Friday, February 10, 2012

ஆகவே செக்‌ஷன் 302-ன் படி - சிறுகதை -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

கோர்ட் வளாகமே மகளிர் அமைப்புகளாலும், மனித உரிம கழகத்தினராலும் பரபரப்பாக கூச்சலுடன்,  இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டில் ஏற இருக்கும் தணிகைவேலுவுக்காய் காத்திருந்தது.

யார் இந்த தணிகைவேலு ?அவனுக்காக ஏன் இவர்கள் காத்திருக்கிறார்கள்? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கைதானவனா? இல்லை எதாவது பெண்ணின் மானத்தை  காப்பாற்ற போய் ஜெயிலுக்கு போனவனா?

ம்ஹூம் வேறொரு பெண்மீது கொண்ட ஆசையினால் தாலி கட்டிய மனைவியையும், தன் ஒரே வாரிசான 24 வயது மகளை அவள் நிச்சயதார்த்த தினத்தன்று எரித்து கொன்ற கொலைக்காரன்.

அவனை தூக்கில் இட வேண்டிதான் இத்தனை பேரும் சத்தமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

போலீசின் வண்டியிலிருந்து இறங்கும் தணிகைவேலுவை அடிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவனை பாதுகாப்பாய் கோர்ட் வளாகத்திற்குள் கொண்டுவருவதற்குள் போலீஸ்காரர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

நீதிபதி வந்து இருக்கையில் அமரும்வரை அவனை பிய்த்து எடுக்குற சான்ஸ் கிடைக்காதான்னு  எல்லாரும் காத்து இருந்தவங்க நீதிபதி வந்ததும் அமைதியானார்கள்.

நீதிபதி: வழக்கை ஆரம்பிக்கலாம்.

அரசு வக்கீல்: யுவர் ஆனர்,இதோ கொலை குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கும் தணிகைவேலு காதலித்து கல்யாணம் கட்டிக்கிட்டு, 25 வருசம் ஒண்ணா  வாழ்க்கை நடத்திய  மனைவியையும், ஆசையாக வளர்த்த ஒரே மகளையும் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்ததால் அந்த பெண்ணின் நிச்சயதார்த்தன்னிக்கு எரித்து கொலை செய்த கொடூர மனம் கொண்டவன்.

நீதிபதி: இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? அதற்கு சாட்சிகள் இருக்காங்களா?

அரசு வக்கீல்: முடியும், தணிகை வேலுவின் பக்கத்துவீட்டில் இருக்கும் ”கோகிலா”வை விசாரிக்க அனுமதிக்குமாறு வெண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி: சரி, விசாரிக்கலாம்

அரசு வக்கீல்:என்ன நடந்ததுன்னு சொல்லுங்கம்மா.

கோகிலா: சார், அந்தம்மா பேரு தங்கம். பேருக்கேத்த மாதிரி குணத்திலும் தங்கம் சார், அந்த பொண்ணோட பேரு செல்வி. எம்.சி.ஏ படிச்சு, வெளிநாட்டு கம்பெனில வேலை செஞ்சாலும் அடக்கமான பொண்ணு சார். தணிகைவேலு ஐயாவும் ரொம்ப நல்லவர்தான், அக்கம் பக்கம் வீட்டாரோட நல்லா பழகுவாங்க. எல்லா பெண்களையும் தாயா, மகளாதான் டிரீட் பண்ணுவார். இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையலையேன்னு எங்க ஏரியாவுலயே எல்லாரும் பொறாமைப்படுற மாதிரி தான் வாழ்ந்தாங்க.

இதெல்லாம் 3 மாசம் முன் வரைக்கும்தான். குடும்பத்தோட திருப்பதிக்கு போய்ட்டு வரும்போது ஆக்சிடெண்ட் ஆச்சு சார். அப்போ அந்தம்மாவுக்கு பலத்த அடி பட்டு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்து கொஞ்ச நாளில் நல்லபடியா திரும்பி வந்தாங்க.

