Saturday, July 31, 2010

ஆறாவது வனம்-சினிமா விமர்சனம்

 மகாபாரதத்தில் "ஆறாவது வனம்' அத்தியாயம், வனவாசம் மேற் கொள்ளும் பாண்டவர்கள் அரக்கர் களையும், ராட்சசர்களையும் எப்படி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதை விவரிக்கிறது. அது போலவே காதலர்கள் சந்திக்கும் சோதனைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை படத்தின் கதை

.
காதலர்களாக புதுமுகங்கள் பூஷன்குமார் மற்றும் வித்யா நடித்துள்ளனர். புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் புது டைரக்டர்கள் படம் தொடங்கியதும் நேரடியாக கதைக்கு வந்து விடுவது நல்லது.சஸ்பென்ஸை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஓவராக சீன் போட்டால் பார்வையாளர்களுக்கு சலிப்பு வந்துவிடும்.
இந்தப்படத்தின் ஓப்பனிங்கில் குடைக்குள் மழை ஆர்.பார்த்திபன் மாதிரி மன நிலை சரி இல்லாதவராக ஹீரோ வரும்போது கொட்டாவி வருகிறது.சட்டுபுட்டென கதைக்கு வராமல் 18 நிமிடம் போரடித்து ஓப்பனிங்கில் கோட்டை விட்டு விட்டார்கள்.
ஹீரோ ஒரு ரவுடி.(ஆரம்பிச்ட்டாங்கப்பா),லோ பட்ஜெட் அந்நியன் மாதிரி அக்கிரமக்காரர்களை ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் முகமூடி போட்டுக்கொண்டு அஜித்தை துரத்துவாரே,அது போல ஒவ்வொரு ரவுடியையும் மாஸ்க் போட்டு தன் அடையாளத்தை மறைத்து தாக்குபவர்.

ஹீரோயின் வித்யா அந்தஊர்லயே பெரிய பணக்கார வீட்டுப்பொண்ணு(என்ன ஒரு நவீன சிந்தனை)
நல்லா ஷோக்கா இருக்கற அந்தப்பொண்ணு கிராக்கா சுத்திட்டு இருக்கற ஹீரோவை லவ் பண்ணுது, (அடடே,இங்கே ஒரு ஆச்சர்யக்குறி).
ஹீரோயினிக்கு ஒரு முறை மாமன்.அவர் தான் படத்தில் வில்லன் என்பதை நாம் யூகிக்கா விட்டால் தமிழ்ப்பட பாரம்பர்யமே நமக்கு தெரிந்திருக்கவில்லை என அர்த்தம்.
ஹீரோ,ஹீரோயினைப் பிரிக்க வில்லன் என்ன செய்யறார்?ஹீரோ இறந்துட்டதா ஹீரோயினை நம்பவைக்கிறார்,ஹீரோயின் இரந்துட்டதா ஹீரோவை நம்பவைக்கிறார்.படம் பார்க்கும் ஆடியன்ஸை டைரக்டர் வெம்ப வைக்கிறார்.
க்ளைமாக்சில் உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் படத்தில் வருவது போல் ஊர் மக்கள் அனைவரையும் விருந்து வெச்சு அதுல விஷ மருந்து வெச்சு கொல்றார்.(அவங்க என்னய்யா தப்பு பண்ணாங்க?).டைரக்டர் 2 மணி நேரம் நம்மை கொல்றார்.
முதல் படம் என்ற அளவில் ஹீரோ ஓகே தான்.ஆனால் சண்டை காட்சிகளில் முகத்தை அவ்வளவு இறுக்கமாக வைத்து ஓவர் சீன் போட்டிருக்க த்தேவையே இல்லை
பல இடங்களில் வசனகர்த்தா உள்ளேன் ஐயா சொல்கிறார்.
”மலர் செத்துட்டா”       “அவ இன்னும் வாழவே இல்லையே”
இந்த காலத்து பொண்ணுங்க குத்த வெச்சு உக்காந்ததும் கூட்டாளி தேட ஆரம்பிச்சிடறாங்க
காதல் ஒரு தீராத வியாதி
மேலே சொன்னதெல்லாம் சில சாம்ப்பிள்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல சூர்யா 100 மலர்களோட பெயரை வரிசையா சொல்ற மாதிரி இதில் ஹீரோ நாட்டில் இருக்கற எல்லா ஜாதிப்பெயரையும் ஒப்பிக்கிறார்(ஷ் ஷ்  அப்பா முடியலை)
சுமாரான கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் எல்லாம் ஏதோ கல்யாணத்துக்கு போவது மாதிரி எப்போதும் பட்டு பாவாடை,தாவணியுடன் அலைவது டைரக்டர் பாரதிராஜா படங்களை எல்லாம் பார்த்ததே இல்லையோ என கேட்க வைக்கிறது.
அதே போல் வீடுகளை செட்டிங்க் போட்டு எடுத்தவர்கள் புது ஓடுகள் போட்டு அப்படியே செட்டிங்க்ஸ் என உள்ளங்கை நெல்லிக்கனி போல்,தாமரைக்கனி அம்மா மோதிரம் போல் பட்டவர்த்தனமாய் காட்டிக்கொடுப்பதை தவிர்த்திருக்கலாம்.
காமெடியனாக் வரும் கண்டக்டர் கேரக்டர் மட்டும் ஒரு ஆறுதல். ஃபிகருங்க கூட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வரும்போது அவரோட ஆள் மட்டும் கலரில் தெரிவதும்,மற்ற பெண்களெல்லாம் ஒயிட் & பிளாக்கில் தெரிவதும் ரசிக்க வைக்கிறது.வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே என பேக்ட்ராப்பில் பாட்டு வருவதும் அருமை.
பல கடி ஜோக்குகளும் உண்டு.
”சீட்டை சில்லறை பண்ணி உட்காரு.”
அப்படின்னா?
சேஞ்ச் பண்ணு

