Monday, June 11, 2012

ஸ்டாலின் ,அழகிரி யை விட கனிமொழியே கரெக்ட் - இளங்கோவனின் அதிரடி பேட்டி

ஸ்டாலின் அல்ல... அழகிரி அல்ல... கனிமொழியே கரெக்ட்!

இளங்கோவனின் அதிரடி


''பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எதிரா போராட வந்த இடத்துல, 'மத்திய அரசின் கூட்டணியில இருந்து விலகுவோம்’னு முழங்குறாரு. அடுத்த அரை மணி நேரத்துல, 'கூட்டணியில் இருந்து நான் விலகுவேன்னு சொல்லவே இல்லை’ன்றாரு. அவர் வரவர ரொம்பச் சரியில்லைங்க... ஏன் இப்படில்லாம் பண்றாரு?'' - பேட்டி எடுக்கச் சென்ற என்னை கருணாநிதி குறித்த விசாரணை யுடன் வரவேற்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.



 ''சமாளிக்காதீங்க... ஆயிரம் சொன்னாலும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் கொள்கைகள்தானே காரணம், இது நியாயமா?''



''இல்லவே இல்லை... அது பொருளாதாரத் தெளிவின்மை இல்லாதவர்கள் சொல்ற கருத்து. பெட்ரோலை இறக்குமதி செஞ்சு, இந்தியாவில் விற்கும் சில தனியார் கம்பெனிகள்தான் அதன் விலையையும் நிர்ணயம் செய்கின்றன. இவ்வளவு ஏன், 'மத்தியில் இருப்பது ஆள்வதற்கு லாயக்கற்ற கட்சி’னு குறை சொல்றாங்களே ஜெயலலிதா, அவங்க பெட்ரோல் விலையில் மாநில அரசின் 27 சதவிகித வரியைக் குறைக்க வேண்டியதுதானே? 10 சதவிகிதம் குறைச்சாலே, பழைய விலைக்கு பெட்ரோல் கொடுக்க முடியுமே. மற்ற மாநிலங்களில் அப்படி வரி குறைச்சு இருக்காங்களே... அதை ஜெயலலிதாவும் செஞ்சிருக்கலாமே. மத்திய அரசைக் குறை சொல்றதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா இதுவும் பேசுவார்... இன்னமும் பேசுவார்!''



''நேர்மையாகச் சொல்லுங்கள்... மத்திய காங்கிரஸ் அரசின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் எந்தக் குறையும் இல்லையா?''


''மத்திய அரசின் செயல்பாடு இப்போது அதிக அளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்குங்கிறதை ஒப்புக்கிறேன். குறிப்பா, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு. அதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கு.


 மாநில அரசைப் பத்தி நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்றேன். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களைக் கொடுத்தது மட்டுமே ஜெயலலிதா அரசின் கடந்த ஒரு வருட ஆட்சியின் அசுர சாதனை. இன்னொரு சாதனை, டாஸ்மாக் விற்பனையை அதிகரிச்சு இருக்கிறார். மக்களுக்கு செஞ்ச நல்லதைவிட, அவர்களின் சுமையை மேலும் அதிகரிச்சு இருக்கிறது ஜெயலலிதாவோட அரசு.''


''ஜாக்கிரதையா உங்கள் நண்பர் விஜயகாந்தைப் பற்றிக் கருத்து சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?''


''விஜயகாந்த் வளர வேண்டிய ஒரு நல்ல அரசியல்வாதி. தமிழகத்தில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். தன்னோட சக்தியை அவர் நல்ல பாதைக்குக் கொண்டுபோய் பயன்படுத்தணும். விஜயகாந்திடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர் நல்லா வருவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு!''


''மதுரை ஆதீன சர்ச்சைகளைக் கவனிக்கிறீங்களா?''


''பொதுவாவே, இந்தச் சாமியார்கள் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. சாமியார்கள் பெரும்பாலும் மக்களை ஏமாத்துறவங்களாதான் இருக்காங்க. அவங்களை நம்பி ஏமாந்துபோகாமல் மக்கள்தான் உஷாரா இருக்கணும்!''


'' 'தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம்’னு பா.ஜ.க. சொல்லி இருக்கிறதே?''


''பா.ஜ.க. மட்டுமா... ராமதாஸ், திருமாவளவன் எல்லாம்கூடத்தான் சொல்றாங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அது ஒரு கனவு. தூக்கத்தில் இருந்து முழிக்கிறப்ப, 'தமிழகத் தில் ஆட்சியைப் பிடிப்போம்’னு சொல்றதை ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க. ஆனா, ஒரு விஷயத்தை எல்லோரும் தெளிவாப் புரிஞ்சுக்கணும்.


 தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூணு கட்சிகளும்தான் பெரிய கட்சிகள். இதுல ஒண்ணுதான் தமிழகத்தை ஆள முடியும். வேற யாரும் தலை கீழா நின்னாலும் கதைக்கு ஆகாது!''



''தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பிறகு அழகிரியா... ஸ்டாலினா? உங்கள் சாய்ஸ் யார்?''



''அவங்க ரெண்டு பேருமே அதுக் குச் சரியான ஆள் கிடையாது. கனிமொழிதான் அந்தப் பதவிக்குத் தகுதியானவங்க. தலைமைப் பொறுப்பை ஏற்கிற எல்லாத் தகுதிகளும் கனிமொழிகிட்ட இருக்கு. பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் தரணும்னு முழங்கும் கலைஞர், அவர் காலத்துலயே கனிமொழியை தி.மு.க-வின் தலைவர் ஆக்கணும். அப்போதுதான் தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!''



''சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே..?''



'' 'என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்’ என்று பிரதமர் பகிரங்கமாகவே அறிவிச்சுட்டாரே.   ஊழல் புகார் சுமத்திய அண்ணா ஹஜாரே அதை நிரூபிக்க வேண்டியதுதானே? சிதம்பரமோ, பிரதமரோ யார் தப்பு செய்திருந்தாலும் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கட்டும். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால், அவர்கள் சொல்லும் எதையும் கேட்டுக்கொள்ள நான் தயார்!''



''சமீபத்தில் என்ன படம் பார்த்தீங்க?''



'' 'பெரியார்’ படத்துக்குப் பிறகு நான் தியேட்டர் போய்ப் பார்த்த படம் 'கர்ணன்’. அந்தக் காலத்துல டூரிங் டாக்கீஸில் சிவாஜி படம் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்து போச்சு. அந்தப் படத்தைப் போல நல்ல கதையம்சத்துடன் வெளியான பழைய படங்கள் எல்லாத்தையும் தூசு தட்டி புதுப் பொலிவோடு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்!''


3 comments:

'பரிவை' சே.குமார் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.
எதார்த்தமான காங்கிரசை விட்டுக் கொடுக்காத, அண்ணன் தம்பி சண்டைக்குள் சகோதரியையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் பதில்கள்.

Thameemrajaa said...

தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்....... நன்று..

Thameemrajaa said...

தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்....... நன்று..