Sunday, March 18, 2012

புத்திர சோகம்....- சிறுகதை

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataU/unnikris/images/restricted/15-05-2009/babies_108_.jpg 

சரளாவின் இதயத்தில் ஓங்கி ஆணி அடிச்ச  மாதிரி இருந்துச்சு. அப்போ அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த எண்ணங்களின் எதிரொலி. எத்தனையோ இழப்புகளும் அதனால் ஏற்பட்ட சோகங்களும் அவள் மனசை முழுசா ஆக்கிரமிச்சுக்கிட்டு இருந்துச்சு. தன்னை மறந்த நிலைலிருந்த  அவள் நினைவுகளில் நீந்தத்தொடங்கின அன்னிக்கு காலைல அவளது வீட்டில் நிகழ்ந்த அந்த சம்பவம்.


அன்னிக்கு காலைல சரளாவின் கணவன் ரகு ஆபீஸ் போக ரெடியாகிட்டு இருந்தான் .  சரளா கிச்சனில் காலை உணவு ரெடி பண்ணிக்கிட்டிருந்தாள். அப்போ தான் ரகுவின் மூத்த அக்கா புவனா  வீட்டிற்கு வந்தாள். வந்தவள நேரா ரகுவின் ரூமுக்கு போய் ரகுவிடம் பேசிக்கிட்டிருந்தாள். சரளாவின் காதுகளிலும் அந்த பேச்சு விழுந்தது.


”ஏண்டா ரகு, நானும் எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். நீ கொஞ்சமாவது என் வார்த்தையை காதில் வாங்குரியா”


”இப்ப உனக்கு என்னக்கா வேணும் சொல்லு. எதுக்கு இப்ப வந்ததும் வராததுமாக இப்டி என்னை ஆஃபிஸ் கிளம்ப விடாம ஆர்ப்பாட்டம் பண்றே”


”என்னடா இப்படி சொல்லுறே, உன் பொண்டாட்டிக்கு இது வரைக்கும் நாலு முறை கரு தரிச்சது. நாலுமே குறை மாதத்துலயே செத்தே பொறந்திருச்சு. அவளுக்கு ஏதோ குறை இருக்குடா. அதுனால தான் உன்னை இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்றேன். என் மகளுக்கும் திருமண வயசு வந்திருச்சு. அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியாச்சு. பேசாம அவளை உனக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். அவ மூலமாவது உனக்கு ஒரு நல்ல ஆரோக்யமான குழந்தை பிறந்து நம்ம வம்சம் தழைக்கட்டும். நானும் என் கணவரை பறி குடுத்துட்டு நிற்கிறேன். நீ அவளை திருமணம் செய்துகிட்டா நானும் என்னோட இறுதி காலத்தை இங்கயே கழிச்சுடுவேன்“.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்டுவிட்ட சரளா அந்த நிமிசத்திலிருந்தே நிலை குலைந்து போனாள். மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் இமை நிறைந்து வழிந்தது. பொங்கிக்கொண்டு வந்த அழுகையை தன் தொண்ண்டைக்குள்ளாயே  கட்டிப்போட்டு வைத்தாள். மூன்று முடிச்சுகளுக்கு கட்டுப்பட்டவளாய், அன்றைய பகல் பொழுது முழுவதும் ஒரு நடை பிணமாக பல மனப்போராட்டங்களுக்கு நடுவே ஓர் உறுதியான முடிவு கிடைத்தவளாய் தன் கனவுகளுக்கு அன்றிரவே அமைதி கொடுக்க வேண்டும் என காத்திருந்தாள் தன் கணவனின் வருகைக்காக. 

https://www.nhm.in/img/978-81-8368-710-2_b.jpg


எத்தனையோ இனிய இரவுகளை தங்கள் வாழ்க்கை புத்தகத்தில் காவியமாக பதித்த அவர்கள் வாழ்வில் இன்றைய இரவு ஓர் திருப்புமுனையை பெற்றுத்தந்தது. இரவு முழுதும் பலவித கெஞ்சல், கொஞ்சல், அழுகை, சமாதனங்களுக்குப்பின் ரகுவிற்கு இரண்டாவது மணம் முடிப்பது என்றும், சரளா வேறு ஒரு வாடகை வீட்டில் குடிபோவது என்றும் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.


