1. வீரப்பனை நேரில் சந்தித்தவர், அவர் மிகவும் நம்பியவர்களுள் நீங்களும் ஒருவர் என்ற முறையில் அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உண்மையாக, நேர்மையாகச் சொல்லுங்கள்?''
''வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான். ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம்.
அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால், யாராலும் எதுவும் செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும். நாங்கள் அரசை நம்பி அல்ல... வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதல்களை நாம் அறிவோம். ராஜ்குமார் கடத்தல் சமயத்தில் 'பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக் கப்பட்டு இருந்தன.
அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, 'என் குடும்பம் அழிந்தது... அழிந்ததுதான். நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.
அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர். எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!''
2. ''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே?''
''அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகிஇருக்கிறோம். காவல் துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத் துறையின் கண்காணிப்பு எனப் பல வகைகளிலும் எங்கள் அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கை யும் சிக்கலில்தான் தள்ளப்பட்டு இருக்கிறது.
ஈழத் தமிழர்களைக் கொண்டு நாங்கள் ஆதாயம் அடைந்தோம் என்பது அபாண்டத்திலும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி ஏதாவது ஆதாயம் அடைந்திருந்தால், எங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துவரும் மத்திய, மாநில அரசுகள் இத்தனை காலம் சும்மா விட்டுவைத்திருக்குமா? வழக்குப்போட்டு உள்ளே தள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''
3. ''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''நிச்சயமாக!
இரண்டாம் உலகப் போரில் 50 லட்சத்துக் கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதும், மற்ற குற்றவாளிகளுக் குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.
செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006-ம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு காலமாகவிசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறை யிலேயே உயிர் துறந்தார்.
அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது சர்வ தேச நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஒரு நாட்டின் அதிபராக இருப்பது, மக்களைக் கொல்வதற்கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது!''
4. ''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?''
''நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச்சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள் குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை. குழந்தைகள், வயதான பெரியவர்கள் எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின் றனர். இப்படித் தமிழர்கள் பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாக வேண்டும் என்றுதான் ராஜபக்ஷே அரசு எதிர்பார்க்கிறது!''
5. ''வாடகைக்கு வீடு கிடைப்பதில் உங்களுக்குச் சிக்கல் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா?''
''எங்கள் கட்சி அலுவலகத்துக்கு ஒரு வாடகைக் கட்டடத்தைப் பிடித்து முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எல்லாம் போட்ட பின்னர், கட்டட உரிமையாளர் 'தர முடியாது’ எனப் பின்வாங்கிவிட்டார். காரணம், உளவுத் துறை அவரை மிரட்டி இருக்கிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள். சென்னை நகர எல்லையைக் கடந்து பல்லாவரத்தில் எங்கள் அலுவலகம் இருப்பதற்கு இந்த வீட்டுப் பிரச்னையும் ஒரு காரணம்.
இவற்றையும் தாண்டி எங்களுக்கு வீடு தருபவர்களும் அலுவலகத்துக்கு இடம் தருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எல்லோருமே இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறோம். மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியாகவும் மிரட்டப்படுகிறோம். எங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அரசியல் வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டுவிட்டேன்!''
6. '' 'ஈழத் தமிழர்கள்’ என ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? தமிழர்கள் என்று சொன்னால் போதாதா?''
''அப்படிப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தபோதிலும், ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியர்கள், கனடாவில் வாழ்ந்தால் கனேடியர்கள், அமெரிக்காவில் வாழ்ந்தால் அமெரிக்கர்கள். அந்த நாட்டுப்பற்றை விட்டுக்கொடுக்க முடியாது. மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசியத் தமிழர்கள், இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர்கள், ஈழத்திலே வாழ்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான்.
தேச எல்லைகளைக் கடந்து நம்மை மொழி ஒன்றிணைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம். இந்த வித்தியாசங்களை ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒன்று சேர முடியுமே தவிர, அதை அழித்துவிட்டு முடியாது. ஆகவே, 'எல்லோரும் தமிழர்கள்’ எனப் பொதுவாக வரையறுப்பது பொறுத்தமற்றது!''
7. '' 'ஏன்தான் இந்த அரசியலுக்கு வந்தோமோ?’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டா?''
''அரசியலில் சலிப்புக்கு ஒருபோதும் இடம் இல்லை. மக்களுக்குத் தொண்டு புரியத்தான் வந்திருக்கிறோம். அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவது இல்லை. என் அரசியல் வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். தடாவில் சில நாட்கள், பொடாவில் 18 மாதங்கள் என ஐம்பதுக்கும் அதிகமான முறை என்னை இந்த அரசுகள் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஒருமுறைகூட அதற்காக வருந்தியதோ, சோர்வு அடைந்ததோ இல்லை.
மாறாக, மேலும் உற்சாகத்துடன் மக்கள் பணிபுரியும் உந்துதலே ஏற்படும். பதவிக்காகவும் பணத்துக்காகவும் அரசியலுக்கு வருபவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய சலிப்புகள் ஏற்படலாம். மக்கள் நலனை மனதில்கொண்டு அரசிய லுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உற்சாக தினம்தான்!''
8. ''ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு எதை, யாரைக் காரணம் என்பீர்கள்?''
''பின்னடைவுக்கு முக்கியமான முதல் காரணம், சர்வதேசச் சூழல்தான். அமெரிக் காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப் பிறகு, உலக நாடு களின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே வேறுபாடு காணப் பல நாடுகள் விரும்பவில்லை.
எல்லா நாடுகளும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் ஓர் அங்கமாகத்தான் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற பல இடங்களில் தேசிய இனப் போராட்டங்கள் நடக்கின்றன.
சீனாவில் திபெத் மக்கள் நீண்டகாலமாக தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநில மக்களும், எல்லைப்புறத்தைச் சேர்ந்தவர்களும் விடுதலைக்காகப் போராடுகின்றனர். இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்ட இந்த நாடுகள் முயற்சி செய்கின்றன. அதனால்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதத்தின் பெயரால் கொச்சைப்படுத்தி சிங்கள அரசுக்குத் துணை நிற்கின்றன. உலக அளவிலான ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட கள்ளக்கூட்டும் சூழ்ச்சியான நடவடிக்கைகளும்தான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்!''
-அடுத்த வாரம்...
'' 'நம்மைவிட பிரபாகரனுக்கு 'அலர்ட்னஸ் - உஷார்தன்மை’ அதிகம்!’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போ தேனும் உணர்ந்திருக்கிறீர்களா?''
''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று படித்த ஞாபகம். அது உண்மையா?''
''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற்றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார்களா?''
- இன்னும் பேசலாம்...
thanx - vikatan
1 comments:
ஆபிசர் மகள் திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.....
நெல்லையை நோக்கிய ஒரு அழகான பயணம்!
கல..கல...கல்யாணம்!பதிவர்களின் அட்டகாசம்!
Post a Comment