ஹாஸ்பிட்டலில் அந்தம்மா தங்கியிருந்த சமயத்துல அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நர்ஸ் கூட எதோ கசமுசா ஆகிடுச்சு போல. வாரத்துல ஒரு நாள் , அந்த பொண்ணு ஆபீஸ் போனதுக்கப்புறம் அந்த நர்ஸ் வீட்டுக்கு வரும் சார். ரெண்டு மணி நேரத்துக்கும் மேல இருக்கும். அப்போ அவங்க வீட்டுல கசமுசான்னு சத்தம் வரும். போகும்போது அந்த நர்ஸ் உடை கலைஞ்சு, ஒரு மாதிரியா களைப்பா போகும் சார்.

சம்பவம் நடந்தன்னிக்கு செல்விக்கு நிச்சயதார்த்தம் சார். எல்லாரும் மண்டபத்துக்கு போக ரெடியாகிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் தணிகைவேலு வீட்டுல இருந்தோம். அந்த நர்சும் வந்திருந்தாங்க. நர்சும், தங்கம்மாவும், தணிகைவேலுவும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அந்த ரூமுக்கு போன செல்வியம்மா சத்தமா என்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க. அது ஏசி ரூம். சத்தம்தான் கேட்டுதே தவிர என்ன பேசுறாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரத்துல நர்ஸ்  வெளில வந்து கிளம்பி போய்ட்டாங்க. தணிகைவேலு ஐயா ரூமுக்குள்ள இருந்து வெளிய வந்து மண்ணேன்ணெய் கேன் எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ளாற  போனார். போன கொஞ்ச நேரத்துல திடீர்னு செல்வி அலறுன சத்தம் கேட்டுது. தங்கம்மாவும் அலறும் சத்தம் கேட்டுது. நாங்களெல்லாம் கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போய் பார்த்தா..., செல்வியும், தங்கம்மாவும் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. செல்வி அப்பாவை பிடிச்சு இழுத்துக்கிட்டு இருந்தா..., நாங்க எவ்வளவோ போராடி பார்த்தும் செல்வியும், தங்கம்மாவும்  செத்துட்டாங்க. தணிகை வேலு ஐயாவை மட்டும்தான் லேசான தீக்காயத்தோடு காப்பாத்த முடிஞ்சுது, இதுதான் ஐயா நடந்தது.

அரசு வக்கீல்: நன்றிம்மா நீங்க போலாம். அடுத்து தணிகை வேலுவோட தெரு முனையில  தள்ளு வண்டில துணி அயர்ன் பண்ணும் முத்துவை விசாரிக்க வேண்டுகிறேன்

நீதிபதி: சரி  முத்துவை விசாரிக்கலாம்

அரசு வக்கீல்: முத்து உனக்கு தெரிஞ்சதை சொல்லுப்பா.

முத்து: ஐயா,அந்த நர்சம்மா, ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமை டான்னு மூணு மணிக்கு ஆட்டோவுல வந்து தெருமுனைல இறங்கி யாருக்கோ போன் பண்ணும் சில சமயம் நேரா தணிகைவேலு சார் வீட்டுக்கு போய்டும். சில சமயம் தெருமுனைலயே காத்திருக்கும். நான் என்னடான்னு சில நாள் மண்டையை பிச்சுக்கிட்டது உண்டு. அதற்கப்புறம்தான் தெரிஞ்சுச்சு. செல்வியம்மாவுக்கு ஷிப்ட் முறைல வேலை. செல்வியம்மா போறதுக்காக காத்திருந்துட்டு வீட்டுக்கு போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்.

