒழுகு' நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட் டிருக்கிறார்.
நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள்போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.



யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். (ஆனந்த விகடன் 17.4.05) (அழுத் தம் என்னுடையது).
இது பற்றிய விவாதம் காலச்சுவடு இதழில் நடந்தது. கோம்பை எஸ். அன்வர், ஜெ. ராஜா முகமது, ஆ. சிவசுப்பிரமணியன், பொ. வேல்சாமி ஆகியோர் பங்களித்தனர். இவற்றை ஜாபர்தீன் அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.



விருந்தினர் வீட்டிற்கு வருவது, அதுவும் நாம் ஆதர்சிப்பவர்கள் வருவது மகிழ்ச்சியான செய்திதான். சுஜாதா குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வந்தது பற்றி ஜாபர்தீனின் உணர்வுகள் இவை:



1993இல் நான் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு நாள் மாலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்" என்றார். உடனே அவரைச் சந்தித்தேன். அவருடன் அவர் துணைவியார் திருமதி சுஜாதா ரங்கராஜனும் அவருடைய மாமனார், மாமியார் ஆகியோரும் வந்திருந்தனர்.


 அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லும்போது, "எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்தான். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்தமாட்டீ ர்களே?" என்றேன். "யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்பதுதான் எங்கள் குறை. எங்களுக்கு சைவ சாப்பாடு தாரு ங்கள். நாங்கள் வருகிறோம்" என்றனர் அனைவரும்.
நான் என் மனைவியிடம் கூறி அசைவ உணவுகளை அப்புறப்படுத்திவிட்டு சைவம் மட்டுமே சமைத்து அவர்களை வி ருந்துக்கு அழைத்தோம். எவ்விதத் தயக்கமுமின்றி அனைவரும் வந்து விருந்துண்டனர். தொடர்ந்து கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்பிய அவர்களுக்கு எனது காரையும் டிரைவரையும் அவர்கள் மலேசியாவில் தங்கி இருக்கும்வரை கொடுத்தேன்.



மிகவும் மகிழ்வோடு அவர்கள் சுற்றுப்பயணம் நிகழ்ந்தது.6
ஆச்சாரமான அய்யங்கார்கள் நம் வீட்டில் தங்கி, உணவருந்தி கௌரவித்துவிட்டார்களே என்ற ஜாபர்தீன் அவர்களின் பெருமிதம் இ ன்றைய காலத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றது. மேற்படிப் பதிவில் விரவிக்கிடக்கும் புலால் உணவு பற்றிய ஜாபர்தீன் அவர்களின் தயக்கங்களும் குற்ற உணர்வும் சமூகவியல் ஆய்வுக்கு உரியவை.
n
சுஜாதா ஆர்வத்துடன் விரும்பிச் செயல்பட்ட தளம், வெகுஜன வணிகத்தளம். அத்தளத்தில் இருந்து அவருக்குச் செலுத் தப்பட்ட அஞ்சலிகள் பல ஆத்மார்த்தமானவை. சுஜாதாவால் பயன்பெற்றவர்கள், பயன்பெறத் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு மட்டும் அவரைப் பற்றி உதிர்க்கத் தொடங்கிய மிகையான புகழாரங்களை, 'நன்றி விசுவாசத் தந்திரம்' என்று புறக்கணி த்துவிடலாம்.



 பெண்ணியமும் திராவிடச் சித்தாந்தமும் பேசுபவர்கள் சுஜாதாவின் கருத்தியல் தொடர்பாக மேற்கொள்ளும் விமர்சன மௌனத்தையும் இதே தொடரில் அடக்கிவிடலாம்.


தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம்


. இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.


என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற 'முழு உண்மை'மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் - சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது - உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


நன்றி - காலச்சுவடு

2 comments:

தமிழ் பையன் said...

எதைச் சொன்னாலும் அதை சுருக்கமாக சொல்லு என்று தனது நடையால் பிரபலப்ப்டுத்தினவர். அவரைப் பற்றி இவ்வளவு நீளமான கட்டுரையா?

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

எழுத்தாளர் சுஜாதவை புறகணிக்க முடியாதவர்கள் அவரை பற்றி தன் மனச்சாட்சிக்கு துரோகம் செய்வது இயல்பான ஒன்றுதான் .
அத கடந்து போக நீங்கள் முயண்டு ஓரளவு வெற்றி பெற்று விட்டீர்கள் .ஏனென்றால் அவரை பற்றி அவரே சொல்லும் சொல்லும் கருத்தே கூட நமக்கு திருப்தி தராது .எனவே படைப்பாளி என்பவன் விமர்சிக்கப்படலாம் .தூசிப்பதை நாம் என் படிக்கவேண்டும் ? கடந்து போவேமே ?