பேசி முடிவு செய்தது போலவே ரகுவுக்கும் புவனாவின் மகள் ஆனந்திக்கும் திருமணமும் இனிதே நிறைவேறியது, சரளாவும் வாடகை வீட்டில் குடியேறினாள்.


2 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் சரளாவின் கைபேசி அதிர்ந்தது. எதிர்முனையில் அவளது கணவனின் குரல் ஒலிக்க, அப்போது அவன் ஆனந்தி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறினான். அதைக்கேட்டு மகிழ்ச்சியின் எல்லைவரை சென்ற அவள் தானும் கருவுற்றிருப்பதை தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள் மட்டுமே மகிழ்ந்து கொண்டாள்.


மாதங்கள் வேகமாக நகர்ந்தன. தலை பிரசவத்திற்காக ஆனந்தி அந்த பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடவுள் நம்பிக்கையை மட்டுமே தன் துணையாக கொண்டிருந்த சரளாவும் அதே மருத்துவமனையில் ரகுவால் சேர்க்கப்பட்டாள்.


எத்தனையோ ஏக்கங்கள், இழப்புகள், ஏளனங்களுக்கு இடையே இப்பிறவியின் பயனை அடைந்தவளாய் ஆழ்கடல் முத்தைப்போல் சரளா ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனந்திக்கோ பெண் குழந்தை அதுவும் தாயின் கருவறையையே கல்லறையாக்கிக் கொண்டு வயிற்றுக்குள்ளேயே இறந்தே பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட சரளா அதிர்ந்து போனாள். 


முன்பு தான் பெற்ற அதே நரக வேதனை ஆனந்திக்கும் நேர்ந்துவிட்டதே என்பதை உண்ர்ந்த அவள் சட்டென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவலாய் தன் 10 வருட தாம்பத்திய வாழ்க்கையின் வரப்பிரசாதமாய் தான் பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தியின் அறைக்கு விரைந்தாள். மயக்க நிலையிலும் ஆனந்தியின் முகத்தில் மலர்ந்திருக்கும் அந்த மகிழ்ச்சி மங்கி விடக்கூடாதென தன் வாழ்வின் ஆதாரத்தை அவள் அருகில் இருந்த தொட்டிலில் போட்டுவிட்டு தன் கண்ணீர் துளிகளையே குழந்தைக்கும் ஆனந்திக்கும் ஆசீர்வாதங்களாய் தந்துவிட்டு அறையினின்றும் வெளியேறினாள்.


இதை கவனித்துக் கொண்டிருந்த ரகுவும் அவனது சகோதரியும் மிகுந்த குழப்பம் அடைந்தவர்களாய் சரளாவிடத்தில் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு, ஏன் இப்படி பன்னுன இந்த குழந்தை தான் உனது கனவு” என்று கேட்டனர்.






http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg
அதற்கு சரளா “ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை உடனே பறி கொடுக்குற புத்திர சோகம் மிகவும் கொடுமையானது, அந்த கொடுமையை நான் ஏற்கனவே நாலுமுறை அனுபவிச்சுட்டேன். அது எனக்கு பழகிவிட்டது, ஆனால் ஆனந்தி அப்படி அல்ல. அவ சின்ன பொண்ணு, அந்த கொடுமையை அவ அனுபவிக்க வேண்டாம். அதை அவ தாங்கிக்கவும் மாட்டா. இந்த குழந்தை அவ குழந்தையாவே வளரட்டும், தூரத்தில் இருந்தே நான் பார்த்து சந்தோசப்பட்டுக்குவேன் “ என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.


சரளா கூறிய அந்த வார்த்தைகளை கேட்டு ரகுவின் சகோதரி புவனாவின் கண்களில் தன் குற்ற உணர்ச்சி கண்ணீராய் வழிந்தது.

5 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

கதை அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கதை நன்று .தொடக்கம் நன்றாக இருந்தது. பிறகு கதை சுருக்கம் சொல்வது போல் அமைந்திருக்கிறது

பால கணேஷ் said...

செந்தில்! நல்ல கதைக் கருவைத் தேர்ந்தெடுத்து அருமையாகக் கதை வடித்திருக்கிறீர்கள். மிக நன்று! உரையாடல்கள் மட்டும் இன்னும் நிறைய வரவேண்டும் என்பது என் ஆலோசனை. (தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்) நிறைய நிறைய சிறுகதைகள் உங்களிடமிருந்து வர இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

raji said...

நல்ல கதைக் கரு