தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.
அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.
கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?
கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.
2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.
நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.
‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்
.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.
குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.
விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.
குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.
’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.
‘நான் எழுதறேன் சார்…
’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’
‘பரவால்ல சார்…’
ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,
’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.
அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.
‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.
கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.
மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.
அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.
கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.
கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.
நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.
அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.
என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்
. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.
’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.
’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.
அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.
‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.
இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.
என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.
என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.
2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.
’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.
‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.
அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.
’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.
’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.
சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.
அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.
பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.
எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.
எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.
ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.
நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!
கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA
18 comments:
i have read few articles from him, I dont know why but his name inspires more than his articles.
RIP
ஆழ்ந்த இரங்கல்களை நாஞ்சில்மனோ வலைத்தளம் தெரிவித்து கொள்கிறது.
பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன் ஆச்சே அவர்...!!!
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன்.
I have taken a break to appreciate within myself whenever I read Krishna's articles and stories in Kumudam. He certainly was different from other Kumudam writers. His short stories were really interesting, comparable to Sujatha's style. He was also an intellectual as I deduced from his writing and the extent of subjects he handled. Though I noted that he was still with Kumudam, I used to wonder why he went to the background. Seems he was a rebel within the organization. Thanks to Manivannan for a warm eulogy.
Can we know how did Krishna choose to add 'Davinci' to his name? (Obvious, he was impressed by the greatness of Davinci, but there may be something more!)
Pray for Krishna's soul to rest in peace.
-R. J.
தமிழ் எழுத்துழகில் திறமை இருந்தும் பெரிய உயரம் தொடாமல் போன எழுத்தாளர்களுள் ஒருவர் கிருஷ்ணா டாவின்சி ... அவருடைய ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம் ... அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ... பகிர்வுக்கு நன்றி நண்பா ....
வேதனையாக இருக்கிறது.
ஆழ்ந்த அனூதாபங்கள்.
குமுதம் இதழின் நீண்ட நாள் வாசகர்களில் ஒருவன் என்பதால் அவரின் எழுத்துக்களை நான் அறிவேன்! அவரது வாசக ரசிகனும் கூட அவர் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது! அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
அதிர்ச்சியான தகவல்....ஆழ்ந்த அனுதாபங்கள்
மிக வருத்தமான செய்தி.
லெப்டோஸ்பைரோசிஸ் காய்ச்சலால் இளம் வயதிலேயே இறந்தது இன்னும் வருத்தம் அளிக்கிறது.
ஆழ்ந்த அனுதாபங்கள்
கிருஷ்ணா டாவின்சியின் எழுத்துக்களை எத்தனை பேர் படித்திருப்பார்களோ அத்தனை வாசிப்பின் ஒட்டு மொத்தமும் இந்த பகிர்வில் ஒட்டிக்கொண்டுள்ளது.
பகிர்வுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
டாவின்சி அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீண்ட நெடுங்கால குமுதம் வாசகன் என்ற வகையில் நானும் அவரை நன்கு அறிவேன்.
திறமைசாலிகளைக் காவு கொள்[ல்]வதில் சாவுக்கு அதீத ஆசை போலும்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
வேறு யாரவுது எழுதியதை போட்ருக்கலாம் !
(நள்ளிரவில் - கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…?)
இந்த கிருஷ்ணாவும் ,இயக்குனரும் ரொம்ப பண்பான ஆட்கள் போல !
’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.
இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார்.
குமுதத்திற்கு எதிரானவர் என்று இறந்த பிறகு சித்தரிக்க முயல்வது ஏன்?
பத்திரிகை காரர்களுக்கு என்னத்துக்கு இவளுவு காழ்புணர்ச்சி
நம்ப முடியாத சோகம்..
உறவோ நட்போ... புரிதல் கொஞ்சம் சறுக்கினாலும் அங்கு விரிசல் வருவது உறுதியாகிவிடுகிறது....
இருவருக்கிடையே கண்டிப்பாக பிரச்சனைகள் வருவதில்லை.. மூன்றாம் மனிதரின் குறுக்கீட்டால் தான் பிரச்சனைகள் முளைப்பதே...
புரிதலின்மை முதல் படி என்றிருக்கும்போதே எதனால் இப்படி என்று ஆராய்வதை விட்டுவிட்டு ஈகோவையும் விட்டுவிட்டு தாமே முன் சென்று ஏன்பா இப்படி என் மேல் கோபமா? நான் என்ன தவறு செய்தேன் பேசித்தீர்த்துவிடலாமே. நமக்குள் இந்த விரிசல் வேண்டாமே என்று கேட்டுவிட்டாலே போதும்.. மனதில் இருக்கும் அன்பு இந்த விரிசலை எல்லாமே சரி செய்துவிடும்.. புரிதலின்மையை நசித்துவிடும்...
ஹூம்.... சிரமப்பட்ட காலத்திலும்... பிரச்சனைகளை சமாளிக்கின்ற சமயத்தில் கிருஷ்ணா சார் கூடவே இருந்து தோள் தட்டி.... சிறிய புன்னகையூடே தீர்வு சொன்னார் எல்லாவற்றுக்கும்.... ஆனால் வெற்றிகள் கண்டு வாழ்க்கையில் முன்னேறியப்பின்....தொலைபேசி வழியாக எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாலும் மனசில் விரிசல் விட்டது விட்டது தானே? :(
உண்மை... சத்தியமான வரிகள் இவை... நான் இப்போது அனுபவிக்கும் இந்த வலி யாருக்கும் ஏற்படாமல் இருக்க என்று சொல்லி நீங்கள் பகிர்ந்தது அத்தனையும் சத்திய வாக்கு....
க்ருஷ்ணா சாரின் வரிகள்... அவர் மனதைப்போலவே நேர்மையானது...
இன்னமும் கூடுதல் அவரைப்பற்றி நீங்கள் சொல்ல அறிந்தப்போது.. அவரை கடவுள் இத்தனை சீக்கிரம் அழைத்திருக்கவே கூடாது என்று இறைஞ்சுகிறது....
நிறைந்த பிரார்த்தனைகள்.... கிருஷ்ணா சாரின் ஆத்மா எப்போதும் உங்களை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கவும்.. உடன் இருந்து உங்களை வழி நடத்தவும்....
Post a Comment