“மோதரமா?
என்ன மோதிப்பாத்துடலாமா?
அய்யோ அண்ணே ,கைல என்ன மோதிரமானு கேட்டென்

பாக்கி வந்துடுமா?
என் சம்சாரம் பாக்கியலட்சுமி வந்தா உனக்கென்ன?வர்லைனா உனக்கென்ன?
சில்லறை வந்தாச்சானு கேட்டேன்
அப்போ என்னை சில்லறைனு சொல்றியா?

இதென்ன புள்ள... தாயத்தா? தங்கமா இருந்தாகூட வெச்சு சரக்கடிக்கலாம்

காதலர்கள் ஊரை விட்டு ஓடும்போது வில்லன் க்ரூப் பஸ் ஸ்டேண்ட்களில் தேடும் சீன் இனி வைக்கக்கூடாது என தடையே போடலாம். போரடிச்சுடுச்சுடா சாமி.
பாட்ஷா ரஜினி மாதிரி கிணற்றில் இருக்கும் பக்கெட்டை கயிற்றோடு எடுத்து 50 பேரை ஹீரோ காலி பண்ணுவது அலப்பறை ரகம்.
ரயில் தண்டவாளத்தில் ஒரு காதல் ஜோடி தற்கொலை பண்ணிக்கொள்ளும் சீன் பதைபதைக்க வைக்கும் அளவு படம் பிடிக்கப்பட்டுள்ளது.(அது ஒரு உண்மைச்சம்பவமாம்.)
அக்கா அக்கா பாட்டு செம டப்பாங்குத்து.அந்தப்பாட்டு வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அனைவரும் தலையை விரித்துப்போட்டு ஆட வேணுமா?
ஹீரோ பல காட்சிகளில் ராஜ்கிரண் மாடுலேஷனில் பேசுகிறார்(ஒரிஜினலையே தாங்கிக்க முடியலை.இதுல இமிட்டேட் வேறயா?)
க்ளைமாக்ஸில் ஹீரோயின் ஏதோ முக்கியமான வசனம் பேசறார்னு தெர்யுது.ஆனா பின்னணி இசை முன்னணில வரனும்னு நினைச்சு ஓவெர் சவுண்ட் வெச்சு அதை அப்படியே அமுக்கிட்டாங்க.

க்ளைமாஸ் காட்சி படமாக்கப்பட்ட லொக்கேஷன் அருமை.சுற்றி வனாந்திரம்,நடுவே பெரிய ஓடை.
டைரக்டர் கதையை வித்தியாசமாக சொல்ல முயன்று இருக்கிறார்,அது பாதிக்கிணறுதான் தாண்டி இருக்கு.
ஆறாவது வனம் ஆறு நாள் எல்லா ஊருலயும் ஓடுனாலே அதிசயம்.
பி.கு-வழக்கமா படத்துல லிப் டூ லிப் காட்சி இருந்தா அதுக்கு டைரக்டர் ஒரு அட்டகாசமான விளக்கம் சொல்வாரு.படத்தோட கதைக்கு அந்த காட்சி ரொம்ப அவசியம்.அதான் வெச்சேன்.ஆனா இந்தப்ப்டத்துல கிஸ் சீனுக்கான லீட்-ஹீரோவும் ,ஹீரோயினும் பேசிட்டு இருப்பாங்க,அப்போ வில்லன் குரூப் வந்துடும்.உடனே குடும்பத்து குத்து விளக்கான ஹீரோயின் பொண்ணு ஹீரோ வாயை தன் வாயால அடச்சுடும்,.இந்த சீனை யோசனை பண்ணுனதுக்கே டைரக்டருக்கு ஒரு அவார்டு கொடுக்கணும்.