அரசு வக்கீல்: தணிகைவேலுவுக்கும், அந்த நர்சுக்கும் இடையிலான கள்ள உறவை நிரூபிக்க இந்த இரு சாட்சிகளே போதுமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன். கோர்ட்டுக்கு இன்னும் சாட்சிகள்  தேவைப்பட்டால் சமர்ப்பிக்க தயாராய் உள்ளேன்.  தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் இருந்த ரகசிய உறவும், தணிகைவேலு தன் மகளையும், மனைவியையும் எரிச்சு கொன்றது இப்போதளித்த சாட்சிகளின் வாக்குமூலங்களின் மூலம் தெளிவாகிறது..என்வே குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: மிஸ்டர் தணிகைவேலு, நீங்க அமைதியா இருந்தா எப்படி ?உங்களுக்குன்னு வாதாட எந்த வக்கீலையும் நீங்க நியமிக்கலை. வாயை திறந்து பேசவும் மாட்டேங்குறீங்க. எதாவது சொன்னால்தானே வழக்கை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியும்.?

முதன் முறையாக வாய்திறந்த தணிகைவேலு..., என் மனைவி மற்றும் மகளின் சாவுக்கு முழு காரணமும் நானே. அதனால் என்னை தூக்கில போட்டுடுங்க ஐயான்னு முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

நீதிபதி: தணிகைவேலுவே குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாலும் நீதிமன்றத்திற்கென்று வழிமுறைகள் சிலது  இருக்கு.அதனால அரசே குற்றவாளிக்கு ஆதரவா வாதாட ஒரு வக்கீலை நியமிக்குது. அவர் அடுத்த வாரம் தன் தரப்பு வாதத்தை முன் வைப்பார். அதுவரை கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன்.

அடுத்த வாரம்

தணிகைவேலுவின் வக்கீல்: கணம் நீதிபதி அவர்களே,  எனது கட்சிக்காரரான தணிகைவேலுவின் மீது சாட்டப்பட்ட குற்றம் முற்றிலும் தவறானதாகும். அவருக்கு எதிராக சொல்லப்பட்ட சாட்சிகள் ம் சொன்னவை அனைத்தும் உண்மையானாலும், அவை அனைத்தும் தவறான ரீதியில்  புரிந்து கொள்ளப்பட்டவையே.

நீதிபதி: அவற்றை உங்களால் நிரூபிக்க முடியுமா?

தணிகைவேலுவின் வக்கீல்: முடியும் ஐயா, எனது சாட்சியாக தணிகைவேலுவுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நர்சை முதலில் அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: அனுமதி அளிக்கின்றேன்

தணிகைவேலுவின் வக்கீல்: உங்க பேரு?

நர்ஸ்: என் பேர் ஜானகிங்க 

தணிகைவேலுவின் வக்கீல்: எங்கேம்மா வேலை செய்றீங்க?
நர்ஸ்: இந்திரா நர்சிங்க் ஹோம்ல


தணிகைவேலுவின் வக்கீல்: உங்களுக்கும் அவருக்கும் எப்படி பழக்கமேற்பட்டுச்சு?

நர்ஸ்: தங்கம் ஆக்சிடெண்ட்ல அடிப்பட்டு எங்க ஆஸ்பிட்டலில்தான் சேர்த்தாங்க. அப்போ அவர் பழக்கமானார்.

தணிகைவேலுவின் வக்கீல்: அப்பிடியா, சரி உங்களுக்கும் தணிகைவேலுவுக்கும் ரகசிய உறவு இருந்ததா எல்லாரும் சொல்றாங்களே, அப்படியா?

நர்ஸ்: அப்படிலாம் இல்லை சார்.

அரசு வக்கீல்: அப்புறம் ஏன் அவங்க வீட்டுக்கு போனீங்க. நீங்க  அங்க போகும்போதெல்லாம் சண்டைன்னும், திரும்பி வரும்போது  உடை களைஞ்சு வருவதாக எல்லரும் சொன்னாங்களே? 

நர்ஸ்: நீதிபதி ஐயா, இந்த நேரத்துல உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புறேன். 

நீதிபதி: சொல்லுங்கம்மா.

நர்ஸ்: ஐயா, தங்கத்தை எங்க ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும்போது அவங்க உடம்பை செக் பண்ணோம். அப்போ, அவங்களுக்கு மூளையில புத்து நோய் இருப்பது கண்டுபிடிச்சோம். 

