Tuesday, July 26, 2011

தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்



 1. '' 'சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?'' 

''அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி  போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும்கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை!''



'2. 'மறைக்காமல் சொல்லுங்கள்... தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?'' 

''வண்ண நிலவன். அவரது 'எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது!''



3''எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?'' 


''குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.

எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும்  வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன,  சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது!''



4. ''ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?'' 

''இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்?
ஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி... அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது?

எழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து  கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.


அதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, நுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க  வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது!''

5.''உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது?'' 

''மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.

யாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.
மழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், 'இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் 'வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். 'ஒரு ஆள்’ என்று சொன்னேன். 'கையில் பணம் இருக்கிறதா?’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.

நான், 'என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.


'என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், 'அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, 'இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.

ஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது!''  

6.''எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..?'' 


''இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.

கண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்... அதன் மகத்துவம் புரியும்!''


7.''நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ?'' 

''எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.
ஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே!
மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள்! வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்!''


8.''குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன?'' 

''கதை கேட்பது, கதை சொல்வது இரண்டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.
இன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று  கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.  

படித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.

குழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.

கதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்!


நம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்!''

9.''உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார்? ஏன்?'' 

''டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார்,  கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்!''

நன்றி - விகடன்

16 comments:

சக்தி கல்வி மையம் said...

பதிவ திரட்டில கூட இனக்காம.. ஓனர் எங்க போனாரு?

Unknown said...

அடுத்த கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

”தளிர் சுரேஷ்” said...

அண்ணே வணக்கமுன்னே!

”தளிர் சுரேஷ்” said...

விகடனில் படித்தாலும் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அருமையான தொகுப்பு

R.Puratchimani said...

நல்ல பதிவு,
ஞானியின் கட்டுரைகளை ரொம்ப நாளா காணோமே, கொஞ்சம் போடுங்க

Unknown said...

thanks for sharing brother!

Angel said...

Thanks for sharing.

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு. நன்றி சிபி

செங்கோவி said...

எஸ்.ராவும். அருமையான பேச்சாளர் தான்!

Unknown said...

தஸ்தாயெவ்ஸ்கி என நீளும் எழுத்தாளர்களின் பட்டியலை ஒழுங்கா உச்சரிக்கவே எனக்கு ஒரு நாள் ஆகும் போல!!நல்ல பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஓகே....பகிர்வுக்கு,

ராஜி said...

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் எஸ். ராதாகிருஷ்ணனும் ஒருவர். அவர் பேட்டியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

F.NIHAZA said...

எழுத்தாளர்கள் பற்றிய தேடல்கள்
எழுத்தாளர்களிடையே..எப்போதும் உண்டென்பதை மறுக்கமுடியாதில்லையா?

அருமையான பதிவு...

பகிர்வுக்கு நன்றி...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எம் ஆர் ராதா அவர்கள் மலேசியப் பேச்சுப்பற்றிய கூற்றுக்கள் மிக உண்மை.அப்போதே அவர் இருந்த சினிமாவையே அவர் செய்த கிண்டல், அபாரம்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

அருமையான ஒரு பேட்டி, பல வளர்ந்து வரும் பதிவர்களுக்கு, எழுத்தாளர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவு,
ராமகிருஷ்ணன் அண்ணாவின் பேட்டியில்...
மெய் சிலிர்க்க வைத்த நிகழ்வைப் படித்ததும், ஒரு கணம் அச்சத்தில் உறைந்து விட்டேன்.

பேட்டி முடிவடையவில்லை என்று நினைக்கின்றேன், ஒன்பது கேள்விகளோடு, ஒரு பினிஷிங் இன்றி முடித்து விட்டார்கள். அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

முன்பனிக்காலம் said...

விகடன் பேட்டியில் பின்நவீனத்துவம் உட்பட சில இசங்களுக்கு அவர் கொடுத்திருந்த விளக்கம் வழக்கமாக சில எழுத்தாளர்கள் கொடுப்பது போல தலை சுற்ற வைக்காமல் எளிமையாக இருந்தது. ( சாரு நிவேதிதா கேட்டிருந்த கேள்வியை போடாமல் விட்டு விட்டீர்களே..!?! அடுத்த பதிவில் வருமா? )