Friday, July 30, 2010

குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-


இந்த வாரக் குமுதம் இதழில் ஏன்  ‘ஓ’ பக்கங்கள் இல்லை
என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி,
மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.
காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்.


கடிதம் 1 :


அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு


வணக்கம்.


சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்
மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு
வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன்.


இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணைய
தளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிட
இயலாது என்று நீங்கள் கூறியதாக ஆசிரியர் குழுவிலிருந்து டாக்டர் திரு மணிகண்டன்
இன்று மாலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இது எனக்கு உடன்பாடானதல்ல.
குமுதத்தில் வெளிவரும் எல்லாமே ( அரசியல், சினிமா கிசு கிசு செய்திகள் உட்பட)
தங்கள் வசம் ஆதாரங்கள் இருப்பதால்தான் வெளிவருகின்றன என்று இப்போது அறிவது
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.


என் கட்டுரையில் சவுக்கு இணையதளத்தில் சில முக்கியமானவர்களைப் பற்றி
குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றுதான் நான் எழுதியிருக்கிறேனே தவிர,
அந்த காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
அந்த இணையதளம் ஒளிநகல்களை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டபோதும் நான்
பெயர்களைக் குறிப்பிடவில்லை. அந்த செய்திகள் எல்லாம் உண்மையாக
இருக்கும்பட்சத்தில் நம் கவலைக்குரியவை என்றே நான் எழுதியிருக்கிறேன். அந்த
இணையதளத்தின் மொழி நடை எனக்கு உடன்பாடானதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இதை விடப் பொறுப்பாக ஒரு விமர்சகன் எழுத முடியாது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நான் என்  ‘ஓ’ பக்கங்களை குமுதம் இதழில்
எழுத விரும்பவில்லை. எந்த முன் தணிக்கையும் இல்லாமல், என் கருத்துச்
சுதந்திரத்துக்கு மதிப்பளித்து நான் எழுதியவற்றை நீக்காமல், மாற்றாமல்,
முழுமையாக வெளியிடும் சூழலில் மட்டுமே என்னால் எழுத முடியும். தங்கள் இதழின்
தேவைகளுக்காக என் 35 ஆண்டு கால வாழ்க்கை, தொழில் நெறிகளில் நான் சமரசம்
செய்துகொள்ள இயலாது.


இப்போது தங்களிடம் இருக்கும் என் கட்டுரையை முழுமையாக வெளியிட இயலாதென்றால்,
அதில் எந்தப் பகுதியையும் வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில்  ‘ஓ’ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக என் பத்தியை வெளியிட்டு லட்சக் கணக்கான
வாசகர்களிடம் என் கருத்துகளை கொண்டு சேர்த்தமைக்காக உங்களுக்கும் இதழின்
ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி.


பிரிவோம். சந்திப்போம்.
அன்புடன்
ஞாநி
26 ஜூலை 2010
மாலை 6.30 மணி
-----------------------


-----
கடிதம் 2:


*திரு ப்ரியா கல்யாணராமனுக்கு ஜூலை 17,2010 காலை 11.35 க்கு அனுப்பிய
மின்னஞ்சல் விவரம்: *


அன்புள்ள ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கு


வணக்கம்


தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என் ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள்
அலுவலகத்தின் குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக
அமைந்துள்ளது.  தி.மு.க, ஆட்சி, அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த
பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று
வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது.ஓரிரு வாரங்களில் நிலைமை
சரியாகிவிடும் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி வந்தீர்கள். மூன்று
மாதங்களாகியும் நிலைமை அவ்வாறே உள்ளது.


இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக
முதல்வர் அறிவித்தது பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக்
தெரிவித்திருக்கிறீர்கள். இது எனக்கு உடன்பாடானதல்ல.


எனவே முழு சுதந்திரத்துடன் எழுதும் வாய்ப்பில்லையென்றால் நான் குமுதத்தில்  ‘ஓ’
பக்கங்களைத் தொடர்ந்து எழுத விரும்பவில்லை. இப்போது தங்களிடம் இருக்கும் என்
கட்டுரையையும் முழுமையாக வெளியிட இயலாதென்றால், அதில் எந்தப் பகுதியையும்
வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில் ஓ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இதுவரை எனக்கு நீங்களும் உங்கள் அலுவலக நண்பர்களும் அளித்துவந்த ஆதரவுக்கும்
ஒத்துழைப்புக்கும் என் நன்றி.


அன்புடன்
ஞாநி
-------------