அவங்க அடிக்கடி தலைவலி வந்து அலட்சியபடுத்தி இருக்காங்க.  அதுமட்டுமில்லாம அவங்க 40 வயசுல அடியெடுத்து வைக்குறவங்க வருசத்துக்கு ஒருமுறை உடம்பை ஃபுல் செக்கப் செஞ்சுக்கனும்ன்னு அரசாங்கம் எவ்வளவோ அறிவிப்புகள் செய்யுது.  இருந்தாலும் இப்படி படிச்சவங்களே இப்படி அலட்சியப்படுத்தியதன் விளைவு  நோய் முற்றி போய் சிக்கிச்சை கொடுத்தாலும் பலனில்லாத நேரத்துல இருக்குறது தெரிஞ்சது. 

     முதல்லயே ஃபுல் செக்கப் செய்திருந்தா.., ஆரம்ப கட்டத்துலயே நோயை கண்டுப்பிடிச்சு குணப்படுத்தியிருக்கலாம். பெண்கள் தலவலி, வயிற்றுவலி, மார்பு வலின்னு வந்தால் ஏன் வீண் செலவுன்னு ஆஸ்பிட்டலுக்கு போகாம கைவைத்தியம் செஞ்சுக்குவாங்க. அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுங்களா? பெண்கள் அலட்சியப்படுத்தினாலும் ஆண்கள் அவங்களை வற்புறுத்தியாவது ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போய் காட்டனும் சார்.

சிகரெட், புகையிலை யூஸ் பண்றவங்களுக்குத்தான் புற்று நோய் வரும், மற்ரவங்களுக்கெல்லாம் கேன்சர் வராதுன்னு தப்பான நம்பிக்கை மக்களிடையே பரவுனது வருத்தமான விஷயம்.. 

   அப்போதான் தங்கம் , எனக்கு இருப்பது ஒரே பொண்ணு அவளுக்கு கல்யாணம் கட்டுறவரைக்கும் எனக்கு நோய் இருப்பதை சொல்லாதீங்க. சொன்னால்,என் பொண்ணு மனசொடிஞ்சு போய்டுவாள்ன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டதால யாருக்கும் தெரியாம இந்த நோய் இருப்பதை மறைச்சுட்டோம். அதற்கான ஆதாரம் இந்த ஃபைலில் இருக்கு சார். அவங்களுக்கு வந்த நோய், அதற்கெடுத்த டெஸ்ட்டுங்க, குடுத்த மருந்துங்க, என்னென்னிக்கு குடுத்ததுன்ற விவர்ங்களும் இந்த ஃபைலில் இருக்குங்க.

 நான் வட நாட்டுக்கு குடும்பத்தோட டூர் போனதால் இந்த விசயங்கள் எனக்கு தெரியாம போய்டுச்சு. அதனாலதான் முன்னாலயே வந்து இந்த விவரங்களை சொல்லியிருப்பேன் சார்.

  நோயோட தீவிரத்தால அவங்களுக்கு கண்பார்வை மங்கல், ஞாபகமறதி நோய்லாம் வர ஆரம்பிச்சது. அடிக்கடி ஹாஸ்பிட்டலுக்கு வந்து பார்த்துக்கிட்டால் பொண்ணுக்கு தெரிஞ்சு போய்டுமோன்னு என்னை வீட்டுக்கே வரச்சொல்லி எங்க டாக்டர் அட்வைசில நான் டிரீட்மெண்ட் எடுதேன். இதான் நடந்ததே தவிர அவங்கள்லாம் சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை சார்.

நீதிபதி: தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் தவறான உறவு இல்லைன்னு தெள்ளத்தெளிவா புரிஞ்சுடுச்சு. அப்புறம் ஏன் ரெண்டு பேரையும் கொலை பண்ணார். மிஸ்டர் தணிகைவேலு இப்பவாது  சொல்லுங்க அன்னிக்கு என்ன நடந்தது.

