ஒரு நாவல் உண்மையாக நடக்கிறது
அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதை
துப்பறியும் நாவல்களை நிறைய எழுதி உலகப் புகழ் பெற்ற அகதா கிறிஸ்டி வயது 81 -ல் அவருக்கு ஒரு பேரிடி; பெரிய ஷாக். ஆள் ஒரேயடியாக அசந்து உட்கார்ந்துவிட்டார்.
அப்படி என்ன அதிர்ச்சி?
பத்து வருடங்களுக்கு முன் அகதா ஒரு மர்ம நாவல் எழுதினார். நாவலின் தலைப்பு: 'தி பேல் ஹார்ஸ்’.
அந்த நாவலில் கிறிஸ்டி வுட்நிட் என்று ஓர் இளைஞன் வருகிறான். வில்லன். அதற்கு முன்னால் பிரிட்டனில் யாருமே உபயோகித்து அறியாத 'தாலியம்’ என்னும் விஷத்தைக் கொடுத்து சில தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொல்லத் திட்டம் போடுகிறான். கொல்லவும் செய்கிறான்.
கிறிஸ்டி வுட்நிட் செய்த அதே காரியத்தை கிரகாம் யங் என்கிற இளைஞன் இப்போது நிஜமாகவே செய்துவிட்டான். அவனைப் போலவே சில தொழிலாளர்களைக் கொன்றான்; அவனைப் போலவே இவனும் 'தாலியம்’ விஷம்.
தான் கற்பனை செய்த விஷமே நிஜத்தில் இரண்டு உயிர்களைக் குடித்துவிட்டது என்பதைக் கேட்டால், யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது?
கிரகாம் யங்குக்கு இப்போது 24 வயது. சென்ற ஆண்டில் புகைப்படக் கருவிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான் அவன். ஸ்டோர் கீப்பருக்கு உதவியாள் வேலை.
அவன் வேலையில் சேர்ந்த 11-வது வாரம் ராபர்ட் ஈகிள் என்கிற 60 வயது சக தொழிலாளி இறந்துபோனார்.
எப்படி, எதனால் இறந்தார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், அந்த ஃபேக்டரியில் வேறு சில தொழிலாளர்களை வேறுவிதமான நோய் பீடித்தது. சிலர் தலையில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்தன; சிலருக்குத் தற்காலிகமாகக் கை கால் பிடிப்பும் வாதமும் ஏற்பட்டன; வேறு சிலர் வாந்தி எடுத்தார்கள்.
முதலில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.
ஆனால், சில வாரங்களுக்குப் பின், சென்ற நவம்பர் மாதத்தில் இன்னொரு தொழிலாளியும் புதிராக இறந்துபோகவே தொழிற்சாலை மிரண்டது.
அந்தக் கூட்டத்தில் எல்லாரும் அவரவர் கருத்தைத் தெரிவித்துப் பேசினதுபோல யங்கும் பேச வேண்டி வந்தது. யங் எழுந்து பேசினான். எப்படி? ஒரு சாதாரண ஃபேக்டரி தொழிலாளிக்குக் கனவில்கூடத் தெரிந்திருக்க முடியாத வைத்திய பரிபாஷைகளும், ரசாயனங்கள், விஷங்களைப் பற்றிய விவரங்களும் அவன் வாயில் இருந்து சரமாரியாக வந்தன.
யங்கின் 'வைத்திய ஞான’ப் பேச்சைக் கேட்டுத் தொழிலாளர்கள் எல்லாரும் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் சந்தேகம் அடைந்தார். காதும் காதும் வைத்தாற்போல போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்.
போலீஸ் ரகசியமான விசாரணையைத் தொடங்கியது. வெகு சீக்கிரத்திலேயே கிரகாம் யங்கின் ரகசிய அறையை அது கண்டுபிடித்துவிட்டது.
அந்த அறையில், ஒரு மாதத்துக்கு ஒரு பெரிய மருந்துக் கடைக்குப் போதுமான அளவு 'தாலியம்’ பாட்டில்களிலும் டின்களிலும் இருந்தது. பாட்டில்கள் எல்லாம் மிக அழகாக வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்குக் கீழே இருந்த ரகசிய டிராயரில் யங் எழுதிவந்த டைரி ஒன்று கிடைத்தது.
'தாலியம் விஷத்தை மனிதர்கள் மீது பிரயோகித்தால் என்ன விளைவு ஏற்படும்?’ என்பதை யார் யார் மீதெல்லாம் எப்படி எப்படி, எப்போது பரிசோதித்துப் பார்த்தான் என்கிற விவரங்களை எல்லாம் யங் அந்த டைரியில் குறித்திருந்தான்.
அந்த டைரியில் தன் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்தைக்கொண்டு யங் குறிப்பிட்டு இருந்தான்.
தன்னுடைய 14 வயதில் விஷத்தைக் கொடுத்து மூன்று பேரை மேலுலகுக்கு அனுப்பப் பார்த்து இருக்கிறான் யங். அந்த மூன்று பேரும் வேறு யாரும் இல்லை... அவனுடைய தந்தை, சகோதரி மற்றும் பள்ளியில் உடன் படித்த ஒரு மாணவன்.
சிறு வயதில் இது நிகழ்ந்ததனால் யங்குக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெளியில் வந்த பின் அவன் நடத்திய கூத்துதான், போட்டோ தொழிற்சாலையில் அடுத்தடுத்துச் செய்த கொலைகள்.
யங்குக்கு இப்போது கிடைத்திருப்பது, ஆயுள் தண்டனை!இந்தப்பகுதி விகடன் பொக்கிஷம் பழைய அபூர்வ கலெக்ஷன்
1 comments:
ஹா ஹா ஹா...க்ரைம் நாவல்களின் அரசி..! முன்பு படித்த ஞாபகம் அப்படியே இன்னும் இருக்கிறது. விகடன் என்பது மறந்து போய் மஞ்சரி என்ற பத்திரிகையில் படித்ததாக நினைப்பு இருந்தது..இன்று கொழும்பில் விகடன் இன்னும் கிடைக்கவில்லை. இந்த பதிவை பார்த்து ஆவலை அதிகரிக்க வைத்ததுக்கு நன்றி..!
Post a Comment