தணிகைவேலு: சார், அன்னிக்கு நான், நர்ஸ் ஜானகி, என் மனைவிலாம் பேசிக்கிட்டு இருந்ததை என் பொண்ணு எப்படியோ கேட்டுட்டா. அவளுக்கு அவ அம்மாவோட நோய் தெரிஞ்சு போச்சு. இந்த நிலைமைல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி என் பொண்ணு ரொம்ப பிடிவாதம் பிடிச்சா. இப்படிலாம் பிடிவாதம் பிடிச்சால் நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு  மண்ணென்னெய் கொண்டுவந்து என்மேல ஊத்திக்கிட்டு  மிரட்டினேன்.

    என்னாலதானே இவ்வளவு பிரச்சனை நான் செத்து போய்டுறேன் ந்னு என் மனைவியும் தன் மேல ஊத்திகிட்டு பத்த வச்சுக்கிட்டா. காப்பாற்ற போன என் மகளையும் தீப்பிடிச்சுடுச்சு. ஆனால், அந்த தீக்கும் என் மேல் என்ன கோவமோ தெரியலை. என்னை பொசுக்கலை. இப்பவும் நான் வாயை தொறந்து சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் ஒரு நல்ல பொண்ணு மேல களங்கம் வந்துடக்கூடாதேன்னுதான் இப்பவாச்சும்  சொல்றேன். என்னை தூக்குல போட்டுடுங்க. என் குடும்பத்தோட நானும் போய் சேர்ந்துடுறேன் ப்ளீஸ்ன்னு கதறி கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தார்..,


நீதிபதி: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அறிந்தப்பின் தணிகைவேலுவின் மேல் எந்த குற்றமுமில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக அவரை தண்டிக்க வேண்டியுள்ளது. அவர், காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு வருடம்  சேவை செய்ய வேண்டுமென தீர்ப்பு வழங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு பின்..., 
தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே போக மனசில்லாம, புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை செய்தும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கதை சொல்லி, அவரக்ளுடன் விளையாடி மகிழ்வித்து வயதானவர்களுக்கு ராமாயாணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படித்து காட்டியும், தன் சொத்து முழுதும் அம்மருத்துவமனைக்கு எழுதி வைத்து  அவர்கள் உருவில் வாழும் தன் மகளுடனும் மனைவியுடனும் சந்தோசமாய் தன் இறுதி நாளை கழிக்கின்றார்.

10 comments:

selvasankar said...

twistoda , messagum sollirukkenga... great sir

காங்கேயம் P.நந்தகுமார் said...

பாசத்தின் வெளிப்பாடு, நோய்க்கு உதவும் இரக்க குணம், என செம கலக்கல் கதை

jeganjeeva said...

நல்லா இருக்கு. கதையின் முடிவு அருமை.

Anonymous said...

கதை ந்ல்லா இருக்கு,

கேரளாக்காரன் said...

Soopper thala

Unknown said...

கதை நல்லா இருக்கு...நெடு நாள் கழித்து சிபியிடம் இருந்து ஒரு நல்ல விச்யம் வெளிய வந்து இருக்கு...நன்றிகள் சொல்லவேண்டியது உடான்ஸ் மற்றும் நேசம் அவர்களுக்கு என்று நினைக்கிரேன்!

The Chennai Pages said...

கிளப்பிட்டீங்க சிபி

நாய் நக்ஸ் said...

வாழ்த்துக்கள்....
சூப்பர் சிபி....அருமை...

இப்படிக்கு டேம்ப்லாடே கமெண்ட் போடுவோர் சங்கம்....

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அருமையான விழிப்புணர்வூட்டும் கதை!இந்தக் கதையைப் படிக்கும் ஒருவராவது புற்று நோயின் கொடூரம் அறிந்து,தனக்கோ,தன் சார்ந்தவர்களுக்கோ பரிசோதனை மேற்கொள்ள தூண்டினாலே பாதிப் பேருக்கு உயிர்வாழும் சான்ஸ் கிட்டும்,வாழ்த்துக்கள்!!!!

ராஜி said...

விழிப்புணர்வு ஊட்டும் கதை. ட்விஸ்ட்டுலாம் வெச்சு கலக்கியிருக்கீங்க